வெங்கியை கேளுங்கள்
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிநிலாவில்தான் ராக்கெட் ஏவுதளம் இல்லையே! பிறகு எப்படி நீல் ஆம்ஸ்ட்ராங் அங்கிருந்து பூமிக்கு வந்தார்? நிலாவுக்குச் சென்றது உண்மையா, பொய்யா? தெளிவுபடுத்தவும்.சி.யாழினி, 4ஆம் வகுப்பு, ஃபுஸ்கோஸ் மெட்ரிக், மதுரை.நிலாவுக்குச் சென்ற விண்கலம் தொடர்வண்டி (Train) போல பல அடுக்குகள் கொண்ட அமைப்பு. மிகவும் வலிமை வாய்ந்த ராக்கெட் மூலமாக, 0பூமியிலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் முக்கியமாக இரண்டு பகுதிகள் இருந்தன. ஒன்று நிலவைச் சுற்றியபடி இருந்த தாய் கலம். இரண்டாவது நிலவில் இறங்கிய சேய் கலம். சேய் கலத்தில் இரண்டு பகுதிகள். நிலவில் இறங்கி நிற்க உதவும் இறங்கு - ஏவு தளம்; மற்றொன்று விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் கலம்.நிலவை அடைந்ததும், சேய் கலம் தாய் கலத்திலிருந்து பிரிந்து, இரண்டு விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கிச் சென்றது. தாய் கலம், மீதமுள்ள ஒரு விண்வெளி வீரரைத் தாங்கி, நிலவைச் சுற்றி வந்தது. நிலவை நோக்கிச் செல்லும் விண்கலம் நிலவில் மோதி உடையும் வாய்ப்பு இருக்கிறது. எனவே கீழே விழும் திசையில் ராக்கெட்டைச் செலுத்துவார்கள். அதாவது, நிலவின் ஈர்ப்பு சக்தி, சேய் கலத்தை நிலவை நோக்கி இழுக்க, கீழ் நோக்கிச் செலுத்தப்படும் ராக்கெட் சேய் கலத்திற்கு, மேல் நோக்கிய உந்து விசை தரும். இரண்டு எதிரும் புதிருமான விசையின் காரணமாக மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து சேய் கலம் நிலவின் தரையைத் தொடும்.நிலவில் ஆய்வுகள் முடிந்தபின்னர் இரண்டு விண்வெளி வீரர்களும் சேய் கலத்தின் மேல் பகுதிக்குச் செல்வார்கள்.. சேய் கலம் இரண்டாகப் பிரியும். சேய் கலத்தின் கால் பகுதி ராக்கெட் ஏவுதளமாகச் செயல்படும். அதன் மேல் பகுதி மட்டும், விண்வெளி வீரர்கள் மற்றும் அங்கே சேகரித்த கல், மண் போன்ற பொருட்களுடன் நிலவிலிருந்து மேலே எழும். நிலவின் மேலே வந்ததும், அங்கே இருக்கும் தாய் கலத்துடன் இணையும். பின்னர் தாய் கலத்தை மூன்று விண்வெளி வீரர்களும் பூமியை நோக்கிச் செலுத்துவார்கள். பூமிக்கு அருகே வரும்போது தாய் கலத்தின் தலைப் பகுதியில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு விண்வெளி வீரர்கள் செல்வார்கள். மற்ற பகுதிகள் பிரிக்கப்பட்டு விண்வெளியில் விடப்படும். இவர்கள் அடங்கிய ஒரு சிறு பகுதி மட்டும் பூமியை வந்தடையும்.அப்போலோ விண்வெளி வீரர்கள் நிலவில் விட்டு வந்த இறங்கு - ஏவு தள சேய் கல பகுதிகள், இன்னும் அங்கேயே உள்ளன. நிலவில் காற்று மழை என எதுவும் இல்லாததால், பல லட்சம் வருடங்கள் அவை அப்படியே இருக்கும். எதிர்காலத்தில் நிலவில் குடி புகும் மனிதர்கள் அதனைக் காணலாம். நிலவுக்கு மனிதனை அனுப்பிப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி அழைத்துவருவது என்பது மிகப்பெரும் தொழில்நுட்ப சாதனைதான்!சளி சுரக்கும்போது, நமக்கு ஏன் இருமல் வருகிறது?அழகு மேகலா,இளங்கலை - விலங்கியல் இரண்டாம் ஆண்டு, E.M.G.யாதவா மகளிர் கல்லூரி, மதுரை.நுரையீரலில் நோய் கிருமிகள் தாக்கும்போது, அந்தக் கிருமிகளை வெளியேற்ற வேண்டியது அவசியம். ஆகவே, சளியை உருவாக்கி அதில் கிருமியை படியச் செய்து வெளியேற்றும் பணி நடக்கிறது. அந்தச் சளி தொண்டைக் குழிக்குள் தேங்கும்போது, அதனை வெளியே கொண்டுவர ஏற்படும் உடலியக்க நிகழ்வே இருமல்! இருமலின் போதுதான், கிருமிகள் அடங்கிய சளி வெளியே வரும்.இரவில், கூடுதலாக இருமல் வருவதும் இதன் காரணமாகத்தான். படுத்த நிலையில் அதிகமான சளி தொண்டைக் குழிக்குள் தேங்கும். எனவேதான் சளி பிடித்தபோது, தலையைச் சற்றே உயரே வைத்தபடி தூங்கினால் இருமலைக் கொஞ்சம் கட்டுப்படுத்தலாம்.கவரிமான் எப்படி இருக்கும்? அது தன் முடியை இழந்தால் உயிரை விட்டுவிடுமா என்ன? உலகில் எந்தப் பகுதியில் அந்த மான் வாழ்கிறது?அ. புஷ்ப எப்சிபா, 9ஆம் வகுப்பு, அன்னன்யா வித்யாலயா, வேடசந்தூர்.'ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை இழந்துவிடும் தன்மை கவரிமானுக்கு உண்டு' என மிகைப்படுத்தப்பட்ட கூற்று இருக்கிறது. ஆனால், வெள்ளை யானை, டிராகன், யாளி போன்ற கற்பனை விலங்கு போலவே கவரிமானும்! அது, நம் கற்பனையில் மட்டுமே வாழ்கிறது.'கவரிமான்' என்றொரு மான் வகையே கிடையாது. ஆனால், 'கவரி' என்றால் மயிர். 'மா' என்றால் விலங்கு. இதுவே, 'கவரிமா' என மருவியது. இமயமலையில் கடும் பனிப்பொழிவில் வாழும் இந்த விலங்கு, மயிரை இழந்துவிட்டால் குளிரைத் தாங்க முடியாமல் இறந்துவிடும். இதைத்தான் திருவள்ளுவர், 'மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா' என்கிறார். பாலையும் நீரையும் கலந்துவைத்தால் நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்தும் ஆற்றல் அன்னப் பட்சிக்கு உண்டு என்றும், முத்துச் சிப்பி வாயைத் திறந்து வைத்துக்கொண்டு கடல் நீரின் மேல் மட்டத்திற்கு வந்து மிதக்கும்; பெய்யும் மழையின் ஒரு நீர்த்துளி அதன் வாயில் விழுந்ததும் சிப்பி மூடிக் கொள்ளும்; பின்னர் முத்து உருவாகி வளரும் என்றும், பல்வேறு விதமான கற்பனையான கருத்துக்கள் மக்களிடம் உண்டு. அப்படிப்பட்ட கற்பனை கருத்தை வைத்துத்தான் திருவள்ளுவர் எழுதியுள்ளார் என, முன்னாள் துணைவேந்தர் பொற்கோ தனது உரையில் கூறி இருக்கிறார்.