மொபைல்போனுக்கு ஏன் அடிமையாகிறோம்?
முன்பு, நாம் பிறருடன் பேசுதல், பழகும்போது, விளையாடுதல், வெற்றி பெறுதல், பிறர் நம்மை பாராட்டுதல் என பல இடங்களில் நமக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வு கிடைக்கும். அந்த மகிழ்ச்சி உணர்வுக்கு காரணம், நம் மூளையில் சுரக்கும் 'டோப்பமைன்' என்னும் ஹார்மோன். ஒரு செயலை ஆரம்பித்து, அதில் பயணித்து சரியாக முடிக்கும் போது, முடிந்தது என்பதை சிறு வெற்றியாக எண்ணி நம் மூளை தனக்குத்தானே கொடுக்கக்கூடிய பரிசுதான் இந்த 'டோப்பமைன்'.சிறிதோ, பெரிதோ எந்த வேலை செய்தாலும், அது முடியும் போது இது சுரக்கும். கதை, நாவல் படித்தல், படம், நாடகம் பார்த்தல், பலநாள் உழைப்பில் வெற்றி காணுதல், பாராட்டு பெறுதல் போன்றவற்றால் இது சுரக்கும். ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில், மொபைல் போனில் பார்க்கக்கூடிய ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற சிறு வீடியோக்கள், சிறியதாக இருப்பதால் அந்த சிறிய நேரத்தில் நமக்கு டோப்பமைன் சுரந்து விடுகிறது. மீண்டும் பார்க்க துாண்டி அடிமைப்படுத்துகிறது.அதிகரிக்கும் பழக்கம்இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி, மனநலப்பிரிவு உதவிப்பேராசிரியர் கலைச்செல்வி நம்முடன் பகிர்ந்தவை:அதிகரித்து வரும் இந்த மொபைல் போன் பழக்கத்தால், நாம் பிறரிடம் பேசுதல், சிரித்தல், மகிழ்ச்சியாக நேரம் செலவழித்தல், பிறரின் பாராட்டு பெறுதல், சுற்றுலா செல்லுதல் போன்றவற்றில் இயற்கையாக சுரக்கும் 'டோப்பமைன்' அளவு குறைகிறது. ஏனெனில் மொபைல் போன் பயன்பாட்டில் கிடைத்த டோப்பமைன்கள் அதிகம் என்பதால் இவற்றிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு குறைவாக தோன்றும். தினமும் மொபைல் போன் பார்ப்பதால் 'டோப்பமைன்' அதிகம் சுரந்து, நரம்புகளில் பதிவாகிறது. ஒரு நாளில் அதே அளவுக்கு அல்லது அதிகமாக மீண்டும் சுரந்தால் மட்டுமே மகிழ்ச்சியான உணர்வை பெற முடியும். பிற செயலில் மகிழ்ச்சி இல்லாததால் நாம் மொபைல் போனுக்கு மேலும் அடிமையாகிறோம்.பாதிப்புகள்எல்லா நேரமும் சுரக்கும் டோப்பமைனால் கவனக்குறைபாடு, கோபம், எரிச்சல், துாக்கமின்மை, பசியின்மை, படிப்பிலும் உடல் இயக்கத்திலும் ஆர்வமின்மை, அதிக எடை போன்ற பல பிரச்னை ஏற்படும். பிறர் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் திறன் குறையும். எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. பிறருடன் உரையாடுவது, விளையாடுதல், டீம் ஒர்க் போன்றவை கடினமாகும். அதனால் தனிமையில் மொபைல் மட்டும் பார்த்து மகிழ்ச்சியாக இருக்க தோன்றும். எவற்றையும் விரும்ப மாட்டோம். நட்பு வட்டம் முக்கியம் தான் என்றாலும், அதிலிருந்து விடுபட்டு வாழ்வது பிற்காலத்தில் உணர்ச்சி ரீதியாக அதிகம் பாதிக்கும்.தீர்வுகள்மொபைல் போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு அனைத்தும் பழையபடி மாற்றலாம். மொபைல் போன் பார்ப்பதை நிறுத்தினால், நம் மூளையில் சுரக்கும் டோப்பமைன் குறையத்தொடங்கும். நம் உடல் தன்னைத்தானே குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் அதை சாத்தியமாக்க மொபைலில் இருந்து விலக முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு பெற்றோரின் வழிகாட்டல் அவசியம். முடிந்தளவு பெற்றோர், நண்பர், என பிறரிடம் நேரம் செலவழித்தல், புத்தகம் படித்தல், ஆடுதல், பாடுதல், வரைதல், விளையாடுதல் என பிற செயல்கள் செய்து மாற்றத்தை ஆரம்பிக்கலாம்.'போர்' அடிக்குதா... நல்லதுதான் ஒரு செயலை செய்வது பிடிக்காமல் 'போர்' அடித்தால் அது நல்லது. அப்போது நம் மூளை யோசிக்க துவங்கும், புதிய முயற்சியில் கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற முயல்வோம். அதில் பெறும் சந்தோஷம் எதிலும் கிடைக்காது. அப்போது தானாக இந்த மொபைல் போன் பயன்பாடு குறையும். எப்போதும் நம் மூளைக்கு உள்ளீடு கொடுத்துக்கொண்டே இருக்கக்கூடாது, அது வேலை செய்யவும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். - கலைச்செல்வி, மனநலப்பிரிவு உதவிப்பேராசிரியர், அரசு மருத்துவக்கல்லுாரி.