மாதவிடாய் வலியை போக்கும் எள், பனைவெல்லம், கருஞ்சீரகம்!
இளம்பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை தற்போது அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தவறான, வாழ்க்கை முறை, உணவில் அதிகமாக காரம், புளி, உப்பு, மசாலா போன்றவற்றை பயன்படுத்துவது. அதிகமாக மாமிச உணவுகள், பொரித்த, வறுத்த, அதிக பிசுபிசுப்புத் தன்மை உள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாததால், அடிவயிற்றில் 'அபானன்' என்ற வாயுவை அதிகரிக்கச் செய்கிறது.இது அதனுடைய இருப்பிடத்தை விட்டு வெளிநோக்கிச் செல்வதால், கருப்பையின் ஒழுங்கற்ற செயல்பாட்டுக்கு வழி செய்கிறது.'அஷ்டாங்க ஹிருதயம்' என்னும் ஆயுர்வேத நுாலில், இடுப்பு, சிறுநீர்ப்பை, தொடை, போன்ற பகுதிகளின் செயல்பாடு, விந்தணுக்கள், மாதவிடாய், மலம், சிறுநீர் போன்றவை வெளியேறும் செயல்களை அபான வாயு இயக்குகிறது என்று கூறப்பட்டுள்ளது. 'பிசிஓடி' எனப்படும் கருக்குழாயில் வரும் நீர்க்கட்டி உருவாவதற்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகளவு சுரப்பது, 2 மி.மீ - 9 மி.மீ., அளவில் கருமுட்டையைச் சுற்றி சிறிய கட்டிகள் உருவாவது ஆகியவை, கருமுட்டை உடைந்து வெளியேறத் தடையாக உள்ளன.சீரற்ற மாதவிடாய், மார்பு, முதுகில் அதிகமாக முடி வளர்தல், முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பது, உடல் எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, கர்ப்பமடைவதில் சிரமம், நீர்க்கட்டிகள் இருப்பதன் அறிகுறிகள்.இப்பிரச்னைக்கு ஆயுர்வேதத்தில், சுகுமாரம் கஷாயத்துடன் ரஜபிரவர்த்தனி என்ற மாத்திரை தரப்படுகிறது. குமாரியாஸவம், புனர்நவாஸவம் சேர்ந்த கலவையை காலை, இரவு உணவிற்குப் பின் தினமும் 5 ஸ்பூன் சாப்பிடலாம். மாதவிடாய் வருவதற்கு முன் ஏற்படும் கை, கால் வலி, உடல்சூடு, படபடப்பு நீங்க, தான்வந்திரம் கஷாயத்துடன் தான்வந்திரியம் மாத்திரையை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அசோகா, லோத்ரா, ஜடாமான்சி, அமுக்கிரா, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மாதுளை தோல், மன்டூரம், கைரிகா போன்ற மூலிகைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் 'பெமி காரட் கோல்டு' மாத்திரை / சிரப், மாதவிடாய்க் கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. சரியான நேரத்தில் மாதவிடாய் வருவதை உறுதிசெய்ய, 'போலிகுலோஜென்சிஸ்' என்ற மருந்து உதவுகிறது.அனைத்து கர்ப்பப்பை கோளாறுகளுக்கும் இது சிறந்த தீர்வாக அமைகிறது.பெண்களுக்காகவே பிரத்யேகமாக உள்ள ஆயுர்வேத மூலிகைத் தைலங்களை இரும்புக் கரண்டியில் சூடு செய்து, கீழ்வயிறு, இடுப்பு, கால் பகுதிகளில் வெதுவெதுப்பாகத் தடவலாம்.பஞ்சை வெண்ணெயில் நனைத்து, உச்சந்தலையில் அரை மணி நேரம் வைத்து, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குளிப்பது சிறந்த பலனைத் தரும்.பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமும் வளர்ச்சியும் தரக்கூடியது உளுந்து. மாதவிடாய் காலங்களில் உளுந்து சேர்த்த அரிசியை வேகவைத்து சாப்பிடுவது, எள் ஊற வைத்த நீரை குடிப்பதால், உதிரச்சிக்கல் நீங்கும். எள், பனைவெல்லம், கருஞ்சீரகம் மூன்றும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடிப்பது, மாதவிடாய் காலத்து வலி உட்பட பல பிரச்னைகள் நீங்க உதவுகிறது. கசகசா, வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு இவற்றை சம அளவு சேர்த்து இடித்து, தேன், நெய் கலந்து சாப்பிட்டால் சரியான நேரத்தில் மாதவிடாய் வருவதுடன், வலியும் குறைகிறது.நடைபயிற்சி, யோகப்பயிற்சியில், தனுராசனம், உஷ்ட்ராசனம், மச்சாசனம், பத்மகோணாசனம், புஜங்காசனம், அதோமுகஸ்வனாசனம் இவை ஹார்மோன்களின் செயல்பாட்டை சீராக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. பெண்களின் அடிவயிற்றுப் பகுதியை பலப்படுத்த உதவுகிறது. இவற்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றுவது அவசியம்.டாக்டர் ரஞ்சனி சாய்ராம், ஆயுர்வேத மருத்துவர், சென்னை 94456 95771*drranjanisairam2910@gmail.com