உள்ளூர் செய்திகள்

ஆனந்தம் ஆரம்பம்!

உணவு இடைவேளைக்குப் பிறகு அன்றைக்கு முதல் வகுப்பு கணிதம். ஆசிரியர் வரவில்லை. நிச்சயம் வேறு ஓர் ஆசிரியர் அந்த வகுப்பை எடுத்துக்கொள்வார் என்றுதான் நாங்கள் நினைத்துக்கொண்டு இருந்தோம். பார்த்தால், உமா மிஸ் உள்ளே நுழைந்தார். என்னைப் போலவே உமா மிஸ்ஸைத் தெரிந்த எல்லோருக்கும் கொஞ்சம் ஆச்சரியம்.திடீரென்று வகுப்பே வெளிச்சமானது. குசுகுசுவென பேச்சு. விவாதம். உமா மிஸ் பெரிய புன்னகையோடு, மேஜை அருகே போய் நின்றுகொண்டார். இவர் என்ன பாடம் எடுப்பார்? கையில் எந்தப் புத்தகமும் இல்லை. முகம் முழுக்க சிரிப்போடு நான் மிஸ்ஸையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.“எல்லோரும் சாப்டாச்சா?”“ஆச்சு மிஸ்.” உண்மையில் கோரஸாக கத்தினோம்.“வெரி குட். உங்கள் டேபிள் மேலே இருக்கற புக்ஸை எல்லாம் எடுத்து பேக்குக்குள்ளே வையுங்க. பேக்கை உங்க காலிலே இடிக்காம கொஞ்சம் தள்ளிவையுங்க…”“என்ன பண்ண போறீங்க மிஸ்?” நான் தான்.“சொல்றேன். முதல்ல நான் சொல்றதைச் செய்யுங்க.” என்றார் என்னைப் பார்த்துக் கனிவாக.பரபரவென வகுப்பே மேஜையை ஒழித்தது. விட்டால் போதும் என்று புத்தகப் பைகள் சுவர் ஓரமாகப் போய் ஒதுங்கிக்கொள்ளத் தொடங்கின. முன்னால் இருந்த பையன் ஒருவனை அழைத்து, வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த ஏ.ஸி.யை அணைக்கச் சொன்னார். இன்னொரு பையனை விட்டு, ஜன்னல் கதவுகளை எல்லாம் திறக்கச் சொன்னார்.வெப்பமும் காற்றும் சட்டென எங்கள் வகுப்பறையை நிறைத்தது. அதுவரை இருந்த ஜில்லிட்ட உணர்வு, உள்ளே புகுந்த அனல் காற்றில், சிலிர்ப்பை ஏற்படுத்தியது. வழக்கம்போல் உமா மிஸ் லேசாக கையைத் தட்டி, அமைதிப்படுத்தினார்.“நல்லா செளகரியமா உட்கார்ந்துக்குங்க. யார் மேலேயும் இடிக்க வேண்டாம். ஃப்ரீயா இருங்க. கண்ணை மூடிக்குங்க. நான் சொல்ற வரைக்கும் யாரும் கண்ணைத் திறக்கக் கூடாது. ஓ.கே. கண்ணை மூடியாச்சா?”சலசலப்பு சற்று நேரத்தில் அடங்கியது. முணுமுணுப்பும்கூட. லேசான இருமல். கணைப்பும் அடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் அறைமுழுவதும் அமானுஷ்ய அமைதி.“மெல்ல உங்களைச் சுத்தி கேக்கற ஒலிகளை எல்லாம் கவனிங்க. தூரத்துல காக்கா ஒண்ணு கரையுது… எங்கோ ஒரு ஜன்னல் கதவை மூடுற சத்தம்… கீழே கோகோ விளையாடற கேள்ஸ் ஓடறாங்க…பின்னாடி தெருவுல ஒரு ஐஸ் வண்டிக்காரர் குரல் கொடுத்துக்கிட்டே போறார்…”உமா மிஸ்ஸின் மாயக்குரல் வழிகாட்ட, காது கூர்மைப்பட்டது. புதுசுபுதுசாக ஒலிகள் கேட்கத் தொடங்கின. வாசனைகளும் நாசியைத் தொட்டன. எங்கிருந்து வருகிறது என்று தெரியாத வித்தியாசமான வாசனைகள் வளைய வந்தன. மாயக்கண்ணனின் குரல் போல், உமா மிஸ்ஸின் குரல் மட்டுமே மெல்லிய ரீங்காரம்போல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அல்லது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு போல் வார்த்தைகள் சுற்றிக்கொண்டே இருந்தன. எத்தனை நேரம்? தெரியவில்லை.கண்ணைத் திறந்துவிட வேண்டும் என்ற பரபரப்பு ஒரு கட்டத்துக்கு மேல் வந்துவிட்டது. என்னவோ நடக்கிறது வெளியே, ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறாய் என்ற கேள்வி துளைத்தது.லேசாக ஓரக்கண்ணால் பார்க்க, மொத்த அறையும் அமானுஷ்ய அமைதியைக் கடைப்பிடிப்பது தெரிந்தது. மீண்டும் கண்ணை மூடிக்கொள்ள, மீண்டும் இருட்டு. மீண்டும் ஒலிகள். வாசனைகள். முணுமுணுப்புகள்… என்னென்னவோ ஒலிகள். இத்தனை நாட்களாக கேட்காத ஒலிகள். “மெல்ல நெற்றிப் பொட்டில் கவனத்தைக் கொண்டு வாருங்கள். இரண்டு கண்களுக்கு மேலே நெற்றி நடுவே கவனம். அங்கே சின்னதாக ஒரு விளக்கு எரிவதாக நினைத்துக்கொள்ளுங்கள்… அல்லது மெழுகுவத்தி.. அதன் சுடர் பிரகாசமாக ஒளிர்கிறது. பளிச்சென்று ஒளி. “முடியவில்லை. விழித்துக் கொண்டுவிட்டேன். வேறு பலரும் திரும்பித் திரும்பிப் பார்த்து, லேசாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். கண்ணை மூடி இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று புரிந்தது. மிஸ் மீண்டும் கையை லேசாகத் தட்டி, அத்தனை பேரின் மெளனத்தையும் கலைத்தார். ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபோது வேறு மாதிரித் தோன்றியது. எனக்குள் என்னவோ ஆகியிருந்தது. மெளனத்தை இத்தனை ஆண்டுகளாகப் பார்த்ததே இல்லை. கண்ணெதிரே உமா மிஸ் பார்க்கவைத்துவிட்டார்.அப்புறம் ரொம்ப ஜாலியாக கதை சொல்ல ஆரம்பித்தார். ஹான்ஸ் கிறிஸ்டி ஆண்டர்சனின் கதைகள். மாய உலகில் அழைத்துப் போகும் கற்பனைகள். என்ன இது என்று புரிந்துகொள்வதற்கு முன்பே, ஒருவித மாற்றம் உள்ளுக்குள் தென்பட்டது. எனக்குத்தானா ஏற்பட்டது என்று சுற்றிப் பார்த்தேன். பொதுவாகப் படபடப்பாக இருக்கும் அஸ்கர், ஏதாவது எழுதிக்கொண்டும் அங்குமிங்கும் அலைபாயும் மஞ்சுளா என்று அனைவரும், உமா மிஸ்ஸையே கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டு இருந்தனர். இது என்ன மாற்றம்? ஒருவித நிறைவும் நெகிழ்ச்சியும் அந்த வகுப்பு முடிவதற்குள் ஏற்பட்டிருந்தது உண்மை.வகுப்பை முடித்து வெளியே போன உமா மிஸ் பின்னாடியே போய் பேசத் தொடங்கினேன்.“இது என்ன மிஸ்? என்ன பண்ணீங்க?”“சந்தோஷம், நிம்மதி, அமைதி…இப்படியெல்லாம் சொல்றோம் இல்லையா? அதெல்லாம் எப்படி இருக்கும்னு உங்களுக்கு செஞ்சு காண்பிச்சேன். இன்னிக்கு எல்லா பாடத்தையும் எடுத்துட முடியும். ஆனால், இதையெல்லாம் மீறினது மகிழ்ச்சி. அது உங்களுக்குள்ள இருக்கு. ஸ்கூல்னா, எப்போதும் டென்ஷன், அழுத்தம் மட்டுமல்ல. அதுக்கும் மேல அதுக்கு ஒரு வேலை இருக்கு. அது மகிழ்ச்சியை ஏற்படுத்தறது. அதைத்தான் இன்னிக்கு பல நாடுகள்ல சொல்லிக் கொடுக்க முயற்சி செய்யறாங்க.”“டில்லியில கூட, 'ஹாப்பி கரிக்குலம்'ன்னு வகுப்புகள் ஆரம்பிச்சு இருக்காங்களே மிஸ். அதுவா?”“ஆமா. அதுக்கு ஆரம்பம், பூடான் என்ற நமக்குப் பக்கத்துலேயே இருக்கிற நாடு. உள்நாட்டு மொத்த உற்பத்திக் குறியீடுங்கற (ஜி.டி.பி.) மாதிரி, மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீட்டை (Gross National Hapiness Index) உருவாக்கி, செயற்படுத்தற நாடு. உலகமே அங்கே இருந்து நிறைய கத்துக்குது. நாமும் கத்துக்க வேண்டாமா. அதுதான், இன்னிக்கு உங்களுக்கு இப்படி ஒரு வகுப்பை ஆரம்பிச்சேன். இதுக்கு நான் வெச்சிருக்கிற பேர் என்ன தெரியுமா?”என்னவென்பது போல் ஆச்சரியத்துடன் பார்த்தேன். “ஆனந்தம் ஆரம்பம்.”


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !