வெங்கியைக் கேளுங்கள்
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி100 வருஷத்துக்கு ஒரு முறை, ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துடன் 2 மில்லி விநாடிகள் சேர்கிறது என்கிறார்கள். அதாவது, பூமி ஒரு முறை சுழல்வதற்கான வேகம் குறைகிறது என்று பொருள். அப்படியானால் ஒரு காலத்தில் பூமி தன்னைத்தானே சுழல்வதை நிறுத்திவிடுமா?தி.இறையன்பு, 10ஆம் வகுப்பு, புனித ஜோசப் பள்ளி, அச்சிறுப்பாக்கம்.நிலவின் ஈர்ப்பு விசை, பூமியில் கடல் ஏற்ற இறக்க (Tides) நிகழ்வுகளை ஏற்படுத்தும்போது பூமியின் சுழற்சிக்கு பிரேக் போல ஆகிறது. இதன் காரணமாக பூமியின் சுழல் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இதன் பொருள் பூமி முன்பு வெகு வேகமாகச் சுற்றி வந்தது என்பதுதான். அணு கடிகாரத்தின் அளவீடுகளின்படி ஓர் ஆண்டுக்கு சுமார் 1.7 மில்லி செகண்டு ஒவ்வொரு நாளும் நீண்டு போகிறது. எனில் சுமார் 24.5 கோடி ஆண்டுகள் முன்பு ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் என்றுதான் இருந்தது. இதே நிலை நீடித்தால் சுமார் 500 கோடி ஆண்டுகள் அப்புறம் அன்றைய 'ஒரு நாள்' (பூமியின் ஒரு சுழற்சி) என்பது சுமார் ஒரு மாதம் அளவு என நீண்டு விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். நிலவு தன்னைதானே சுற்றும் காலமும் பூமியை சுற்றிவரும் காலமும் ஏறக்குறைய ஒரே காலம்தான். அதனால்தான் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியிலிருந்து பார்க்க முடிகிறது. பூமி தன்னைத்தானே சுழலும் காலம் ஒரு மாதம் என ஆகி விட்டால், பூமியின் ஒரு பகுதி மட்டுமே நிலவைப் பார்த்தபடி அமைந்துவிடும். அந்த நிலையில் பூமியும் நிலவும் தட்டாமாலை சுற்றும்போது முகம் நோக்கி இருப்பதுபோல அமைந்து ஒன்றையொன்று சுழலும். அதாவது நிலவின் பார்வையில் பூமி சுற்றாது. இதன் மற்றொரு விளைவு என்னவென்றால், ஒவ்வொரு வருடமும் நிலவு நம்மை விட்டு சுமார் 3 செ.மீ. விலகிச் செல்கிறது. 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு நிலவு வெகு தொலைவு சென்று விட, மிகச் சிறியதாகத்தான் தெரியும். முழு சூரிய கிரகணம் ஏற்படவே ஏற்படாது; வளை சூரிய கிரகணம் கூடுதலாகத் தென்படும்.கோடை அக்னி நட்சத்திர காலத்தில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கக் காரணம் என்ன?ச.கார்த்திகா, 7ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை.சித்திரை மாதம் 21-ம் தேதி தொடங்கி, வைகாசி 14-ம் நாள் வரையிலான காலத்தை அக்னி நட்சத்திரம் என்கின்றனர். ஆனால், கோடை வெயிலுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பூமியின் சுழல் அச்சு 23.5 பாகை சாய்வாக சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றும்போது பூமியின் வடபுலம் (Northern Hemispheres) ஆறு மாதம் சூரிய ஒளி நேராக விழும் வகையிலும், அடுத்த ஆறு மாதம் தென்புலத்தில் (Southern Hemispheres) சூரிய ஒளி நேராக விழும் வகையிலும் அமையும். சூரிய ஒளி நேராக விழும் காலம்தான் கோடை. சாய்வாகப் படியும் காலம் குளிர் காலம். நிலநடுக்கோட்டுக்கு அருகே உள்ள தமிழகப் பகுதியில் சூரியனின் கதிர் நேர்கோணத்தில் விழும் காலமே கத்திரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரக் காலம். இக்காலத்தில் கடும் வெப்பம் நிலவும். இதுவே அறிவியல் மெய். கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் உள்ள காலம் கத்திரி. எடுத்துக்காட்டாக, 2016ல் மே 4 துவங்கி மே 28 வரை அக்னி நட்சத்திர காலம், எனவும் இதில் மே 11 துவங்கி 25 வரை கத்திரி என்றும் கூறுவார்கள். கத்திரி காலத்தில் மிக அதிக வெப்பம் காரணமாக வைரஸ்களால் தோன்றும் அம்மை, காலரா முதலிய நோய்கள் பெருகும் வாய்ப்பு கூடுதல். எனவே முற்காலத்தில் கத்திரி வெயில் என்பது கவலையுடன் பார்க்கப்பட்டது. கனிம நீர் (மினரல் வாட்டர்) உடலுக்கு நல்லதா? தண்ணீரில் சேர்க்கப்படும் கனிமங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?என்.ரோஹித், பிருந்தாவன் பள்ளி, செங்கல்பட்டு.எல்லா மினரல் வாட்டரும் செயற்கையாக கனிமப் பொருள் சேர்க்கப்பட்டவை அல்ல. இயற்கை ஊற்றுகளிலிருந்து பெறப்பட்டு உயர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதும் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை BIS தரக்கட்டுப்பாட்டின்படி எவ்விதச் சுத்திகரிப்பும் தாதுக்கனிமப் பொருள் கூட்டலும் இன்றி இயற்கையாக நிலத்துக்கு அடியிலிருந்து எடுக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நீர் மட்டுமே இயற்கை கனிம நீர் (natural mineral water). விரல் விட்டு எண்ணும் சில நிறுவனங்கள் மட்டுமே இவ்வாறு 'மெய்யான' கனிம நீரை விற்பனை செய்கின்றன. மற்றபடி பாட்டில் செய்யப்பட்ட குடிநீர் என்பது ஆறு, குளம், நிலத்தடி நீர் என எங்கிருந்து வேண்டுமென்றாலும் நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுவதுதான். இதைத்தான் பெரும்பாலும் நாம் 'மினரல் வாட்டர்' என கருதுகிறோம். கவனமாகப் படித்தால் அதில் 'Packaged Drinking Water' என்றுதான் போட்டிருப்பார்கள். 'இயற்கையான பனி ஆற்றிலிருந்து பெறப்பட்டது'; 'மனிதன் கைபடாத இயற்கை ஊற்றிலிருந்து பெறப்பட்டது' என விளம்பரப்படுத்தப்பட்டாலும் நமக்கு கிடைக்கும் பாட்டில் நீர் எல்லாம் நிலத்தடி நீரிலிருந்து பெறப்பட்டதுதான். வறியவர்களுக்கு பாதுகாப்பான நீர் கூட கிடைப்பதில்லை என்ற சமூக அநீதி ஒரு பக்கம் இருக்க, பாட்டிலில் அடைத்து நீர் விற்பது சூழலுக்குக் கேடு. அனைவருக்கும் பாதுகாப்பான சுத்திகரிகப்பட்ட குடிநீர் எனும் கொள்கைதான் மனிதாபிமான செயல். அதுதான் அறிவியல் பார்வையும் கூட. சுழலும்போது சமநிலையில் நிற்கும் பம்பரம் சுழலாதபோது சாய்ந்து விடுகிறதே, ஏன்?ஜெ. ஹனிஷ்கா, ஸ்ரீ ஆனந்த் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேற்கு தாம்பரம், சென்னை.சுழல் உந்தக்காப்பு அல்லது சுழல் உந்தம் அழியாமை விதி (Conservation of angular momentum) எனப்படும் இயற்பியல் விதிதான் இதற்கு முக்கிய காரணம். எந்த அமைப்பின் சுழல் உந்தமும் புதிதாக வெளிவிசை வராத வரைக்கும் கூடவோ குறையவோ செய்யாது என்பதுதான் இந்த விதி. சுழலும் பம்பரத்தின் சுழல் உந்தம், அதன் சுழல் அச்சுக்கு செங்குத்தாக இருக்கும். அதாவது பம்பரம் சுழலத் தொடங்கும்போது அதன் சுழல் உந்த திசை தரையிலிருந்து கிடை நிலையில் இருக்கும். ஈர்ப்பு விசையின் காரணமாக தலை சாய்ந்தால் அதன் சுழல் உந்தத் திசை மாறிவிடும் அல்லவா? அதன் காரணமாக கிடை நிலையில் ஏற்கெனவே இருந்த சுழல் உந்தம் குறைந்து போகும். பம்பரம் எவ்வளவு வேகத்தில் சுழல்கிறதோ அதே அளவு கூடுதலாக அதன் சுழல் உந்தம் இருக்கும். எனவே கூடுதல் வேகத்துடன் சுழலும் பம்பரம் மேலும் நிலையாக தலை சாயாமல் இருக்கும். வேகமாக சுழலும் பம்பரம் கூடுதலாக ஈர்ப்பு விசையை எதிர்த்து செயல்பட முடியும். பம்பரம் சுழலாமல் இருக்கும்போது அதற்கு சுழல் உந்தம் இல்லை. எனவே அது ஈர்ப்பு விசையில் தலை சாய்வதை தடுக்க வேறு எந்த விசையும் இல்லை என்று ஆகிறது. இந்தத் தத்துவத்தை பயன்படுத்தி விண்வெளிக்கு ஏவப்படும் விண்கலங்கள், தாம் செல்லும் பாதையை சுழல் அச்சாக கொண்டு தம்மைத்தாமே சுழலும்படிதான் செலுத்துவார்கள். அதன் காரணமாக அதன் செல்லும் பாதையில் தடுமாற்றம் குறையும்.