சச்சின் செய்யாத சாதனை
அது 1987ஆம் வருடம். மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம். இந்திய அணி விளையாடிக்கொண்டிருந்தது. ஒரு சிறுவன் பந்து பொறுக்கிப் போட்டுக்கொண்டு இருந்தான். அதே மைதானத்தில் 2011ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. முன்னர் பந்து எடுத்துப் போட்ட அந்தச் சிறுவன் இப்பொழுது உலகம் போற்றும் கிரிக்கெட் வீரர்! அவர் சச்சின் டெண்டுல்கர்.சிறுவயதில் உறங்கும் போது கூட கிரிக்கெட் மட்டை, பந்து, ஹெல்மெட்டுடன் உறங்கியவர். பள்ளி நாட்களில் குறும்புகள் நிறைந்த சிறுவன்.சொந்தமாக உணவகம் வைத்திருக்கும் சச்சினுக்கு மிகவும் பிடித்த உணவு வடா பாவ். பன்னுக்குள் வடையைப் பொதிந்து வைத்தால், வடா பாவ் என்கிற மராட்டிய உணவு வகை! ஒரு பவுலராக வர வேண்டும் என்று சச்சின் விரும்பினார். ஆனால் கோச் ராம்காந்த் அச்ரேகர், (Ramakant Achrekar), 'நீ போய் பேட்டிங் பயிற்சி எடு' என்று சொன்னார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் உருவானார்.உலகக் கோப்பை (1999) போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் சச்சினின் தந்தை இறந்து போனார். நாடு திரும்பிய சச்சின், இறுதிச் சடங்கை முடித்த கையோடு போட்டிக்குச் சென்றார். கென்யாவிற்கு எதிரான அந்தப் போட்டியில் 141 ரன்கள் எடுத்தார்.டெஸ்ட் போட்டியில் 51 சதங்கள். ஒரு நாள் போட்டியில் 49 சதங்கள் என மொத்தம் 100 சதங்களைக் கடந்த ஒரே வீரர்.பிராட்மேன், சனத் ஜெய சூர்யா, ஷேர்ன் வார்னே, பிரையன் லாரா இப்படி உலக அளவில் உள்ள மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் பிடித்தமானவர் சச்சின்.இந்தியாவின் தேசியக்கொடியை தன் ஹெல்மெட்டில் பதித்து மரியாதை செலுத்திய முதல் வீரர். ஒரு நாள் போட்டியில் 154 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 46 விக்கெட்டுகளையும் எடுத்து பவுலராகவும் தன்னை நிரூபித்தவர். ஆல் ரவுண்டர். ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி என மொத்தமாக 76 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றவர். விக்கெட் கீப்பர் வேலை மட்டுமே இவர் களத்தில் செய்யாதது.'பிளேயிங் இட் மை வே' (playing it my way) சச்சின் எழுதிய சுய சரிதை நூல். சச்சின் ஆட வந்த புதிதில் அவருக்குப் பிடித்த நூல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேரி சோபர்ஸ் எழுதிய 'ட்வென்ட்டி இயர்ஸ் அட் த டாப்'.