UPDATED : நவ 25, 2025 05:09 PM | ADDED : நவ 25, 2025 05:07 PM
பிரேசிலின் அமேசான்ஸ் மாநிலத்தில் உள்ள டபாவு நகரம் அருகில் உள்ளது அபுபாரி உயிரியல் பாதுகாப்பு மையம்.இது உலகின் முக்கியமான ஆமை இன பாதுகாப்பு நிலையங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அங்கு முதன்மையாக பாதுகாக்கப்படும் இனங்களில் ஒன்று பொடனெமிஸ் எனப்படும் தென் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆமையாகும்.மனித செயற்பாடுகள், வேட்டை, சுற்றுச்சூழல் மாசுபாடு, நதிப் பகுதி மாற்றம் போன்ற காரணங்களால் இந்த இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதால், இங்கு வருடம் தோறும் ஆயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் விஞ்ஞான ரீதியில் பராமரித்து பாதுகாக்கப்படுகின்றன.தாய் ஆமைகள் வந்து இங்குள்ள கடற்கரையில் முட்டையிட்டுவிட்டுச் செல்கின்றன.அத்தோடு அதன் தாய் சேய் உறவு முடிவுக்கு வந்துவிடுகிறது.காலம் கனிந்ததும் குஞ்சுகள் முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்து கடற்கரையை அடைந்து அங்குள்ள நீரோட்டத்தில் கலந்துவிட்டால் அதன்பிறகு அந்த ஆமைகள் தன் வாழ்க்கையை துவங்கிவிடும்.ஒரு உண்மை என்னவென்றால் இந்தச் சிறிய உயிர்கள் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பாதுகாப்பு தரும் உயிரினமாகும், இயற்கை சமநிலையில் ஆமைகள் ஆற்றும் பங்கு மிக முக்கியமானது; அவை நதிக்கரையின் தாவரங்களின் வளர்ச்சிக்கும் நீர்நிலைகளின் பராமரிப்புக்கும் துணை செய்கின்றன. ஒவ்வொரு ஆமைக் குஞ்சும் வளர்ந்து பெரியதாய் மாறினால், சுற்றுச்சூழல் அமைப்பும் வலுப்பெறும்.ஆனால் முட்டையில் இருந்து வெளியேறி நீரோட்டத்தை அடையும் வரை ஒரு பெரும் போராட்டம் நடத்தவேண்டியிருக்கும்.பறவைகள் விலங்குகள் இதனை உணவாக்கிக் கொள்ள சுற்றி சுற்றிவரும்,திசை மாறிப்போனால் பசியால் மடியவேண்டும் இதற்காக இதைக்காக்க பல தன்னார்வலர்கள் உள்ளனர்.உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அந்தச் சிறு ஆமை குஞ்சுகள் நீரை நோக்கி முன்னேறத் தயாராக இருக்கும் அப்போது அது மென்மையாக சப்தமிடுகிறது அது உண்மையில் சத்தம் அல்ல உயிர்வாழப் போகும் சந்தோஷம்.சில குஞ்சுகள் மணலில் தவழ்ந்து செல்ல தடுமாறும்; அப்போது தன்னார்வலர்கள் அதற்கு உதவி சரியான பாதையில் பயணிக்க செய்வர் , மாலை மங்கி இரவு துவங்கும் நேரத்தில்தான் பெரும்பாலும் ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் செல்லும் அந்த இருளில் அவைகளுக்கு வழியைக் காட்டும் விதத்தில் மெலிதாக டார்ச் லைட் விளக்கொளி காட்டுவர்.ஆமைக்குஞ்சுகள் தண்ணீரைத் தொடுவதற்குள் அலைகள் வந்து அன்போடு ஆதரவோடு அனைத்து தன்னுள் அழைத்துச் செல்கிறது,தனக்கான உறைவிடத்திற்கு வந்துவிட்ட உணர்வோடு உற்சாகத்தோடு அவைகள் கடலுக்குள் தங்கள் வாழ்க்கையை துவங்கிட செல்கிறது.அவைகளை வாழ்த்தி வழியனுப்பிவைப்போம்-எல்.முருகராஜ்.