மீண்டும் மாரடைப்பு வருவதை தடுக்கலாமா?
எனக்கு வயது 69. இரு ஆண்டுகளாக ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக NEBIVOLOL என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தொடர்ந்து எடுக்கலாமா? எம். சந்திரசேகரன், மதுரை: NEBIVOLOL என்பது Beta Blocker என்ற மருந்து வகையை சார்ந்தது. இது ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் நல்ல மருந்து. இது முதியோருக்கு பல வழிகளில் பலன் அளிக்கிறது. பக்கவிளைவுகள் குறைவு. இதை நீங்கள் தாராளமாக தொடர்ந்து எடுக்கலாம்.எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது எந்த தொந்தரவும் இல்லை. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. ரத்தத்தில் LDL என்ற அளவு 120 மி.கி. என்ற அளவிலேயே உள்ளது. இதற்காக நான் தொடர்ந்து ATORVASTATIN 10 மி.கி., என்ற மருந்தை எடுத்து வருகிறேன். இது சரியான அளவுதானா? க. சரவணன், தேனி: ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பைதான் LDLஎன குறிப்பிடுகிறோம். மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க, LDL அளவு 100 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால், ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டுவிட்டால், இந்த கெட்ட கொழுப்பின் அளவு அவசியம் 70 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். உங்களது 120 மி.கி., அளவு மிகவும் அதிகமானது. இதற்கு நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் ATORVASTATIN மருந்தின் அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது ROSUVASTATIN என்ற மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.எனக்கு ஓராண்டாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக நான் GLIMEPRIDE 1 மி.கி., என்ற மருந்தையும், PIO 15 மி.கி., என்ற மாத்திரையையும் எடுத்து வருகிறேன். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் வாக்கிங், உணவுக் கட்டுப்பாடு உண்டு. இருந்தும் எனது உடல் எடை கூடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? பி. சந்திரா, ராமநாதபுரம்: சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, வாக்கிங், உணவுப்பழக்கம் அவசியம். இதனுடன் மருந்தையும் சரியாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயை பற்றி, அஞ்ச தேவையில்லை. உடல் எடை அதிகரிக்க காரணம், நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் PIO GLITAZONE என்ற மருந்துதான் காரணம். உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து, வேறு மருந்தை எடுத்துக்கொண்டால் எடை குறையும். சர்க்கரை நோயால் மாரடைப்பு வராமல் தடுக்க, ரத்தத்தில் சர்க்கரை எந்த அளவில் இருக்க வேண்டும்?பி. குருசாமி, விருதுநகர்: சர்க்கரை நோய் உச்சி முதல் பாதம் வரை பாதிக்கும் தன்மை உடையது. இதை கவனமாக, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது முக்கியம். மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க, வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின், 140 மி.கி., க்கு கீழும் இருக்க வேண்டும். ஏஆஅ1இ என்பதன் அளவு 6.5 கீழும் இருக்க வேண்டும். இதற்கு உணவுக்கட்டுப்பாடு, வாக்கிங், மருந்து, மாத்திரை அவசியம். சிலருக்கு இன்சுலின் ஊசியும் தேவைப்படும்.- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.