UPDATED : செப் 22, 2026 06:58 PM | ADDED : செப் 22, 2026 06:55 PM
'ஜப்பானில் தற்போது நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.கிரிக்கெட் வீராங்கனை கமலினி அவர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும்.இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினி அவர்களின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!'இன்று காலையில் முதல்வர் விஜயின் இந்த வாழ்த்துச் செய்தி வந்தது முதல் யார் இந்த கமலினி என்பதை அறிய ஆர்வம் ஏற்பட்டது.இப்போது 18 வயதாகும் கமலினியின் மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்குழந்தைப் பருவத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வமுடன் இருந்தார். பின்னர், அவரது எண்ணம் கிரிக்கெட் மீது மாற, மகளின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் தந்தை குணாளன்.12 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே வெற்றிகளைக் குவித்தார். மதுரையில் பெரிய அளவில் வசதிகள் இல்லாததால், சொந்த ஊரையும், சொந்த பந்தங்களையும் விட்டுவிட்டு மகளின் உயர்வுக்காக வளர்ச்சிக்காக குடும்பமே சென்னைக்கு குடிபெயர்ந்தது.முதலில் பந்துவீச்சாளராக இருந்த கமலினியின் திறமையைப் பார்த்த பயிற்சியாளர்கள் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சிக்கு மாற்றியுள்ளனர். திறமையுடன், கடும் உழைப்பை கொடுத்த கமலினிக்கு கிரிக்கெட்டில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது.கமலினியின் அப்பா குணாளனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாளில் நடந்த மாநில அளவிலான போட்டியில் ஆந்திராவுக்கு எதிராக சதமடித்தார் கமலினி. வலியுடன் அடித்த அந்த சதம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்கியது.இடதுகை வீராங்கனையான கமலினி அடித்த சிக்ஸர்களின் வீச்சு அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அதற்கு சான்று தான் மகளிர் பிரீமியர் லீக் ஏலம். 10 லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில் ஒரு கோடியே 60 லட்சத்திற்கு கமலினியை மும்பை அணி வாங்கியது.சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத, 16 வயதே நிரம்பிய கமலினி இவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.இதனுடன், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்து உலகக்கோப்பையில் விளையாடிய கமலினி, இரண்டு அரைசதங்களுடன் 7 போட்டிகளில் 143 ரன்கள் எடுத்தார். குறிப்பாக அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் 56 ரன்கள் குவித்த கமலினி, இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வழிவகுத்தார்.இறுதியில் இந்திய அணி பெற்ற வெற்றி, இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. தடைகளைத் தகர்த்து முன்னேறிய கமலினிக்கும். அவரை வளர்த்தெடுத்த பெற்றோருக்கும் மிகப்பெரிய வெற்றியே. தன்னை செதுக்கியதில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது என பெருமையுடன் கூறும் கமலினி, இன்னும் பல உயரங்களை அடைவார் என்பது உறுதி.-எல்.முருகராஜ்