உள்ளூர் செய்திகள்

டி.பி., பாதிப்பு இருந்தால் குழந்தைகளுடன் தூங்காதீங்க...!

என் தந்தை, திடீரென ரத்தமாக வாந்தி எடுத்தார். டாக்டர் பரிசோதனையில், நுரையீரலில், 'வைரல் ஹீமோரபிக் பீவர்' உள்ளது, தெரிய வந்தது. அதற்கு என்ன பொருள்?நுரையீரலில் ஏற்படும் பல பிரச்னைகளில், இப்படி ரத்தம் வர வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, பன்றிக் காய்ச்சலில் கூட, இது போல ரத்தம் வரும். வைரஸ் நோய் தொற்று, நுரையீரலை பாதித்து, ரத்தம் வருவதை இவ்வாறு கூறுவர். இந்நோய்க் கிருமிகள், இரு நுரையீரலையும், எல்லா இடங்களிலும், சில சமயங்களில் பாதிக்கிறது. அதுபோன்ற சமயங்களில், ரத்தம் அதிகமாக வாய்வழியே வெளியேறும். ஏதேனும் ஒரு இடத்தில், ரத்தக்கசிவு இருந்தால், அதை, எளிதில் சரி செய்து விடலாம். நுரையீரலில், முழுவதும் ரத்தக் கசிவாக இருந்தால், சரி செய்வது கடினமே. இதற்கு, சரியான மருந்துகளை, உடனடியாகக் கொடுத்தால் குணப்படுத்த இயலும்.என் வயது, 25. இரு குழந்தைகள் உள்ளன. ஒரு மாதத்திற்கு முன், டி.பி., இருப்பதாக அறிந்தேன். மாத்திரை எடுத்து வருகிறேன். நான், என் குழந்தைகளுடன் துாங்கினால், அவர்களை பாதிக்குமா?'மைக்கோபாக்டீரியம் டியூபர்கியூள்' என்னும், டி.பி., நோய்க்கு காரணமான நோய் கிருமி, நாம் இருமும் போது, காற்றின் வழியே, ஒருவரிடம் இருந்து, மற்றொருவரிடம் பரவக் கூடியது. நாம் பகல் பொழுதில் இருமும் போதோ, தும்மு ம்போதோ கைக்குட்டை அல்லது துண்டை உபயோகிப்போம். ஆனால், இரவில், அவற்றை உபயோகிப்பதில்லை. அதனால், இரு மாதங்கள் வரை, குழந்தைகள் அருகில் உறங்க வேண்டாம். அது வரை, தனி அறையில் உறங்குவதே நல்லது. ஏனெனில், நீங்கள், இரவில் இருமும் போது இந்நோய், குழந்தைகளையும் தாக்க வாய்ப்புள்ளது. 2 மாதங்களுக்குப் பிறகு, சளிபரிசோதனை செய்து, சளியில், நோய்க் கிருமி இல்லை என்பதை உறுதி செய்து, பின், குழந்தைகளுடன் தூங்கலாம்.என் மகனுக்கு இளைப்பு இருக்கிறது. மருந்து எடுத்து வருகிறான். பள்ளிக்கு, 8 கி.மீ., துாரம், பஸ்சில் செல்கிறான். அவனுக்கு, இளைப்பு அதிகமாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?பஸ்சில் செல்லும் போது, குளிர்ந்த காற்றை சுவாசிப்பதால், இளைப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. ஆனால், பள்ளிக்குச் செல்லாமல் இருக்க முடியாது. பனிக் காலத்தில், இளைப்பு தொந்தரவு அதிகமாகாமல் இருக்க, சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். பஸ்சில், ஜன்னல் ஓரம் அமராமல், நடுவில் அமர்வது, காதில், குளிர்ந்த காற்று போகாமல், 'ஸ்கார்ப்' அணிந்து கொள்வது, பைக்கில் செல்லும் போது, குழந்தையை, முன்புறம் அமர்த்தாமல் இருப்பது போன்றவற்றால், பயணத்தின் போது ஏற்படும் இளைப்பை, கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதிகமான குளிர் காற்று படாமல், மித வெப்பநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.டாக்டர் எம். பழனியப்பன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்