உள்ளூர் செய்திகள்

தினமும் எத்தனை கப் காபி குடிக்கலாம்?

சரியான நேரத்தில், மிதமான அளவு குடிக்கும் காபி இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. காபியில் உள்ள கேபின் என்ற இயற்கையான வேதிப்பொருள் குறித்து, இரு வேறு ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. அதிகப்படியான கேபின் நல்லதல்ல என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.ஆனால், மிதமான அளவு காபி குடிப்பது, இதய நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தை குறைக்கிறது என்று, அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் கிளினிக் வெளியிட்ட சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று கப் காபி குடிக்கலாம். இதைவிட அதிகமாக காபி குடிப்பது, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, 'அரித்மியா' எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு, துாக்க கலக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.காபியில் உள்ள பாலிபினால்கள் எனப்படும் கூட்டு ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிக அளவில் ஆக்ஸ்சிஜன் செல்களுக்கு செல்ல உதவுகின்றன. இதனால், ரத்த நாளங்களில் அழற்சி ஏற்படுவது குறைகிறது. அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. இவையெல்லாம் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்கிறது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்.பிளாக் காபிசர்க்கரை, பால், கிரீம் சேர்க்காத பிளாக் காபியில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருக்கின்றன.அதே நேரத்தில் உடல் எடையை அதிகரிக்கும் கொழுப்புகள், கலோரி மட்டுமே உள்ள சர்க்கரை என்று எதுவும் இல்லை என்பதால், இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதில் பிளாக் காபி முதலிடத்தில் உள்ளது.எஸ்பிரசோ காபிகேபின் கலந்த மற்ற பானங்களை விட அதிக சுவையையும், குறைவான கலோரியையும் கொண்டது. இதில் உள்ள பாலிபினால், இதய ஆரோக்கியத்துக்கு மிதமான அளவில் உதவுவதால், இதற்கு இரண்டாம் இடம்.குளிர் ப்ரூ காபி சூடான காபியை விட மென்மையாக அமிலத்தன்மை குறைந்ததாக இருக்கும். இந்த காபி வயிற்று வலி, செரிமான பிரச்னை இருப்பவர்களுக்கு, இதயத்துக்கு ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது.அதனால், இதய ஆரோக்கியத்துக்கு காபி என்றால், பிளாக் காபி குடிக்கலாம். சுவை விரும்பாதவர்கள், மிகக் குறைந்த அளவில் பால் சேர்த்து குடிக்கலாம்.எத்தனை கப் காபி குடிக்கலாம்?பல ஆய்வுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின்படி, தினமும் மூன்று கப் காபி குடிப்பது, பக்கவாதம், கரோனரி தமனி நோய் அபாயத்தை குறைக்க உதவும். தினமும் 200 - -400 மி.கி., கேபின் எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது.குறிப்பாக காலையில் காபி குடிப்பது இதயத்துக்கு நன்மை செய்யும். அதே நேரம் சமச்சீரான, உணவு முறையான உடற்பயிற்சி, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதும் இதயத்திற்கு முக்கியம்.டாக்டர் அருண் கல்யாணசுந்தரம், முதன்மை இதய நோய் நிபுணர், புரோமெட் மருத்துவமனை, சென்னை94807 94807contact@promedhospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !