பயமுறுத்தும் பார்த்தீனியம்
விலங்கினங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தாவரம் 'பார்த்தீனியம்' (Parthenium). 'ஆஸ்டரெசியே' (Asteraceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் பூர்வீகம் அமெரிக்கா. வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் பார்த்தீனியம் செழித்து வளர்கிறது. 1910ஆம் ஆண்டை ஒட்டி இந்தியாவிற்குள், இறக்குமதியான தானியங்களோடு இவற்றின் விதைகள் வந்திருக்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்தச் செடிகள் ஒரே பருவத்தில் சுமார் 50 ஆயிரம் விதைகளை உருவாக்கக்கூடியவை. கால்நடைகள், வன விலங்குகள் இந்தச் செடியை உண்ணும்போதும், நுகரும்போதும் காய்ச்சல், அரிப்பு, வாய், குடல் புண்கள் ஏற்படுகின்றன. விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை இச்செடிகள் ஏற்படுத்துகின்றன. பார்த்தீனியம் செடிகளின் அசுரத்தனமான வளர்ச்சியால் இந்தியாவின் பல பாரம்பரிய வகைத் தாவரங்கள் அழிந்து வருகின்றன. நச்சுத்தன்மை கொண்ட இந்தத் தாவரம் வேளாண்மைக்குச் சவால் விடுகின்றன. அதனால், இவை அழிக்கப்பட வேண்டிய களைச் செடிகள் என, மத்திய அரசு கருதுகிறது.இவற்றை அழிப்பதற்கு மிகச்சிறந்த வழி Zygogramma Bicolorata - 'ஜைகோகிராமா பைகலராட்டா' வண்டுகள் எனக் கண்டறியப்பட்டு உள்ளது. கருப்பு - வெள்ளை வண்டுகளான இவை, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவை. கடந்த1984ஆம் முதல், இவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றுக்கும், பார்த்தீனியத்துக்கும் கடும் போர் நடந்து வருகிறது!