உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்கள்!

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதாமிரத்தில் என்ன இருக்கிறது? அந்த வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் என்ன பயன்?செ. ரிதன்யா, 5ஆம் வகுப்பு, பி.வி.எம்.குளோபல் பள்ளி, சென்னை.செம்பு, செப்பு, எனவும் ஆங்கிலத்தில் காப்பர் (Copper) எனவும் அழைக்கப்படும் ஒருவகை உலோகமே தாமிரம். அலுமினியம், எஃகு, அல்லது இரும்புப் பாத்திரங்களை நெருப்பில் வைத்துச் சூடாக்கும்போது, உலோகம் செறிவாக உள்ள பகுதியில் கூடுதல் வெப்பமும் மற்ற இடங்களில் குறைவான வெப்பமும் ஏற்படும். இதன் காரணமாக சில சமயங்களில் உணவு தீய்ந்து போகும் வாய்ப்பு ஏற்படும். ஆனால், தாமிரம் நல்ல வெப்பக்கடத்தி. எனவே, தாமிரப் பாத்திரத்தில் வெப்பம் சீராக எல்லா இடங்களிலும் சமமாகப் பரவும் என்பதால், அதில் உணவு சமைப்பது எளிதாக இருக்கும். எனவேதான், அடிப்பாகம் தாமிரத்தால் ஆன பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்த விரும்புகிறார்கள். செம்புப் பாத்திரங்களை அனைத்துத் தட்பவெப்ப நிலையிலும் உபயோகப்படுத்தலாம். அதுமட்டுமன்றி செம்புத் தாது, நமது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. இயற்கையிலேயே அதிக வெப்பத்தைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை இதற்கு உண்டு. நீரைச் சுத்திகரிப்பதுடன், மக்கிப் போகாமல் இருக்க, தாமிரம் ஒரு மின்பகுபொருளாகவும் (Electrolyte: - எலெக்ட்ரோலைட்) செயற்படும். அதனால் தாமிரப் பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர் நாட்கணக்கில் நற்பதத்துடன் இருக்கும்.பாம்பின் விஷம் எத்தகையது? அது கடித்ததும் உடனே இறந்து விடுவோமா?ர.பிரவின் புதா, 6ஆம் வகுப்பு, பாரததேவி உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி.பாம்பு விஷங்கள் நான்கு வகை:1. நரம்பு மண்டலத்தின் செயற்பாட்டைச் சீர்குலைத்து உடலை மரத்துப் போகச் செய்வது2. இரத்தத்தை உறைய வைக்கும் தன்மையுடையது3. தசைத் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகம், இதயத்தைச் செயலிழக்கச் செய்வது 4. செல்களை அரித்து, நாளங்களையும் திசுக்களையும் பாதிப்படையச் செய்து, இரத்தக் கசிவு ஏற்படுத்துவதுபாம்பின் நஞ்சு என்பது நச்சுத்தன்மை கொண்ட ஒருவகை எச்சில். நஞ்சைச் செலுத்துவதற்கு என பாம்புகளிடம் சிறப்பு நச்சுப் பற்கள் உள்ளன. பல பாம்புகள், எதிரியின் உடலைக் கடித்து, நஞ்சை உட்செலுத்தாமல் நேரடியாகத் துப்பிவிடும். பொதுவாக, விஷப் பாம்பு கடித்து 30 முதல் 60 நிமிடங்கள் வரை மரணம் நிகழ்வது இல்லை. ஆனாலும், சில சூழலில் 10 நிமிடங்களில் கூட மரணம் நேரலாம். எவ்வளவு நஞ்சு, எந்த விதமான நஞ்சு என்பதைப் பொறுத்து, மரணம் நிகழும். விஷத்தின் தாக்கத்தைவிட, பெரும்பாலும் பாம்பு கடித்த அதிர்ச்சியால்தான் பல மரணங்கள் உடனே நிகழ்கின்றன.மயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை?ப.ஜிதேந்த், 5ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருப்பூர்.ஹம்மிங் எனும் ஒரு வகைப் பறவையால், ஹெலிகாப்டர் போல ஒரே இடத்தில் முன்னும் பின்னும் செல்லாமல் நிலையாகப் பறக்க முடியும். திமிங்கிலத்தால் நீரில் தலையை மட்டும் வெளியே விட்டுத் தூங்க முடியும். அதன் வலது மூளை தூங்கும்போது இடது மூளை விழிப்பில் இருக்கும்; இடது மூளை தூங்கும்போது வலது மூளை விழிப்புடன் இருக்கும். இதுபோல, ஒவ்வொரு விலங்குக்கும் தனித்துவம் உண்டு. அந்தத் தனித்துவத்தை நாம் அதிகம் பார்ப்பது இல்லை. எனவே, நமது பார்வைக்கு அப்பால் இருக்கும் விஷயங்களை வியந்து பாராட்டாமல் இருக்கிறோம். அதுபோல் நாம் அதிகம் பார்க்கும் மயிலின் நடனம், கிளியின் பேச்சு போன்றவை, நமக்கு வியப்பாகவும் வித்தியாசமாகவும் தெரிகின்றன.நீரிலேயே இருக்கும் மீன் போன்ற உயிரினங்களுக்கு தாகம் எடுக்குமா?கா.ராம், 6ஆம் வகுப்பு, மகாத்மா மேல்நிலைப் பள்ளி, மதுரை.இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும் என்றால், தாகம் எனும் உடலியல் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும். சிறுநீரகத்தில் நீர் மற்றும் உப்பின் அளவைச் சமன்செய்யச் சுரக்கும் சில வகை ஹார்மோன்களே 'தாகம்' எனும் உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த உணர்வு ஏற்பட்டதும், உடனே நீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே, நிலத்தில் வாழும் உயிரிகளுக்கு நீரிழப்பு ஏற்படும்போது, பரிணாமவியலின்படி இந்த உடலியக்கம் தன்னிச்சையான ஒன்றாக நடைபெறும். நன்னீரில் வாழும் மீன்களின் இரத்தத்தில் உப்புச் செறிவு கூடுதலாக இருக்கும். அவற்றுள் நீர் புகுந்து உப்புச் செறிவைக் குறைத்துவிட்டால் அந்த மீன்கள் மடிந்துவிடும். எனவே, நன்னீரில் வாழும் மீன்கள் நீரைக் குடிப்பதில்லை. குறிப்பாக அவற்றுக்குத் தாகமும் எடுப்பதில்லை. மாறாக, உப்பு நீரில் வாழும் மீன்களின் இரத்தத்தில் கரைசலின் செறிவு, நீரின் உப்புச் செறிவைவிடக் குறைவாக இருக்கும். எனவே, அவை உடலின் உப்புச் செறிவை நிலைப்படுத்த அவ்வப்போது நீரைப் பருகும். மீன்களின் முன் மூளைப் பகுதிதான் நீர் பருகவேண்டும் எனும் உணர்வை ஏற்படுத்தும். உப்பு நீரில் வாழும் மீன்கள் நீரைப் பருகுகின்றன என்றாலும், தாகம் எனும் உடலியல் இயக்கம் அவற்றுக்கு இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !