உள்ளூர் செய்திகள்

பறவைகள் பலவிதம்!

விடுமுறை தினங்களில் இயற்கை சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும்? என்ன செய்யலாம்? பறவைகளைக் கவனிக்கலாம் அல்லது உற்றுநோக்கலாம். இந்தச் செயற்பாட்டை ஆங்கிலத்தில் 'Birding' என்று அழைக்கிறார்கள். தமிழில் 'பறவைகளைக் கவனித்தல்/உற்றுநோக்கல்' என்று சொல்லலாம். எனது சொந்த ஊர் திருவண்ணாமலை. அங்கு பள்ளியில் படித்த காலங்களில், நானும் எனது தம்பியும் 'World WildlifeFund' (WWF) நிறுவனத்தின் மாத இதழ்களை வரவழைத்துப் படித்து வந்தோம். அதில் பறவைகளைப் பற்றியும், பறவைகளைக் கவனிக்கும் செயற்பாடு பற்றியும் நிறைய செய்திகள் வரும். எங்களது வீட்டைச் சுற்றி இருக்கும் இடங்களில் என்னென்ன பறவைகள் இருக்கின்றன என்று கவனிக்கத் தொடங்கினோம். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளை எங்களால் காணமுடிந்தது. பொது நூலகங்களில் பறவைகளைப் பற்றிய நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினோம். வெளிநாட்டினர் வரும் ஊராக திருவண்ணாமலை இருப்பதால், அவர்கள் அங்குள்ள நூலகங்களுக்குப் பறவைகளைப் பற்றிய மிகச் சிறந்த வெளிநாட்டு நூல்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்கள். பல்வேறு பறவைகளைப் பற்றிய அரிய தகவல்களை அறிந்துகொள்ளத் தொடங்கினோம். வீட்டைச் சுற்றி இருக்கும் பறவைகளை அடையாளம் காண இந்த நூல்கள் உதவின. ஒரு நாள் 'கொண்டலாத்தி' (Hoopoe) பறவையை எங்கள் வீட்டருகே கண்டோம். எங்கள் பகுதியில் அதைப் பார்ப்போம் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இனி பறவைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்குள் நிலைபெற்றது. சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு, பொழுதுபோக்காக ஆரம்பித்தோம். இப்போது, பறவைகளின் செயற்பாடுகளைக் கவனிப்பது; அவற்றைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவது; பறவைகளைக் கணக்கெடுப்பது என்று காட்டுயிர் அறிவியல் செயற்பாடுகளில் மூழ்கிவிட்டோம். எங்கு வேண்டுமானாலும் காணலாம்!பறவைகளுக்கு எல்லைகள் இல்லை என்பதால், நமது பகுதிக்கே உரிய பறவைகள் மட்டுமல்லாமல், தொலைதூர தேசங்களில் இருந்து வலசை வரும் பறவைகளையும் நாம் காணமுடியும். எந்தக் காலத்தில், எந்த இடத்திற்கு, எத்தகைய செயற்பாடுகளுக்காகப் பறவைகள் வரும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்; நேரம் செலவிட்டுக் காத்திருந்தால் பறவைகள் உங்களுக்குக் காட்சி தரும். என்ன உபகரணங்கள் தேவை?தொடக்கத்தில் பறவைகளை வெற்றுக் கண்ணால் கூர்ந்து கவனித்தாலே போதும். பிறகு பைனாகுலர் பயன்படுத்தி அவற்றை உன்னிப்பாகக் கவனிக்கலாம். (8-X40 அளவு பைனாகுலர் போதுமானது). தூரத்தில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; அதில் நிறைய பறவைகள் இருக்கின்றன; தூரத்தில் இருந்து பார்க்கும்போது, அவை அனைத்தும் ஒன்று போலவே தோற்றமளிக்கும். அத்தகைய சூழலில் குறிப்பிட்ட வகை பறவைகளைக் கவனிக்க, 'ஸ்பாட்டிங் ஸ்கோப்' (Spotting scope) எனும் கருவி பயன்படும். கையால் தூக்கிச் செல்லக்கூடிய தொலைநோக்கி இது. ஆனால், இந்த உபகரணங்கள் எல்லாம் பொழுதுபோக்கு ஆய்வாக மாறும் சமயத்தில்தான் தேவைப்படும். சென்னையைச் சுற்றிப் பறவைகளை எங்கெல்லாம் பார்க்கலாம்?பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் சதுப்பு நிலங்கள், சிறுதாவூர் காப்புக் காடு, பழவேற்காடு சதுப்பு நில ஏரி, நன்மங்கலம் ஏரி போன்ற பகுதிகளில் விதவிதமான பறவைகளைப் பார்க்கலாம். பழவேற்காடு பறவைகள்பழவேற்காடு ஏரி, கடலை ஒட்டியுள்ள ஓர் உப்பு நீர் ஏரி. சென்னையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்திருக்கிறது. இரண்டு மணிநேரத்தில் காரில் சென்றுவிடலாம். பொதுவாகப் பறவைகளின் நடமாட்டத்தை சூரிய உதயத்தின்போதும், அஸ்தமனத்தின்போதும்தான் அதிகம் காணலாம் என்பதால், காலை 5.30 மணிக்கு பழவேற்காட்டுக்குச் சென்றுவிட வேண்டும். பழவேற்காட்டு ஏரிக்குள் ஆங்காங்கே மரங்கள் நிறைந்த குட்டிக் குட்டித் தீவுகள் இருக்கும். கடலில் உயர் அலைகள் வரும்போது ஏரியின் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். கடலில் இருந்து புகும் தண்ணீருடன் பறவைகளின் இரையான பல்வேறு மெல்லுடலிகள், ஓட்டுடலிகள் வரும். காலை வேளையில் தண்ணீர் வடிந்து கடலுக்குள் உள்ளிழுக்கப்படும்போது, சேற்றுக்குள் புதைந்த உயிரினங்கள் வெளியே வரும். பறவைகளின் வேட்டை தொடங்கும். நீரில் நடக்கும் பறவை வகைகள் (Wader) இரையைப் பிடிப்பதைக் காணலாம். உப்புக்கொத்தி (Sandplover), உள்ளான் (Sandpiper), கொசு உள்ளான் (Stint), கல்திருப்பி உள்ளான் (Ruddy-turnstone), மூக்கான் (Godwit) போன்றவை அவற்றில் ஒரு சில. இந்த வகைப் பறவைகளை வேட்டையாடவென்றே வெளிநாடுகளில் இருந்து, 'Perigrine falcon' (பொறி வல்லூறு) போன்ற பெரிய பறவைகள் வலசை வருகின்றன. காலை வேளையில் Wader வகைப் பறவைகள் தங்களுடைய இரைகளை சுறுசுறுப்பாக வேட்டையாடிவிட்டு, சூரியன் உச்சிக்கு வரத் தொடங்கும்போது ஓய்வெடுக்கத் தொடங்கும். இந்தச் சமயம் பார்த்து அவற்றைப் பிடிக்க வேட்டைப் பறவைகள் சுறுசுறுப்பாகும். அதனால், முன்மதிய வேளையில் வேட்டைப் பறவைகளின் நடமாட்டத்தைக் காணமுடியும். கடற்பருந்துகளையும் (White bellied sea eagle) பழவேற்காட்டில் காணலாம். இவை போக, இளஞ்சிவப்பு கால்களுடைய பூநாரைகளை (Flamingo) பழவேற்காட்டில் ஆயிரக் கணக்கில் காணலாம்.'நான் பறவைகளை இதுவரை கவனித்தது கிடையாது; பழவேற்காடு சென்றால் இந்தப் பறவைகளைப் பார்க்கலாமா? என்றால், நிச்சயம் பார்க்கலாம். கே.ஞானஸ்கந்தன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !