வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்1. சில நிமிடங்களே உயிர்வாழும் ஈசல் பூச்சிகள், வெளிச்சத்தை நோக்கிச் சென்று உயிர்விடக் காரணம் என்ன?லோகநாயகி, மின்னஞ்சல்.ஒரு சோதனை செய்து பாருங்கள். இரவில் உங்கள் வலது கையை நிலவை நோக்கிப் பக்கவாட்டில் பிடித்து, 90 டிகிரி திசையில் நடக்கவும். நீங்கள் செல்லும் பாதை நேர்கோட்டில் அமைவதால், நிலவு எப்போதும் வலதுபக்கமே இருக்கும். இதனால், நிலவு நம்முடன் வருவது போன்ற தோற்ற மயக்கம் ஏற்படும்.இயற்கை ஒளிகளான சூரியன், நிலவு ஆகியவற்றை வைத்தே, திசைகளை அறிந்து பூச்சிகள் பயணம் செய்கின்றன. நிலவை வலப்புறமாக வைத்துச் செல்லும் பூச்சி நேர்கோட்டில் செல்லும். ஆனால், மனிதன் உருவாக்கும் நெருப்பு, விளக்கு இவற்றால் பூச்சிகளுக்குக் குழப்பம் ஏற்படும். இவற்றை வைத்துப் பயணம் செய்யும் பூச்சி, திசை தடுமாறி விளக்கை சுற்றிச்சுற்றி வந்து மடிகிறது என, பூச்சியியல் நிபுணர்கள் கருத்து தெரிவிகின்றனர். இந்தக் கருத்து அவ்வளவு சரியாகப் பொருந்தி வரவில்லை என, வேறு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுமார் 4 லட்சம் ஆண்டுகளாக மனிதன் உருவாக்கிய ஒளி இருக்கிறது. இதனால், பூச்சிகளில் இயற்கை பரிணாம மாற்றம் நடந்து இதுபோன்ற குழப்பத்தைக் கைவிட்டு இருக்க வேண்டுமே என்று கேள்வி எழுவதால், இந்த விளக்கம் ஏற்பதற்கில்லை. இதற்கிடையில் பெண் பூச்சி ஆணைக் கவர்ந்து இழுக்க, வேதிப்பொருளை உமிழும். உமிழும் பொருளின் அகச்சிவப்புக் கதிரும், மெழுகுவத்தி போன்ற ஒளியின் அகச்சிவப்புக் கதிரும் ஒரே மாதிரியாக உள்ளது. இதனால், பெண் இணையைத் தேடிச் செல்லும் பூச்சிகள், விளக்கில் விழுந்து மடிகின்றன என, ஓர் ஆய்வு கூறியது. ஆனால், பூச்சிகள் புற ஊதா நிறத்தை நாடித்தான் அதிகம் செல்கின்றன என, ஆய்வுகள் வெளிப்படுத்திய நிலையில் இந்த விளக்கம் தவறானது. மேலும், ஆண், பெண் இருபால் பூச்சிகளும் விளக்கு ஒளியால் கவரப்படுகின்றன; இதில், பெண் பூச்சியின் சமிக்ஞையை நோக்கி ஏன் பெண் பூச்சிகளே செல்லவேண்டும் என்ற கேள்வியும் இந்தக் கருத்துக்கு எதிராக அமைந்தது. பூச்சிகள் ஏன் விளக்கொளியால் கவரப்படுகின்றன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. பௌர்ணமியைவிட அமாவாசைக்கு அருகே உள்ள நாட்களில் கூடுதலாகப் பூச்சிகள் விளக்கொளியில் கவரப்படுகின்றன என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதுவும் கூடுதல் மர்மம். பூச்சிகள் ஒளியைதேடிச் சென்று, தம்மைத்தாமே மாய்த்துக்கொள்வது குறித்து, உறுதியான அறிவியல் விளக்கம் இதுவரை இல்லை. 2. மனிதர்களின் பாதம், விலங்குகளின் பாதம்போல் தட்டையாக இல்லாமல் வளைந்து இருப்பது ஏன்? அதனால் என்ன பயன்?ஜெ.லட்சுமி தேவிப்ரியா, 12ம் வகுப்பு, கே.சி.ஏ.டி.சி.ஜி. பதின்ம மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.பூனை, சிங்கம் ஓணான் போன்றவற்றுக்கு மென்பாதம்; குதிரைக்குக் குளம்பு; ஓணானின் திண்டு போன்ற பாதம்; மனிதன், குரங்கு போன்றவற்றின் கால், பாதம் முதலியன எல்லாம், அடிப்படையில் ஒன்றுதான். புல்வெளியில் மேயும் குதிரை, மாடு போன்றவற்றுக்கு பரிணாமத்தின் பின்னணியில் குளம்பு போன்ற கால் நுனி ஏற்பட்டுள்ளது. குதிரை, ஆடு, மாடு போன்ற மேய்ச்சல் விலங்குகளின் ஐந்து விரல்களும் ஒன்றாகப் பிணைந்து, இணைந்து பரிணாமத்தில் குளம்பு என்ற வடிவம் பெற்றுள்ளது. நவீன மனிதர்களாகிய நாம், குரங்கு போன்ற ஒரு தொல் விலங்கிடமிருந்து பரிணாமம் அடைந்துள்ளோம். இந்த விலங்கு மரங்களில் தொங்கி மரக்கிளைகளில் நடந்து வாழ்ந்தன. எனவே, அவை கிளைகளைப் பற்றிக்கொள்வதற்கு விரல்கள் உதவின. சற்றே விரிந்த பாதம், கிளைகள் மீது நடக்கவும், மரங்களில் ஏறவும் உதவி புரிந்தன. 3. புல்லட் துளைக்காத ஆடை, கதிர்வீச்சு தாக்காத ஆடை போன்றவற்றைத் தயாரிக்க என்னென்ன தேவை?ஆர். அழகுமேகலா, விலங்கியல் மூன்றாம் ஆண்டு, இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.கெவ்லார் (Kevlar) எனும் பொருள் கொண்டு, புல்லட் துளைக்காத ஆடை தயாரிக்கிறார்கள். மிக வேகமான உந்த ஆற்றலுடன் பாயும் புல்லட் கெவ்லார் இழைகளின் ஊடே நுழையும்போது உராய்வு காரணமாக, அவற்றின் ஆற்றல் விரயமாகும். அந்த ஆற்றலை எளிதில் கடத்தும் தன்மை கொண்ட இந்தப் பொருள் புல்லட்டின் வேகத்தைக் குறைத்து, உடலில் பாய்வதைத் தடுக்கிறது. ஆல்பா, பீட்டா, காமா என மூன்று வகைக் கதிர்கள் உண்டு. இதில் ஆல்பா கதிருக்கு முன்னால் சாதாரண காகிதத்தை வைத்தால்கூட போதும், அந்தக் கதிர்வீச்சு தடுக்கப்படும். பீட்டா கதிர்வீச்சைத் தடுக்க, மெல்லிய அலுமினிய தகடு போதும். ஆனால், காமா கதிர்கள்தான் இருப்பதிலேயே மிக அதிக வீரியம் கொண்டவை. இவற்றால் சில சென்டிமீட்டர் தடிமனுள்ள ஈயத்தகட்டைக்கூட தாண்டிச் செல்ல முடியும்; சில மீட்டர் கான்கிரீட் சுவரையும் கடந்து செல்ல முடியும்.எக்ஸ்ரே (X - Ray) கதிர் படம் எடுக்கும் இடத்தில் எக்ஸ்ரே அல்லது காமா கதிர்வீச்சு, ஊழியர் மீது படாமல் இருக்கவே ஈயத் தகடுகள் பொருத்திய ஆடையை அணிகின்றனர். இவற்றின் எடை மிகக் கூடுதலாக இருக்கும். இத்தகைய ஆடைகள் இருந்தாலும், எல்லா நேரத்திலும் எல்லாக் கதிர்வீச்சையும் தடுக்கும் வகை ஆடைகள் தயாரிப்பது சாத்தியம் இல்லை.