கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நம்பிக்கை காட்டும் ஒளிக்கதிர்!
மருத்துவப் படிப்பை முடித்த பின், அறுவை சிகிச்சை சிறப்புப் பயிற்சிக்காக வெளிநாடு சென்றிருந்தேன். அங்கிருந்த மருத்துவமனைகளில், கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முறையாக சிகிச்சை தரப்படுவதைப் பார்த்தேன். கேன்சர் சிகிச்சை முடிந்த பின், குழந்தைகள் முழுமையாக குணம் அடைவதையும் பார்க்க முடிந்தது. பெரியவர்களை விடவும், குழந்தைகள் கேன்சரால் பாதிக்கப்பட்டால், முறையான சிகிச்சை தரும் போது, 90 சதவீத குழந்தைகள், முழுமையாக குணம் அடைந்து விடுகின்றனர். நம் நாட்டிற்கு வந்த பின், இது பற்றி ஆராய்ந்த போது, கேன்கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், 40 சதவீதம் பேர் தான் உயிர் பிழைக்கின்றனர் என்று தெரிந்த போது, அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு என்ன காரணம் என்று யோசித்தபோது, பொருளாதார வசதி இல்லாததால், கேன்சர் சிகிச்சையை முழுமையாக தர முடிவதில்லை என்று தெரிந்தது. காஞ்சி மடத்தின் அறக்கட்டளையால் நடத்தப்படும், ‘சைல்டு டிரஸ்ட்’ மருத்துவமனையில், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை தரப்பட்டாலும், அதைக் கூட செலுத்த முடியாமல் பலர் சிகிச்சையை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். குணம் அடைய முழுமையான வாய்ப்பு இருந்தும், பணம் ஏன் தடையாக இருக்க வேண்டும் என்று தான், ‘ரே ஆப் லைட்’ என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தேன். என்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வரும், பொருளாதார வசதி இல்லாத குழந்தைகள், சைல்ட் டிரட் மருத்துவமனையில், கட்டணமின்றி சிகிச்சை பெறுவதற்கு, ரே ஆப் லைட் உதவுகிறது. எளிய மக்களுக்கு பாதிப்பு வரும் போது, பொருளாதார சிரமம், சாப்பாடு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது என்று, அனைத்துமே பிரச்னையாக உள்ளது. குழந்தைகளை பொதுவாக ‘லுகேமியா’ எனப்படும் ரத்தப் புற்று நோய் அதிகம் பாதிக்கிறது. இதற்கு இரண்டரை ஆண்டுகள் சிகிச்சை பெற வேண்டும். அந்த காலகட்டத்தில், மூன்று மாதங்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும். ‘டிஸ்சார்ஜ்’ ஆன இரண்டு வாரங்களுக்குப் பின், மீண்டும் வர வேண்டும். இப்படி வீடு, மருத்துவமனை என்று அலைய வேண்டும். அந்த மாதிரி சூழ் நிலையில், சிகிச்சை இலவசமாக செய்வதால், பொருளாதார சிரமம் இல்லாததால், சிகிச்சைக்கு முழுமையாக பெற்றோர் ஒத்துழைக்கின்றனர். கல்லீரல் தொடர்பான கேன்சர் என்றால், ரேலா மருத்துவ மையத்திற்கு அனுப்புகிறோம். டாக்டர் பிரியா ராமச்சந்திரன், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை மருத்துவர், காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, சென்னை. 044 – 42001800 rayoflightindia@gmail.com