உள்ளூர் செய்திகள்

டாக்டரை கேளுங்கள்...

காயத்ரி, மதுரை: கர்ப்பிணிகளின் உணவுப்பட்டியல், உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு சில பெண்கள் தாய்ப்பால் போதவில்லை என்கின்றனர். அதற்கு என்ன செய்ய வேண்டும்?கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம். எனவே தொடர் கண்காணிப்பு, பரிசோதனை அவசியம். காய்கறி, முட்டை, பால், பழங்கள் அதிகமாகவும் இனிப்பு, கிழங்கு, எண்ணெய் பதார்த்தங்கள் குறைவாக உட்கொள்ள வேண்டும். வயிற்றில் இருக்கும் போது குழந்தை பெரிதாகி ஆப்பரேஷன் தேவைப்படுமோ என பயந்து உணவைக் குறைக்கக்கூடாது. சத்தான சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். அதிக புரோட்டின் சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.தாய்ப்பால் போதவில்லை என்று நினைக்க வேண்டாம். மனம் தான் காரணம். குழந்தை பிறந்தவுடன் சீம்பால் சொட்டு சொட்டாகத் தான் வரும். இந்த அளவு பால் குழந்தைக்கு போதாது என்று தாய் நினைக்கலாம். குழந்தை மார்பில் உறிஞ்சும் போது பால் தானாக சுரக்கும். இது தான் இயற்கை.சர்க்கரை நோயாளிகள், உடற்பருமன் உள்ளவர்கள், தாமத வயதில் குழந்தை பெற்றவர்களுக்கு சிலநேரங்களில் தாய்ப்பால் சுரப்பதில் பற்றாக்குறை ஏற்படலாம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் திட உணவு சாப்பிட ஆரம்பித்த பின் பால் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும். சுகப்பிரசவமோ, அறுவை சிகிச்சையோ குழந்தை வெளியே வந்தவுடனேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.எவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்த அளவிற்கு இயல்பாக பால் சுரக்க ஆரம்பிக்கும். அரிதாக பால் சுரப்புக்கென ஒரு சிலருக்கு மருந்துகள் தரவேண்டியிருக்கும். குழந்தை மீண்டும் மீண்டும் அழுவதால் பால் போதவில்லை என நினைத்து ஒரு சிலருக்கு மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படும்.குழந்தை பாலுக்காக மட்டும் அழுவதில்லை. அழுவது ஒன்றே குழந்தைக்கு தெரிந்த மொழி. சிறுநீர், மலம் கழித்திருக்கலாம், குழந்தை படுத்திருக்கும் நிலையோ கையில் வைத்திருக்கும் நிலையோ அசவுகரியத்தை தந்திருக்கலாம், உடல் சூடு, குளிர்ச்சி எதுவாகவும் இருக்கலாம். காரணத்தை நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.- டாக்டர் ரேவதி ஜானகிராம், மகப்பேறு மற்றும் மகளிர் நல நிபுணர், மதுரைஆர்.கோமதி, பெரியகுளம்: எனது சித்தியின் 35 வயது மகள் சமீபத்தில் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்றார். மறுநாளிலிருந்து பதட்டமாக காணப்பட்டார். இதனை தொடர்ந்து எங்கள் பகுதியில் துக்க வீட்டில் ஊதும் சங்கு சத்தம் கேட்டதும் அவரது உடலில் அதிகளவு வியர்த்தது. நானும் விரைவில் இறந்துவிடுவேனோ என புலம்புகிறார். இப் பிரச்னைக்கு தீர்வு காண ஆலோசனை கூறுங்கள்?இது 'இல்நஸ் ஆன்சைட்டி' என்ற மனநோயின் துவக்க நிலை. இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனை வரும். ஏதாவது ஒரு துக்க நிகழ்வுக்கு செல்லும் போது, நாமும் இறந்துவிடுவோமா, நமது குடும்பத்தை யார் பார்ப்பது என்ற பதட்டம் ஏற்படும். எதிர்மறையாக யோசிப்பவரை சில பயிற்சிகள் மூலம் நேர்மறையாக சிந்திக்க வைக்கலாம். இவர்கள் கேரம், செஸ், பல்லாங்குழி ஆடலாம். விளையாட்டில் ஈடுபடும் போது மனம் சந்தோஷமாகும். இவர்கள் சில மாதங்களுக்கு தவிர்க்க முடியாத உறவினர்களை தவிர, பெரும்பாலும் துக்க வீட்டிற்கு செல்லக்கூடாது. மனதிற்கு பிடித்த இசையை குறைந்த ஒலியில் கேட்க வேண்டும். மனதிற்கு பிடிக்காத ஒலியை கேட்காமல் இரு காதுகளிலும் 'பஞ்சு' வைத்துக்கொள்ளலாம். இரவில் அலைபேசியை ஓரத்தில் வைத்துவிட்டு நன்றாக துாங்க வேண்டும். தன்னம்பிக்கை புத்தகங்களை படிக்க வேண்டும். எளிதில் குணப்படுத்தலாம்.- டாக்டர் ஆர்.ராஜேஷ், மன நல மருத்துவர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்.எம்.செண்பக மூர்த்தி, உச்சிபுளி: எனது 9 வயது மகனுக்கு தலையில் கொப்புளம் போன்று சிறிதாக கட்டிகள் உள்ளன. அதற்கு என்ன காரணம், எவ்வாறு சரி செய்வது?பொதுவாக குளிர் காலத்தில் சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தலையில் எறும்பு கடி, கொசுக்கடி போன்று சிறிய கொப்புளங்கள் வரும். அதற்கு வியர்வை வெளியேற்றாதது தான் காரணமாகும். குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் தேய்த்து காலை 8:00 முதல் 10:00 மணிக்குள் 10 நிமிடங்கள் வெயிலில் நிற்க வேண்டும். அப்போது வியார்வையால் நீர் வெளியேறி விடுவதால் கொப்புளங்கள் வராது.குளிர் காலத்தில் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்துள்ள மஞ்சள் நிற காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம். சரும பாதுகாப்பு மிகவும் முக்கியம். தினமும் கட்டாயம் தலை, கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். மெதுவான சூட்டில் சீரகத்தண்ணீர் பருகலாம். இந்த சீசனில் தயிர், மோர் பலருக்கு பிடிக்காது.எனவே வடிகஞ்சி நீரில் உடனடியாக எடுத்து சுடுநீர் கலந்து நெய், மிளகுப் பொடி கலந்து குடித்தால் மிகவும் நல்லது. வறண்ட இருமல் குணமாகும். தோலுக்கும், வயிற்றுக்கும் நல்ல உணவாகும்.இந்த குளிர் காலத்தில் எந்த மாதிரியான ஆடைகள் அணிகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. குளிர்ந்த காற்றை தவிர்க்க கழுத்து, காது பகுதியில் 'டவல்' பயன்படுத்தலாம். குறிப்பாக ஆவி பிடித்தல் முறையை பின்பற்றினால் மூக்கடைப்பு சரியாகி வியர்வை வெளியேற்றப்படும். குளிர் காலத்தில் மஞ்சள் பூசணி, கேரட், பப்பாளி, அன்னாசி ஆகியவை சாப்பிடலாம்.குளிர்ந்த பானங்களை சாப்பிட வேண்டாம். அதில் சர்க்கரை, குளுகோஸ் சேர்ந்துள்ளதால் மேலும் கொப்புளங்கள் வர வாய்ப்பு உள்ளது. கீரை, தக்காளி சூப் சாப்பிட வேண்டும். தினசரி 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்.- டாக்டர் எல்.டி.சர்மிளா, யோகா, இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுமடம், ராமநாதபுரம்.எஸ்.செல்வி, சிவகங்கை: கர்ப்ப காலத்தில் உடலை எவ்வாறு பராமரிப்பது?கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையிலும் கருவின் வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். கருவுற்றது உறுதியானதில் இருந்து பிரசவ காலம் முழுக்க மிகவும் கவனமாக உடலை பராமரிக்க வேண்டும். அனைத்து பரிசோதனையும் உரிய இடைவெளியில் செய்து கொள்ள வேண்டும்.பொதுவாக காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், உலர் பழங்கள், அதிகமாக சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் திடீர் காய்ச்சல், தலைவலி வந்தால் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரசவ மாதத்தில் வாரம் தோறும் டாக்டரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.- டாக்டர் தென்றல், மகப்பேறு மருத்துவர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.அ.கற்பகவள்ளி, சாத்துார்: நான் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். அடிக்கடி எனக்கு சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது. முன் நெற்றியில் தலைவலியும் பாரமாகவும் உள்ளது. கோபம் அதிகம் வருகிறது. நோய்க்கான காரணம் என்ன? இதற்கு சிகிச்சை முறை என்ன?மூக்கு துவாரத்தில் உள்ள மயிர் கால்களில் உணர்வு செல்கள் உள்ளன. உடம்பிற்குள் கிருமி தொற்று அல்லது துாசி, சுவாசிக்கும் போது இயல்பாக தும்மல் மூலம் அவை வெளியேறுகின்றன. பெரும்பாலும் மூக்கு துவாரத்தின் வழியாக நீர் உள் புகுந்து சைனஸ் எலும்பில் தங்கி விடும்போது சைனசைட்டிஸ் நோய் ஏற்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே நீங்கள் டாக்டரை அணுகி முறையாக 5 நாட்களுக்கு அவர் எழுதித் தரும் மாத்திரைகளை உட்கொண்டால் 5 அல்லது 7 நாட்களில் நோய் குணமாகிவிடும்.மூக்கின் அடிப்பகுதியில் சளி கோர்த்து இருப்பதால் இதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வேண்டும். சைனசைட்டிஸ் நோயை முற்ற விட்டால் பின்னர் ஆப்பரேஷன் செய்ய வேண்டியது வரும்.- டாக்டர் பால மீனா லோசினி, இருக்கன்குடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !