UPDATED : ஏப் 13, 2026 06:32 PM | ADDED : ஏப் 13, 2026 06:30 PM
இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக பிரிட்டிஷ் அரசு 1919-ஆம் ஆண்டு கொண்டு வந்த மிகக்கொடூரமான சட்டமே 'ரௌலட் சட்டம்'. இந்தியர்களால் 'கருப்புச் சட்டம்' என்று வர்ணிக்கப்பட்ட இச்சட்டம், பிரிட்டிஷ் காவல்துறைக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியது. சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்பதே இதன் சாராம்சம். தண்டிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யவோ, வழக்கறிஞர்களை அமர்த்தவோ கூட உரிமை மறுக்கப்பட்டது.ஒரு ஜனநாயக நாட்டில் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒருவரைச் சிறையில் அடைப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என்பதால், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கொதித்தெழுந்தனர். இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தேசிய அளவில் 'ரௌலட் சத்தியாகிரகம்' என்ற போராட்டத்தை காந்தியடிகள் அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் மக்கள் அமைதியான முறையில் திரண்டனர்.அன்று 1919, ஏப்ரல் 13 - சித்திரை திருநாள் (பைசாகி). பஞ்சாப் மாநிலமே திருவிழா கோலம் பூண்டிருக்க வேண்டிய அந்த மாலைப் பொழுதில், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்தது வெறும் கூட்டம் அல்ல; அது ஒரு தேசத்தின் விடுதலைக் கனவு. எவ்வித ஆயுதமும் இன்றி, அமைதி வழியில் அறப்போர் புரிந்த அந்த அப்பாவி மக்கள் மீது, பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டயர் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டான்.சுற்றிலும் உயர்ந்த சுவர்கள், வெளியேற இருந்த குறுகிய ஒற்றை வழியில் நின்று கொண்டு பிரிட்டிஷ் படைகள் குண்டு மழை பொழிந்தன. தப்பிக்க வழியின்றித் தவித்த மக்கள் பிணங்களாய் விழுந்தனர். துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயந்து கிணற்றில் குதித்து உயிர்விட்ட பிஞ்சுயிர்கள், மார்பில் குண்டு தாங்கி வீழ்ந்த தியாகிகள் என அந்த மண் அன்று குருதியால் சிவப்பானது. இச்சம்பவத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து இன்றுடன் 107 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், அந்த மண்ணில் படிந்திருக்கும் தியாகத்தின் சுவடுகள் இன்னும் ஈரப்பதம் மாறாமலேயே இருக்கின்றன. இன்று அதன் 107-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.நினைவிடத்தில் உள்ள 'அமர் ஜோதி' முன்பு பஞ்சாப் மாநில அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மக்கள் இன்றும் அந்தச் சுவர்களில் உள்ள துப்பாக்கிக் குண்டு துளைகளைத் தொட்டுப் பார்த்து, அன்றைய கொடுமையை எண்ணிக் கண்ணீர் மல்க நின்றனர். பல நூறு பேர் உயிரைத் தியாகம் செய்த 'தியாகிக் கிணறு' பகுதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்தப் போராட்ட வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சிகளும், நாடகங்களும் நடத்தப்பட்டன.'மறக்க முடியாத வரலாறு, மன்னிக்க முடியாத துரோகம்' என மக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரடியாவும் தியாகிகளுக்குத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.-எல்.முருகராஜ்