தனித்து விடப்பட்ட உணர்வு வேண்டாம்!
'பார்க்கின்சன்ஸ்' நோய் பாதித்தவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் தருவதற்காக, 10 ஆண்டுகளுக்கு முன் பரிவர்தன் என்ற அமைப்பை ஆரம்பித்தோம். நம் நாட்டில் அதிகம் பாதிக்கும் நரம்பியல் பிரச்னைகளில், பார்க்கின்சன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனாலும், இதை எப்படி கையாள்வது; அறிகுறிகள் என்ன? மருந்து சாப்பிட்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் வரும் என்பது தெரிவதில்லை. இந்த நோய் குறித்து விளக்குவதே, எங்கள் முன் இருக்கும் பெரிய சவால். காரணம், பார்க்கின்சன்ஸ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கேற்பவே பயிற்சிகளும் சிகிச்சையும் தர வேண்டும்.பாதித்தவரை முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து, தனி நபரின் தேவைக்கு ஏற்ப என்ன மாதிரியான உதவிகள், தெரபி தேவை என்பதை தெரிந்து, அதனடிப்படையில் குறுகிய கால, நீண்ட கால தெரபிகளை முடிவு செய்கிறோம். இவற்றில், பிசியோதெரபி, யோகா, பேச்சுப் பயிற்சி, நடனப் பயிற்சி, கவுன்சிலிங் என்று இடம் பெறுகின்றன.இவை தவிர, நரம்பியல் டாக்டர்களிடம் நேரடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதற்கும் உதவி செய்கிறோம். நேரடியாக வந்து பயிற்சி பெற முடியாதவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக ஆலோசனைகள் தருகிறோம். இதற்காகவே, 'சப்போர்டிவ் கேர் சென்டர்' என்ற அமைப்பு சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது. முன்கூட்டியே பதிவு செய்து, எல்லா தெரபிகளையும் இலவசமாக பெறலாம். தெரபிகள் கொடுத்த மூன்று மாதங்களுக்கு பின்னர் முன்னேற்றம் உள்ளதா; இல்லை என்றால் அடுத்து செய்ய வேண்டியது பற்றி ஆலோசித்து, அதற்கேற்ப முடிவு செய்யப்படும்.இது தவிர, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்கிறோம். இது, அவர்கள் சந்திக்கும் சவால்களை பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கிறது. இந்த சந்திப்பின் போது, தெரபிஸ்டுகள், டாக்டர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவர்.பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு இலவசமாக மருந்துகள் தருகிறோம். மையத்திற்கு வர முடியாதவர்களுக்கு, வீட்டிற்கே சென்று தேவையான அனைத்தையும் செய்கிறோம். பார்க்கின்சன்ஸ் பாதித்த எந்த குடும்பத்தினரும், தனித்து விடப்பட்டுள்ளோம்; எங்களுக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்கக்கூடாது.பார்க்கின்சன்ஸ் தவிர, 'ஸ்ட்ரோக், செரிபிரல் பால்சி, மல்டிபிள் சிரோசிஸ்' என்று எல்லாவிதமான நரம்பியல் பாதிப்பிற்கும் அனைத்து தெரபிகளையும் எடுத்துக் கொள்ளலாம்.சுதா மெய்யப்பன், நிறுவனர்,பரிவர்தன் அமைப்பு, சென்னை96000 52531parivathanforparkinsons@gmail.com