உள்ளூர் செய்திகள்

அரிய நினைவுகளின் சேகரிப்பு

நூலக நேரம்: காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை; பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 வரைமுகவரி: ஃபிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரிபுனித லூயி தெரு, (கடற்கரை அருகில்), பாண்டிச்சேரி.புதுச்சேரி என்றவுடன் ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம், அழகிய கடற்கரை இவைதான் நினைவுக்கு வரும். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் யுனெஸ்கோ நிறுவனத்தால், 'Memory of the World' என்ற தகுதி பெற்ற நிறுவனம் ஒன்று புதுச்சேரியில் உள்ளது. அதுதான் 'ஃபிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி' (French Institute of Pondicherry).பிரான்ஸ் நாட்டினர் அவர்களின் காலனிகளை விட்டு வெளியேறியபோது, இந்திய அரசுடன் போடப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1955ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியாவைப் பற்றிய ஆய்வுகள் (Indology), சூழலியல், சமூகவியல், புவியியல் சார்ந்த துறைகளுக்காக இயங்கும் நிறுவனம்.அந்த நிறுவனத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றவர் ழான் ஃபில்லியொஸா (Jean Filliozat). இவரது முயற்சியால் பலவிதமான ஆய்வுகள் நிகழும் இடமாக இந்த நிறுவனம் மாறியது. தொடக்கத்தில் இங்கு தென்னிந்திய சமூக அமைப்புகள், மதங்கள் பற்றிய தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் தென்னிந்தியாவின் சூழலியல் (Ecology), பல்லுயிர்ப் பெருக்கம் (Biodiversity), மண், தாவர வகைகள், வானிலை மாறுதல்கள் ஆகியவற்றைக் கணிக்கவும், பல்லுயிர்ப் பெருக்கத்தில் உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற இடமான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஆய்வுகள் தொடங்கின. இந்திய அளவில் புகழ்பெற்ற மகரந்தவியல் அறிஞரான தணிகைமணி, 20 ஆண்டுகள் இந்த நிறுவனத்தின் மகரந்தவியல் துறையில் இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். பல்வேறு தாவரங்களின் மகரந்தங்கள் சுமார் 20,000 இங்கு கண்ணாடித் தகடுகளில் சேமித்துப் பாதுகாக்கப்படுகின்றன.இந்த நிறுவனத்தின் முக்கிய அங்கமாக, நூலகம் செயற்படுகிறது. தற்போதைய கணக்கின்படி சுமார் 75,000 புத்தகங்கள், 380 ஆய்வு அறிக்கைகள், 1,400 கட்டுரைகள், 800 இதழ்கள் ஆகியவற்றைக் கொண்ட பெரும் பொக்கிஷமாக நூலகம் திகழ்கிறது. ஆண்டுதோறும் சுமார் 800 புத்தகங்கள் சேர்க்கப்படுகின்றன.இந்திய மொழிகளின் இலக்கண, இலக்கியம் (குறிப்பாக சமஸ்கிருதம், தமிழ்), பல்வேறு சாத்திர நூல்கள், மெய்யியல், ஆன்மிகம், கல்வெட்டியல், கலை, தொன்மவியல், ஜோதிடம், சூழலியல், காடுகளைப் பற்றிய புத்தகங்கள், மகரந்தவியல் என்று பலதரப்பட்ட துறை சார்ந்த புத்தகங்கள் உள்ளன. 1851ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட, அனைத்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள், 1951ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய அளவிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளின் ஆவணங்கள் போன்றவை இங்கு உள்ளன.தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் திரட்டிய அரிய ஓலைச்சுவடி சேகரிப்புகளும் உள்ளன. பெரும்பாலும் சைவ மதம் சார்ந்திருக்கும் இந்தச் சுவடிகளின் சேகரிப்பிற்காகத்தான் யுனெஸ்கோ அமைப்பு 'மெமரி ஆஃப் தி வேர்ல்ட்' என்ற தகுதியைத் தந்துள்ளது. அரிய தரவுகளின் களஞ்சியமாகத் திகழும் இந்த நிறுவனத்தையும், நூலகத்தையும் நீங்களும் சென்று பார்க்கலாம்.- ஹாலாஸ்யன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !