உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / குருவி கணேசன்

குருவி கணேசன்

கடந்த ஞாயிற்றுக்கிழமைபுயல் மழை காரணமாக ஊரே சற்று ஓடுங்கிப்போய் அமைதியாக இருக்கிறதுஇந்த நிசப்தமான நேரத்தில் சென்னை ராயபுரம் தனலட்சுமி மேல்நிலைப்பள்ளியின் முதல் மாடியில் ஒரு அறையில் மட்டும் சன்னமாய் பிளைவுட்டை தட்டி அடுக்கும் சத்தம்.எட்டிப் பார்த்தால் ஒரு இளம் தம்பதிகள், பிளைவுட்களை, கட்டுக்கட்டாக சுறுசுறுப்பாக அடுக்கிக் கொண்டிருந்தனர், அவர்களுக்கு உதவியாக இரு சிறு குழந்தைகளும் ஒடியாடி எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.யார் இவர்கள்கணேசன் என்றால் யாருக்கும் தெரியாது குருவி கணேசன் என்றால் எல்லோருக்கும் தெரியும்.சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த இவருக்கு இயற்கையிலேயே பறவைகள் மீது ஆர்வம் அதிகம்.அதிலும் எந்த நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் சிட்டுக்குருவி மீது அலாதிப்பிரியமும் கூட.ஆனால் திடீர் என அவைகளின் எண்ணிக்கை நகர்ப்பகுதிகளில் வெகுவாகக் குறைந்தது குறித்து வருத்தப்பட்டார்.செல்போன் டவரில் இருந்து வீசும் கதிர்வீச்சு காரணமாகவே சிட்டுக்குருவி என்றே இனமே அழிந்துவிட்டது என்று சினிமாவரை பேசப்பட்டதால் ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ?என்று கூட யோசித்தார்.ஆனால் அதே செல்போன் டவர்கள் உள்ள சிற்றுார்களில் கிராமங்களில் சிட்டுகள் இருக்கவே அது காரணம் அல்ல என்றும் தெரிந்து கொண்டார்.பின்னர்தான் தெரிந்தது நகர மக்களின் வாழ்வியல் முறைதான் அதற்கு காரணம் என்று.முன்பெல்லாம் சாப்பிட்டு முடித்து மீதமான சாதம் உள்ளீட்ட உணவுப்பொருட்களை வீட்டின் பின்புறம், புழக்கடை, கிணற்றடி என்று பாத்திரம் விலக்கும் இடத்தில் போடுவோம் அப்போது சிந்தும் நிறைய மீந்த சாதத்திற்கு உணவுப்பொருட்களுக்கு சிட்டுக்குருவிகள் வரும் கொத்தித்தின்று செல்லும்.அது மட்டுமல்ல சிட்டுக்குருவி நமது குடும்பத்தில் ஓன்று போலவே வீட்டிற்குள் வந்து சாய்மானமாக உள்ள போட்டோக்களின் பின்புறம்,காற்றாடியின் மேற்புற கூடு,தாழ்வாரங்கள் என்று பல இடங்களில் கூடுகட்டும் குஞ்சு பொரிக்கும்அதன் சத்தமும் சுறுசுறுப்பும் பிடித்துப் போனதால் பல தலைமுறைகளாக குருவிகள் வசிக்கும் வீடுகள் கூட உண்டு.ஆனால் இப்போது உணவுப்பொருள் எங்கே மீந்து போகிறது அப்படியே மீந்து போனாலும் வீட்டின் வெளிப்புறத்தில் கொண்டு போய் யார் கொட்டுகின்றனர், ஆக குருவிகளின் உணவுச்சங்கிலிக்கு முதல் சிக்கல் இங்கு ஏற்பட்டது.இரண்டாவது எங்கே கொசு வந்துவிடுமோ என பயந்த மக்கள் வாசல்,ஜன்னல் என்று மொத்த வீட்டையும் சீல் வைத்தது போல வலை அடித்து வைத்துள்ளனர்,கொசுவே உள்ளே வரமுடியாத இடத்தில் குருவிகள் எங்கே வந்து கூடுகட்டி வசிக்கப்போகின்றன இது குருவிகளுக்கான இரண்டாவது சிக்கல்,அப்படியே வந்தாலும் இப்போது வீடுகளில் எங்கே சாய்மானத்தில் போட்டோக்கள் இருக்கின்றன இதுவும் பிரதான சிக்கல்.பிறந்த உயிரினங்கள் ஒவ்வொன்றும் வாழ்நதாக வேண்டுமே, ஆகவே வலை அடிக்காத வீடுகள் உள்ள உணவுப்பொருள் கிடைக்கக்கூடிய அரிசி மாவால் வீட்டு வாசலில் கோலமிடக்கூடிய கிராமங்களுக்கு சிட்டுக்குருவிகள் இடம் பெயர்ந்துவிட்டன.இந்த சிட்டுக்குருவிகளுக்கு என்று ஒரு குணம் உண்டு, அது மரத்திலோ, வெளியிலோ கூடு கட்டாது, காரணம் இதன் முட்டைகளை, குஞ்சுகளை காக்கா போன்ற பறவைகள் உணவாகக் கொண்டுவிடும் என்பதால்,காக்கா வரமுடியாத இடத்தில்தான் கூடு கட்டும்.அப்படி ஒரு கூண்டை வடிவமைத்து, அதை வீட்டின் தாழ்வாரம், வாராண்டா போன்ற உள்புற பாதுகாப்பான பகுதியில் வைத்துவிட்டால் போதும், குருவி தேடி வந்து அதில் தனக்கு தேவையான சிறகு மரக்குச்சி, வைக்கோல் கொண்டு கூடு கட்டிக்கொள்ளும், தனது இணையை அழைத்துவந்து குடும்பம் நடத்தி குஞ்சு பொரித்து அது அதன் வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளும்.ஒரு இடத்தில் குருவிகள் இருந்தால் அதன் சங்கீதமான சப்தமும்,சுறுசுறுப்பும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களுக்கும் சந்தோஷத்தை தரும்.இதை உணர்ந்து கணேசன் சுமார் 150 ரூபாய் செலவில் ஒரு பிளைவுட் கூடை தயாரித்து தனது வீட்டில் வைத்தார், ஆச்சரியமாக அடுத்த சில நாட்களிலேயே கூட்டில் குருவியின் சப்தம்.சந்தோஷப்பட்ட கணேசன் மேலும் சில கூடுகளை தயாரித்து வீட்டின் பல்வேறு இடங்களில் வைத்தார், வைத்த இடங்களில் எல்லாம் குருவிகள் வந்தன.இதைப் பார்த்து விருப்பத்துடன் கேட்ட நண்பர்கள் உறவினர்களுக்கு தன் சொந்த செலவிலேயே கூடுகளை செய்து கொடுத்தார்.இப்படி கூடுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றாலும் அவை நுாற்றுக்கணக்கில்தான் இருந்தன, ஆயிரக்கணக்கில் இதனை கொண்டு செல்ல எண்ணினார், அதற்கு மாணவர்கள்தான் சரியானவர்கள் என்பதை முடிவு செய்து ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களிடம் கொடுத்தார், அவர்களுடன் கூடவே சென்று வீட்டில் கூடுகளை மாட்டியும் கொடுத்தார்.இப்போது கூடுகளின் எண்ணிக்கை பல ஆயிரமாகியது.குருவி மீது கொண்ட கணேசனின் இந்த பாசம் காரணமாக இவரது பெயரே குருவி கணேசன் என்றானது.கூடு அறக்கட்டளை என்ற பெயரிலான இவரது குருவிக்கான தொண்டிற்கு நண்பர்கள் பலரும் நன்கொடை வழங்கிவருகின்றனர்.குருவி கணேசனின் மணைவியும் கல்லுாரி பேராசிரியையுமான சாந்தினியும் கணவருடன் இந்த தொண்டில் கைகோர்த்துள்ளார். வாரவிடுமுறையை குருவிகளின் நலனிற்காக கூடு செய்வதற்காகவே இந்த தம்பதிகள் செலவிடுகின்றனர்.இவர்களைப் பற்றி அறிந்த பிரதமர் மோடி தனது 'மனதின் குரல்' வானோலி நிகழ்ச்சயின் மூலம் கணேசனை சமீபத்தில் பெரிதும் பாராட்டிப் பேசினார்.பிரதமரின் பாராட்டு இந்த தம்பதிக்கு பெரிதும் உற்சாகத்தை தந்துள்ளது.இதன் காரணமாக இதுவரை பத்தாயிரம் கூடுகள் தந்துள்ள நிலையில் வருகின்ற 06/12/2024 ம் தேதி வெள்ளிக்கிழமை தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மேலும் ஆயிரம் மாணவர்களுக்கு குருவிக்கூடுகளை வழங்கவிருக்கிறார்.இதற்காக பள்ளியில் வழங்கப்பட்ட அறையில்தான் கூடுகளை தயாரிப்பில் மும்முரமாக இருந்தார், இவருடன் இவரது மணைவி சாந்தினி மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் இவரது குழந்தைகள் மோஷிகா,ஜெய்மித்தல்,கூடுகள் அறக்கட்டளை நண்பர் கிேஷார் ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர்.இப்போது கட்டுரையின் முதல் வரிக்கு செல்லலாம்...குருவி கணேசனுடன் பேசுவதற்காக எண் :95006 99699.(உடனே பேசவில்லை என்றால் பணியில் இருக்கிறார் என்று அர்த்தம், பேசவேண்டிய விஷயத்தை வாட்ஸ் அப் தகவலாக தந்துவிட்டு காத்திருங்கள் நேரம் ஒதுக்கி பின் அவரே பேசுவார்)-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Shiva raman
டிச 16, 2024 11:07

Congratulations குருவி கணேசன் சார்... Hats off..


Rengasamy Rajendran
டிச 05, 2024 10:09

வாழ்த்துகள் mam


saiprakash
டிச 03, 2024 14:01

வாழ்த்துக்கள் சார், தங்களின் பணி மென்மேலும் சிறக்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை