உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்கள்!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி பூமியின் நடுப்பகுதியில் என்ன இருக்கிறது? அங்கு எவ்வளவு வெப்பம் இருக்கும்?ரஞ்சித் குமார், 8ஆம் வகுப்பு ஆ, அரசு மேல்நிலைப்பள்ளி, கருவலூர்பூமியின் மையத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. நட்டநடுவில் 1,220 கி.மீ. ஆரம் அளவு கொண்ட, திட நிலையிலான இரும்புப் பந்து உள்ளது. அதைச் சுற்றி இளகிய குழம்பு நிலையில் இரும்பு + நிக்கல் உலோகக் கலவையிலான வெளிக்கரு உள்ளது. சமீபத்தில்தான் எக்ஸ் கதிர் ஆய்வு மூலம் இரும்பு உருகக்கூடிய வெப்பநிலை எது என்பதை அளவீடு செய்துள்ளனர். இந்த ஆய்வின் துணைகொண்டு உள்கரு - வெளிக்கரு சந்திக்கும் பகுதியில் சூரியனின் மேற்புற வெப்பத்துக்குச் சமமான அளவில் 6,000 டிகிரி வெப்பநிலை உள்ளது என மதிப்பீடு செய்துள்ளனர்.புகைபிடிப்பதால் ஆண்களுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால் புகைப்பழக்கம் இல்லாத பெண்களுக்கு ஏன் புற்றுநோய் வருகிறது?பா.ஸ்ரீஹரி, 7 D, M.R.R.M.A.V.M.M மெட்ரிக் பள்ளி, மதுரைபுற்றுநோய் என்பது இயல்பு நிலைக்கு மாறாக உடலின் குறிப்பிட்ட பகுதியில் செல்கள் கட்டுகடங்காமல் பல்கிப் பெருகுவதுதான். இவ்வாறு பெருகும் புற்றுநோய் செல்கள், வேறு திசுக்களிலும் புகுந்து, அங்கும் தன் நாசவேலையைச் செய்யத் தொடங்கும். புற்றுநோய் உருவாக புகைப் பழக்கம் ஒரு காரணி. சில சமயம் புற்றுநோய் ஏற்படுத்தும் குறைபட்ட ஜீன் காரணமாக, வம்சாவளியாக புற்றுநோய் ஏற்படலாம். சூழல் மாசு புற்றுநோயைத் தூண்டலாம். சிலவகை உணவுப் பொருள்கள்கூட புற்றுநோய்க்குக் காரணம் ஆகலாம். ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் எனப் பல்வேறு வகை புற்றுநோய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் பல்வேறு வகையான காரணிகள் உள்ளன.பால், குழம்பு சூடாக இருக்கும்போது அதில் ஆடை ஏற்படுவது போல நீரில் ஏன் ஏற்படுவதில்லை?தி.கயல்விழி, 10ஆம் வகுப்பு, சாவறா வித்யா பவன் பள்ளி, பா.நா.புதூர், கோவை.நீங்கள் குறிப்பிடும் ஆடை என்பது என்ன என்று புரிந்துகொண்டால் இதற்கு விடை உடனடியாக கிடைத்துவிடும். பால், குழம்பு முதலியவற்றில் தோன்றும் ஆடை போன்ற பகுதியை, ஆறியதும் எடுத்துப் பார்த்தால் சவ்வு போல இருக்கும். பாலில் உள்ள கொழுப்பு, புரதம் முதலியவை சீக்கிரம் கொதிநிலைக்கு வந்துவிடும். பால் என்ற கூழ்மத்திலிருந்து பிரிந்து வரும் அடர்த்தி குறைவான கொழுப்பு, மேலே வந்து, மேற்பரப்பில் மெல்லிய படலமாகப் படிந்துவிடும். சாம்பார் முதலியவற்றைப் பொறுத்தவரை, சமையலின்போது நாம் சேர்க்கும் எண்ணெய் மற்றும் சாம்பாரில் போடப்படும் காய்கறிகள் ஆகியவற்றில் இருந்து பிரிந்துவரும் புரதம், கொழுப்பு முதலியவை மேலே படர்ந்து மெல்லிய படலமாகப் படியும். நீரில் கொழுப்பு முதலியவை இருக்காது. எனவே, படலம் படிவது இல்லை.வாகனங்களில் சக்கரங்கள் இயங்குவதற்கு காற்று ஏன் தேவைப்படுகிறது?M.ப்ரணவ், 10ஆம் வகுப்பு, லிஸ்யு மேல்நிலை பள்ளி, கோவைகார், பஸ், சைக்கிள் போன்ற வாகனங்களின் சக்கரங்களுக்கு முக்கியமாக மூன்று குணங்கள் தேவை. முதலாவதாக வாகனத்தின் எடையின் காரணமாக சக்கரத்தின் வடிவம் மாறிவிடக்கூடாது. இரண்டாவதாக, எடை குறைவாக இருக்கவேண்டும். சக்கரத்தின் எடை குறையக்குறைய ஆற்றல் விரயம் குறையும். வாகனம் குறைந்த ஆற்றலில் வேகமாக செல்ல முடியும். பத்து மடங்கு கூடுதல் எடை உடைய சைக்கிளை மிதிக்க வேண்டிவந்தால் என்ன ஆகும்? கற்பனை செய்து பாருங்கள். எடை குறைவான ஆனால் எளிதில் தேயாத ரப்பரில் செய்துவிடலாமே, காற்று ஏன் அடைக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். சாலைகளில் கற்களும் மேடு, பள்ளங்களும் இருக்கும். அவற்றின் மீது சக்கரம் ஏறும்போது நெகிழ்வாக வளைந்து கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அதிர்வுகள் பாய்ந்து பயணம் கஷ்டம் ஆகிவிடும். ரப்பர் மட்டும் உடைய சக்கரத்தை ஒரு செமீ வளையச் செய்ய பெரும் விசை தேவை. ஆனால் காற்றழுத்தத்தை போல நான்கு மடங்கு காற்று நிரப்பிய சக்கரம் உறுதியாக இருப்பதுடன் சற்றே நெகிழ்வுத் தன்மையோடு செயல்படும். அவை உராய்வினால் எளிதில் தேயக் கூடாது. எடை குறைவாகவும் இருக்கவேண்டும். மூன்றாவது அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடாது. 'ஒரே கல்லில் மூன்று மாங்காய்' தருவது காற்று அடைத்த ரப்பர் சக்கரம். உலோகத்தில் மற்றும் ரப்பரில் பாயும் அதே அளவு அதிர்வுகள் காற்று நிரப்பிய சக்கரத்தில் பாயாது. அலுங்கல் குலுங்கல் குறைவாக இருக்கும். முதியவர்களுக்கு கண்களில் ஏன் கேட்ராக்ட் உருவாகிறது?ப.ரா.ஸௌம்ய ந்ருஸிம்ஹன், 5-ஆம் வகுப்பு, சர். சிவசாமி கலாலயா, சென்னை.கேட்ராக்ட் என்பதை 'கண்களில் பூ விழுவது' என்பர். தெளிந்த விழி லென்ஸ், முட்டையின் வெள்ளைக் கரு போல கலங்கிய நிலையை அடைவதுதான் கேட்ராக்ட். ஆண்டுதோறும் 38 லட்சம் பேர் கேட்ராக்ட் ஏற்பட்டு, பார்வைத் திறன் இழந்து போகின்றனர் எனவும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் இந்தியாவில் 8.5% பேருக்கு கேட்ராக்ட் உள்ளது எனவும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கருவிழியின் நடுவே உள்ள பாவையின் பின்புறமாக விழி லென்ஸ் உள்ளது. கேமராவின் லென்ஸ் போல விழி லென்ஸ், ஒளியை சரியாக விழித்திரையில் குவியசெய்து பிம்பத்தை ஏற்படுத்துகிறது. கேமராவின் லென்ஸ் கண்ணாடியால் ஆனது. ஆனால் விழி லென்ஸ் சிலவகைப் புரதம் மற்றும் நீரினால் ஆனது. புரதப் பொருள் சரியான ஒழுங்கில் அமைந்து இருந்தால் லென்ஸ் சரியாக வேலை செய்யும். புரதப் பொருட்கள் சிதைந்து போனாலோ, அந்தக் கலவை கட்டிதட்டிப் போனாலோ கண்களில் கேட்ராக்ட் ஏற்படும். வயது மூப்பு ஏற்படுவது முதல் நீரழிவு நோய் உட்பட பல நோய்களும் இந்தப் போக்கை தூண்டக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !