உள்ளூர் செய்திகள்

சிறுநீர் செல்ல வேண்டும் என்ற உந்துதல் - அடிக்கடி ஏற்படுகிறதே! - சில சந்தேகங்கள்... சில பதில்கள்!

மாலா, சிதம்பரம்:

பள்ளி மாணவி நான். வெளியில் கிளம்பும்போதோ அல்லது தேர்வு எழுதக் கிளம்பும்போதோ, சிறுநீர் வெளியேற்ற வேண்டுமென உந்துதல் ஏற்படுகிறது. ஒன்றிரண்டு சொட்டு தான் வருகிறது. சிறுநீரகப் பிரச்னையா அல்லது தொற்றா? தேர்வு கண்டு பயம் அல்லது வெளியில் செல்ல பயம் ஆகியவை தான், இதற்கான காரணங்களாக அமைகின்றன. சிலருக்கு வியர்த்துக் கொட்டும்; வயிற்றுப் போக்கு கூட ஏற்படும். தேர்வு எழுதும் அறைக்குச் செல்வதற்கு முன், மனதை அமைதிப்படுத்துங்கள். தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன், சிறுநீர் வெளியேற்றுங்கள். சிறுநீரகப்பாதை தொற்று இருந்தால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமல்ல, தொடர்ந்து சிறுநீர் வெளியேற்ற வேண்டுமென்ற உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சிறுநீர் பரிசோதனை செய்து, குறையை சரி செய்து கொள்ளுங்கள். தினமும் 40 நிமிடம் ஓட்டப் பயிற்சியும், யோகாவும் செய்தால் உடல் நிலை சீராகும். படபடப்பு, மன அழுத்தம் குறையும். உங்கள் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.

ஏ.வெங்கடேசன், நெல்லை:

கர்ப்பப்பை புற்றுநோயால், 30 சதவீத பெண்கள் பாதிப்படைகின்றனர். பிறப்புறுப்பின் சுத்தமின்மையா அல்லது சட்டத்திற்கு புறம்பான உறவால் ஏற்படும் பாதிப்பா? இதை தடுக்க வழி உண்டா? உங்கள் புள்ளி விவரம் சரியா என எனக்கு தெரியவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்படும் ஒன்றிரண்டு சதவீத பெண்களில், 20 சதவீதம் பேருக்கு, கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பை வாயில் புற்று நோய் ஏற்படுகிறது. இறுதி மாத விலக்கு, வெகு சீக்கிரம் ஏற்படுவது அல்லது தாமதமாக ஏற்படுவது, மூன்றுக்கு மேற்பட்ட கர்ப்பம் தரிப்பது, அதிக உடல் எடை, நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது, ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வது ஆகிய காரணிகளுக்கும், கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கும் தொடர்பு உண்டு. கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்பட, எச்.பி.வி., (ஹியூமன் பாப்பிலோ வைரஸ்) என்ற வைரஸ் காரணமாக அமைகிறது. ஏற்கனவே இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கணவனால் கூட, உடலுறவின் மூலம் மனைவியிடம் பரப்பப்படுகிறது. "சட்டத்திற்கு புறம்பான உறவால்' மட்டுமே ஏற்படுவது இல்லை. இதற்கு, நோய் தடுப்பு ஊசி மருந்தை, மூன்று முறை போட்டுக் கொண்டால் தொற்றோ, புற்றுநோயோ வராமல் தடுக்கலாம்.

ஆர்.வி.ரமணி, புதுச்சேரி:

நான் சைவ உணவு சாப்பிடுபவன். கழுத்தின் கீழ் அரிப்பு ஏற்படுகிறது. எந்த பருவ காலத்திலும் இது போன்று உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நீர்க்கட்டிகள் போல், ரத்த கட்டிகள் உருவாகின்றன. இதற்கு அலோபதி, ஆயுர்வேதா, சித்தா என எதில் மருந்து உள்ளது? கழுத்தின் கீழ் உங்களுக்கு வியர்க்குரு ஏற்பட்டிருப்பது போல் தெரிகிறது. வியர்வை உலராத வகையில் தலைமுடி நீளமாக வளர்ந்திருப்பதோ, பாலியெஸ்டர் சட்டை போடுவதோ, பவுடர் போடுவதோ, அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் பணியாற்றுவதோ இதற்கு காரணமாக இருக்கலாம். நீக்கோ சோப்பு பயன்படுத்தி, தினமும் இரண்டு வேளை குளியுங்கள். பிளாஸ்டிக் தேய்ப்பானை (பிளாஸ்டிக் ஸ்கிரப்பர்) சோப்பின் மீது ஒற்றி, அதன் மூலம் உடலை தேய்த்து குளியுங்கள். பவுடர் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முழுவதும் பருத்தியாலான உடை அணிய வேண்டும். அரிப்பு அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, "ஆன்ட்டி ஹிஸ்டமைன்' மருந்து சாப்பிடலாம். இல்லையெனில், மருந்து ஏதும் தேவையே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !