அம்மா என்றாலே பெருமைக்குரியவர்தானே, அதென்ன 'பெருமைக்குரிய அம்மா' என்கின்ற தலைப்பு என்பவர்கள் கொஞ்சம் கட்டுரைக்குள் போகத்தான் வேண்டும்.பொதுவாக உடல் ஊனமுற்றவர்கள்,பார்வை இழந்தவர்கள்,மனநலம் பாதித்தவர்களைக்கூட வீட்டில் வைத்துக் கொண்டு பராமரிக்கும் பெற்றோர்கள், தங்கள் பெற்ற குழந்தை திருநங்கை என்பது தெரிந்தால் உடனே வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுவர்.காரணம் அது அவர்களுக்கு கவுரவ குறைச்சல்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை அம்மா அப்பா என்று பாசத்துடன் காலைச் சுற்றி சுற்றி வந்த பதின்பருவ குழந்தைகள், இயற்கையின் விதி காரணமாக திருநங்கையாக மாறுகிறார்களே தவிர அவர்கள செய்த குற்றம் எதுவும் இதில் கிடையாது, இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல் பாசத்தை துாக்கி துாரவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட குழந்தைகளை எங்காவது கண்காணாத இடத்திற்கு அனுப்பிவிடுகின்றனர்.,கேட்பவர்களுக்கு வெளியூரில் படிக்கபோயிருப்பதாக கூசாமல் பொய் சொல்லிவிடுகின்றனர்.
அந்தக்குழந்தை திக்கு திசை தெரியாமல் திண்டாடிப் போய்விடுகிறது, சரியானவர்கள் பாதுகாப்பில் அடைக்கலமானால் அவர்களது எதிர்காலம் ஒளிர்விடும், இல்லையேல் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும்,ரயில் பஸ் நிலையங்களில் யாசகம் கேட்டு பிழைப்பவர்களாகவும் மாறிவிடுகின்றனர்.
இதில் வெகு சில பெற்றோர்கள் மட்டும் அவர்களும் நமக்கு பிறந்த குழந்தைகள்தானே என்று தங்கள் இல்லத்திலும்,உள்ளத்திலும் இடம் கொடுத்து வளர்க்கின்றனர்.அப்படிப்பட்ட பெற்றவர்களில் ஒருவர்தான் வள்ளி.
துாத்துக்குடியைச் சேர்ந்த எளிய குடும்பத்தைச் சேர்ந்த அவர் தன் குழந்தை ஸ்ரீஜா ஒரு கட்டத்தில் திருநங்கையாக மாறிவிட்டார் என்பது தெரிந்து முதலில் கவலைப்பட்டாலும் பின்னர் அந்தக் கவலை தனது குழந்தையை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக இதர குழந்தைகள் போலவே வளர்க்கிறார்.அந்தக்குழந்தையும் வளர்கிறது, ஒரு கட்டத்தில் பெண்ணாக தன்னை உணர்ந்து தனக்கான ஆண் துணையை தேர்ந்தெடுக்கிறார்.,அதையும் அந்த தாய் அங்கீகாரம் செய்கிறார்.அருண் என்ற அந்த இளைஞர் ஸ்ரீஜாவின் அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டு அவரை காதலிக்கிறார்,திருமணம் செய்து கொள்ளவும் முனைகிறார்.அதற்கு கோவிலில் துவங்கி பதிவாளர் அலுவலகம் வரை பெரும் சட்டப்போராட்டமே நடத்தவேண்டியிருந்தது.
நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் திருமணம் செய்து கொள்ளுங்கள் அதற்கு நாங்கள் உதவுகிறோம் ஆனால் இதையே பொதுவான விதியாக்கி திருநங்கைக்கு ஆணுக்கும் திருநங்கைக்கும் திருமணம் செய்துவைக்கமுடியாது என்கின்றனர் அதிகாரிகள்எங்களது தனிப்பட்ட சந்தோஷம் முக்கியம் அல்ல எங்களைப் போன்ற எல்லோரையும் சட்டப்படி அங்கீகாரம் செய்யுங்கள் என்றனர்.இதற்காக அருணும்-ஸ்ரீஜாவும் துாத்துக்குடியில் இருந்து மதுரையில் உள்ள கோர்ட்டிற்கு விடாமல் அலைகின்றனர், இந்த திருமணத்திற்கு அருணின் தாயாரே எதிர்ப்பு தெரிவிக்கிறார், ஆனால் ஸ்ரீஜாவின் தாயாரான வள்ளி இவர்களது எல்லா முயற்சிக்கும் துணை நிற்கிறார்.ஒரு கட்டத்தில் அருண்-ஸ்ரீஜா திருமணத்திற்கு கோர்ட் அனுமதி வழங்குகிறது, புரட்சிகரமாக இந்த தீர்ப்பால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு திருநங்கைகள் மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தனர், இந்த தீர்ப்பை முன்மாதிரியாகக்காட்டி பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற திருமணங்கள் நடந்தன.இப்படி திருநங்கைகள் வாழ்வில் திருப்பம் ஏற்படக்காரணமான ஸ்ரீஜாவின் முயற்சிக்கு முன்னெடுப்பிற்கு பலமாக இருந்த ஸ்ரீஜாவின் தாய் வள்ளியே அந்த பெருமைக்குரிய தாய்.அவரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப்படமே 'பெருமைக்குரிய அம்மா'.இதன் திரையிடல் நிகழ்வு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் நிறுவனத்தில் நடந்தது.இந்த நிஜக்கதையில் இடம் பெற்ற வள்ளி,ஸ்ரீஜா,அருண் ஆகியோர் திரையிடல் நிகழ்விலும்,பின்னர் நடந்த கலந்துரையாடலிலும் கலந்து கொண்டனர்.இந்த படத்தின் இயக்குனர் சிவ கிரிஷ்,இசையமைப்பாளர் கார்த்திகேய மூர்த்தி,நிறங்கள் சிவா,மற்றும் சித்தாரா ஆகியோர் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.நிகழ்வினை ஆரம்பித்து வைத்து எதார்த்தமாகவும்,நகைச்சுவையாகவும் பேசிய பெண் எழுத்தாளர் ஜெய் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார்.அவர் குறிப்பிட்டது போல இந்த திரையிடல் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றால் நல்லதொரு விழிப்புணர்வு கிடைக்கும்.திரையிடல் நிகழ்வின் போது திருநர் என்ற தலைப்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புகைப்படங்களும் பார்வையாளர்களின் கவனம் பெற்றது.-எல்.முருகராஜ்