உள்ளூர் செய்திகள்

"தேர்வில் தோற்றால் வாழ்வில் தோற்றதாக அர்த்தமில்லை

தேர்வு தோல்வியால், மாணவர்களின், ஓராண்டு வீணாகக் கூடாது என்பதால், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பொது தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு, உடனடியாக, மறுத்தேர்வு நடத்தப்படுகிறது. இருப்பினும், தேர்வு தோல்வியால், வாழ்க்கையே சூனியமாகி விட்டது என எண்ணி, பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும் போது, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவங்கள், ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கின்றன.பிள்ளைகள் மீதான பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு, தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் இடையே உண்டாக்கப்படும் ஒப்பீடு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, விடலைப் பருவத்தில், மாணவர்களுக்கு மனரீதியாக ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, வீட்டிலோ, வெளியிலோ, சரியான ஆலோசகர்கள் அமையாதது, காதல் தோல்வி, குடும்ப பிரச்னை போன்ற காரணங்களால், தற்கொலை செய்து கொள்வோர் முன் உதாரணங்களாக தெரிவதே, மாணவர்கள் தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.தற்கொலை எண்ணத்தில் இருந்து மாணவர்கள் விடுபட, வாழ்வில் வெற்றி பெற, படிப்பு ஒரு வழிகாட்டி தான்; தேர்வில் தோல்வியுற்றால், வாழ்வில் தோற்றதாக அர்த்தம் இல்லை என்பதை, மாணவர்கள் முதலில் உணர வேண்டும்.அரசாங்கத்தில் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் பெரும்பாலோர், முதல் முயற்சியிலேயே அத்தேர்வில் வெற்றி பெறுவதில்லை என்பதையும், மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ். சுவாமிநாதன், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 'விப்ரோ' மென்பொருள் நிறுவன உரிமையாளர் அசிம் பிரேம்ஜி, தொழிலதிபர் அனில் அம்பானி என, தங்களது விடாமுயற்சியுடன் கூடிய உழைப்பால், சாதாரண நிலையில் இருந்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களை, முன்னுதாரணமாகக் கொண்டு, மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற முயல வேண்டும்.தங்கள் பிள்ளைகள், மருத்துவம், பொறியியல் என, குறிப்பிட்ட படிப்புகளை மட்டும் தான் படிக்க வேண்டும் என, வற்புறுத்தாமல், அவர்களின், ஆர்வம், திறமைக்கு ஏற்ற படிப்புகளை படிக்கும் வாய்ப்பை, பெற்றோர், அவர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். வளைகுடா நாடுகளில் உள்ளதைப் போல, மாணவர்களின் தனித் திறனை கண்டறிய, பள்ளிகளில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவற்றின் மூலம், பன்முக திறமைக் கொண்ட இளைய சமுதாயம் அமைவதுடன், விரும்பத் தகாத தற்கொலைகளும் தவிர்க்கப்படும்.டாக்டர் ஆனந்த் பிரதாப், மனநல மருத்துவர்,சென்னை மருத்துவக் கல்லூரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்