உள்ளூர் செய்திகள்

சத்தமில்லாமல் கண்களுக்கு வரும் அச்சுறுத்தல்!

நீரிழிவு நோயால் கண்களுக்கு ஏற்படும் மிக தீவிரமான பாதிப்புகளில் ஒன்று ‘டயபெடிக் ரெட்டினோபதி’ எனப்படும் நீரிழிவு விழித்திரை பாதிப்பு கோளாறு. கட்டுப்பாடில்லாத ரத்த சர்க்கரையால், விழித் திரைக்குச் செல்லும் நுண்ணிய ரத்த நாளங்கள் சேதமடைகின்றன. இதனால், அந்த ரத்த நாளங்களில் இருந்து, திரவம், ரத்தம் கசியலாம்; இயல்புக்கு மாறான புதிய ரத்த நாளங்கள் உருவாகலாம். நோய் தீவிரமடையும் போது, விழித்திரையின் மையப் பகுதி வீங்கி, கண்ணுக்குள் ரத்தக் கசிவு ஏற்படலாம். முற்றிய நிலையில், விழித்திரை விலகலும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. விழித்திரையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு இருந்தாலும், பார்வை இயல்பாகவே இருக்கும். மங்கலான பார்வை, கண்களுக்கு முன் புள்ளிகள் மிதப்பது, திடீர் பார்வைக் குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றிய பின்னரே, பலரும் மருத்துவ பரிசோதனைக்கு வருகின்றனர். என்ன செய்ய வேண்டும்? நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்குள் ரத்தச் சர்க்கரையைப் பராமரிக்க வேண்டும்.  ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.  கண் மருத்துவர் அறிவுறுத்தும் கால இடைவெளியில், விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  திடீர் பார்வை இழப்பு, புதிதாக தோன்றும் புள்ளிகள், ஒளி மின்னல்கள் அல்லது திடீர் பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். நவீன சிகிச்சை முறைகள்  விழித்திரை வீக்கத்தைக் குறைக்கவும், அசாதாரணமான புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் ஊசிகள் வாயிலாக, மருந்துகள் கண்ணுக்குள் செலுத்தலாம்.  கசியும் ரத்த நாளங்களை மூடி, மீண்டும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, லேசர் சிகிச்சை உள்ளது. இருப்பினும், விழித்திரை பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை எல்லா நேரங்களிலும் சரி செய்ய முடியாது. டாக்டர் பிரீத்தி வெங்கடேசன் கண் மருத்துவர், -டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சேலம். 95949 24048 patientcare@dragarwal.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்