உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்கள்!

மாணவர்கள் கேள்விக்கு பதில் சொல்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிகடுங்குளிரில் பேசும்போது வாயில் இருந்து புகை வருவது போல இருக்கிறதே அது ஏன்?ரொனால்ட் ஆண்டர்சன், 8ஆம் வகுப்பு, ஆல்பா பள்ளி, செம்பாக்கம்.கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டியைப் போட்டு வெளியே வைத்தால் அந்த டம்ளருக்கு 'வியர்க்கும்'! அதன் வெளியே நீர்த் திவலைகள் திரண்டிருக்கும். காற்றில் உள்ள நீராவி ஐஸ் நிரம்பிய டம்ளரில் பட்டுக் குளிர்ந்து திரவ நிலையை அடைவதால்தான் நீர்த் திவலைகள் தோன்றுகின்றன. அதே போல வாயிலிருந்து கொஞ்சம் ஈரப்பதத்துடன் காற்று வெளியே வரும்போது அதில் உள்ள நீராவி கடும் குளிரில் குளிர்ந்து திரவமாக மாறி நுண் திவலைகளாக உருவாகும். அதுதான் புகை போல நம் கண்களுக்குத் தென்படுகிறது. அந்தப் புகை என்பது மிகமிக நுண்ணிய நீர்த் திவலைகளின் தொகுப்புதான். அண்டம் (பிரபஞ்சம்) எவ்வளவு பெரியது? 'மல்டிவர்ஸ்' (Multiverse) என்கிறார்களே அதெல்லாம் உண்மைதானா?ஜ. லோகேஷ்வரன், 10ஆம் வகுப்பு, எஸ்.ஜே.எஸ்.வி. மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்.இந்தக் கேள்விக்கு விடை இன்று வரை யாருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை! ஒளி ஒரு நொடியில் மூன்று லட்சம் கிலோ மீட்டர் செல்லும். ஓர் ஆண்டில் ஒளி சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. செல்லும். இதுவே ஓர் ஒளி ஆண்டு தொலைவு. பிரபஞ்ச (Universe) தோற்ற நிகழ்வான பெருவெடிப்பு (பிக் பாங் / Big Bang) நடந்து 1380 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்த தொலைவுக்கும் அப்பால் ஏதாவது பொருள் இருந்தால் அதிலிருந்து ஒளி, எதிர்காலத்தில்தான் பூமியை வந்து அடையும். எனவே வானவியலாளர்கள் 'காணும் பிரபஞ்சம்' (Visible Universe) என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளனர். காணும் பிரபஞ்சம் என்பது ஒளி பூமியை வந்து அடையக்கூடிய தொலைவில் உள்ள பிரபஞ்சப் பகுதி. ஒரு திசையில் 1380 கோடி ஒளியாண்டு அதற்கு எதிர்த் திசையில் 1380 கோடி ஒளியாண்டு என ஆக மொத்தம் சுமார் 2760 கோடி ஒளி ஆண்டு விட்டம் கொண்ட பந்துதான் 'காணும் பிரபஞ்சம்'. பிரபஞ்சம் விரிந்து கொண்டே இருக்கிறது. பிரபஞ்சத்தில் ஒவ்வொரு வான் பொருளும் ஒன்றைவிட்டு ஒன்று அகன்று சென்றுகொண்டு இருக்கிறது. பிரபஞ்சம் தோன்றிய ேபாது சுமார் 1380 கோடி ஒளியாண்டு தொலைவில் இருந்த ஒரு வான் பொருள், இன்று நம்மை விட்டு 1380 கோடி ஒளியாண்டு அகன்று சென்று இருக்கவேண்டும். எனவே காணும் பிரபஞ்சம் குறைந்த பட்சம் 9200 கோடி ஒளியாண்டு அளவு இருக்க வேண்டும். நமது கண்களுக்குப் புலப்படும் மிகச் சிறிய தூசு சுமார் 5-10 மைக்ரான் அளவு இருக்கும். ஒரு மீட்டரின் பத்து லட்சம் பகுதியில் ஒன்றுதான் மைக்ரான். பூமியை ஒரு தூசு எனக் கொண்டால் காணும் பிரபஞ்சம் ஐந்தாயிரம் கோடி கி.மீ. ஆக இருக்கும். அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் நாம் வெறும் தூசு! வானில் தெரியும் விண்மீன்கள் எல்லாம் சூரியன் போலத்தான் என நாம் அறிவோம். அதேபோல இந்த பிரபஞ்சம் மாதிரி வேறு பிரபஞ்சங்கள் உண்டா என்பதுதான் 'மல்டிவேர்ஸ்' கருதுகோள். இன்றளவில் இது வெறும் யூகம் மட்டுமே. வேறு பிரபஞ்சங்கள் உண்டா என்பது குறித்து நமக்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை. வயதானால், முடியின் நிறம் வெள்ளையாக மாறுவது ஏன்? இயல்பாகவே கருமை நிற முடி இல்லாத வெளிநாட்டவர்க்கு வயதானால் முடியின் நிறம் என்னவாக மாறும்?கை.அக்ஷதா, 12ஆம் வகுப்பு, மகாத்மா CBSE, மதுரை.உலக மக்களின் தலை முடி நிறம் கருப்பு, சிவப்பு, பழுப்பு, பொன்னிறம் என பல வகைகளில் அமையக்கூடும். பல வண்ணத்தில் தலை முடி இருந்தாலும் இரண்டே இரண்டு நிறமிகள் (Pigment) மட்டுமே இதற்குக் காரணம். இவற்றுள் யூமெலானின் (Eumelanin) என்கிற நிறமிதான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். இதில் மற்றொரு வகை யூமெலானின் பழுப்பு நிறத்தை தரும். பொமேலானின் (Pheomelanin) என்கிற நிறமி அதிகமாக இருந்தால், தலை முடி செம்பட்டையாக அல்லது ஆரஞ்சு நிறத்தில் அமையும். இந்தியர்களின் மரபணுவில் கருமை யூமெலானின் அதிகமாக இருப்பதால் நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது. அதே சமயம் குறைவான அளவில் பழுப்பு யூமெலானின் சுரந்தால் அந்த தலைமுடி பொன்னிறமாக காட்சி தரும். பழுப்பு யூமெலானின் கூடுதலாக சுரந்தால் அது பழுப்பு முடியாகிவிடும். வயது கூடக் கூட தலை முடி வளரும் வேர் முனையில் இந்த நிறமி சுரப்பு நின்று போகும்போதுதான் தலை முடி கருமை இழந்து நரை முடி வெள்ளை முடி தோன்றுகிறது. சிவப்பு நிற முடி உடையவர்களுக்கு துவக்கத்தில் கடல் மணல் போன்ற தலைமுடி நிறம் வந்து இறுதியில் வெள்ளை முடி ஏற்படும். அவ்வாறே எல்லோருக்கும் நிறமிகள் சுரப்பு குறையும்போது தலைமுடி வெள்ளையாக மாறும். பல டன் எடையுள்ள கப்பல் கடலில் மிதக்கிறது. ஆனால், ஒரு குண்டூசியைக் கடலில் போட்டால் மூழ்கி விடுகிறது. காரணம் என்ன?க.காவ்யா, 12ஆம் வகுப்பு, என்.எஸ்.வி.வி.மெட்ரிக், திண்டுக்கல்.டி.ஷீலாஸ்ரீ, 10ஆம் வகுப்பு, குழந்தை இயேசு மெட்ரிக், தேவகோட்டை.எடைக்கும், திணிவுக்கும் (Density) உள்ள வேறுபாடுதான் இதன் அடிப்படை. ஒரு கிலோ இரும்பு எடைக் கல்லை எடுத்துக் கொள்வோம். அதன் அளவு என்ன? உள்ளங்கையில் அடக்கிவிட முடியும். ஒரு கிலோ பஞ்சை எடுத்துக் கொள்வோம். அதன் அளவு எப்படி இருக்கும்? அதே ஒரு கிலோ விரிந்து பரந்த பரப்பில் இருக்கும் போதும் அதன் திணிவு குறைந்து போகும் அல்லவா? எனவே பஞ்சு மிதக்கிறது. அதே போல அந்த ஒரு கிலோ இரும்பை அடித்து தகரம் போல மெலிதாக்கிக் கப்பல் வடிவில் செய்தால் நமது காட்சிக்கு இரும்பு மட்டுமே தென்படுகிறது. ஆயினும், கப்பலின் குழிவான பகுதிக்குள் காற்று நிரம்பியுள்ளது என்பதை நினைவில் கொள்க. காற்றின் திணிவு, நீரின் திணிவில் வெறும் ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே. எனவே இரும்பும் காற்றும் சேர்ந்த அந்த கப்பலின் திணிவு நீரை விட வெகுவாகக் குறைந்து விடும். திரவம் மற்றும் காற்றில் அவற்றின் திணிவை விட, திணிவு குறைவான பொருள்கள் மிதக்கும். அதைவிட திணிவு கூடுதல் உள்ள பொருள்கள் மூழ்கும். ஒரு பொருளின் எடைக்குத் தகுந்தது போல கீழ் நோக்கி ஈர்ப்பு விசை இழுக்கும். அதே சமயத்தில் அந்தப் பொருள் விலக்கும் நீரின் (அல்லது காற்றை) எடைக்கு ஏற்ற அளவு மேல் நோக்கிய மிதப்பு விசை (buoyant) இருக்கும். அதே எடை உள்ள பொருள் விரிந்து திணிவு குறைவாக இருந்தால் கூடுதல் நீரை விலக்கும் அல்லவா? எனவே அதன் எடையினால் கீழ் நோக்கியுள்ள ஈர்ப்பு விசையை விட மேல்நோக்கிய மிதப்பு விசை அதிகமாகி மிதக்கும். கப்பல் என்ன... சனிக் கோளைக் கூட மிதக்க விடலாம்! சனிக் கோள் மிக மிகப் பெரியது. பூமியைப் போல பலமடங்கு அதிக நிறை கொண்டது. ஆயினும் பெரிய நீச்சல் குளம் கட்டி அதில் அதனைப் போட்டால் மிதக்கும்! ஏனென்றால் சனியின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிட குறைவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !