UPDATED : ஜன 21, 2026 03:44 PM | ADDED : ஜன 21, 2026 03:42 PM
சென்னையில் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்த 'நம்ம ஊரு திருவிழா' (சென்னை சங்கமம்) கலை நிகழ்ச்சிகளின் சங்கமம் மட்டுமல்ல, அது தன்னம்பிக்கையின் சங்கமமாகவும் அமைந்தது. கரகம், காவடி, தப்பாட்டம் எனப் பல்வேறு கலைகள் மேடையை அலங்கரித்தாலும், ஒரு நிகழ்ச்சி மட்டும் பார்வையாளர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தது. அது, விழுப்புரத்தைச் சேர்ந்த 'கை கொடுக்கும் கை' அமைப்பின் மாற்றுத்திறனாளிகள் நிகழ்த்திய மல்லர் கம்பம் சாகசம்.சவாலைச் சந்தித்த சாதனையாளர்கள் விபத்தாலோ அல்லது போலியோ பாதிப்பாலோ ஒரு கை அல்லது ஒரு காலை இழந்த 15 வீரர்கள் மேடைக்கு வந்தபோது, 'இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?' என்ற ஆவலும் ஐயமும் அவையினரிடம் இருந்தது. சுமார் 12 அடி உயரமுள்ள கனமான மரக்கம்பத்தில், உடல் உறுதி மிக்கவர்களே ஏறுவது கடினம் எனும் நிலையில், இந்த மாற்றுத்திறனாளிகள் நிகழ்த்திய ஒவ்வொரு அசைவும் ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது.பழங்காலப் போர்க்கலையான மல்லர் கம்பத்தில், அடுத்த ஒரு மணி நேரம் அவர்கள் ஆற்றிய சாகசங்கள் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்தன. அவர்களின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும், ரசித்துச் செய்த விதமும் பார்ப்பவர்களுக்குப் புதிய ஆற்றலை (Energy) வழங்கியது.சதீஷ்: காற்றில் மிதக்கும் வைராக்கியம்! இந்தக் குழுவில் தனித்துத் தெரிந்தவர் 24 வயது இளைஞர் சதீஷ். சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து, விளையாட்டு வீரராகத் துடித்த அந்த இளைஞனின் ஒரு கையைப் பறித்துக்கொண்டது. ஆனால், அந்த இழப்பை அவர் பலவீனமாகக் கருதவில்லை. 'இரு கைகள் இருந்தபோது செய்ய முடியாததை, ஒரு கையால் சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற வைராக்கியத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடும் பயிற்சி மேற்கொண்டார்.சங்கமம் மேடையில், ஒரே ஒரு கையால் 12 அடி உயரக் கம்பத்தை இறுகப் பற்றிக்கொண்டு, காற்றில் மிதக்கும் ஆசனங்களை அவர் செய்தபோது அரங்கம் அதிரும் வகையில் கைதட்டல்கள் குவிந்தன. ஊனம் என்பது உடலுக்குத்தான், மனதிற்கு அல்ல என்பதைத் தனது ஒவ்வொரு அசைவிலும் அவர் நிரூபித்தார்.பயிற்சியாளராகப் புதிய பயணம் தற்போது முழுநேரக் கலைஞராக மாறியுள்ள சதீஷ், தன்னைப்போன்ற பலருக்கும் மல்லர் கம்பப் பயிற்சியை அளித்து வருகிறார். உடல் தகுதி மிக்க கலைஞர்களுடன் சமமாகப் போட்டியிட்டுப் பதக்கங்களை வென்று வரும் சதீஷ் மற்றும் 'கை கொடுக்கும் கை' குழுவினரின் தன்னம்பிக்கைப் பயணம் மென்மேலும் தொடர நாமும் வாழ்த்துவோம்!- எல். முருகராஜ்