மாணவர்களுக்கு செய்திகள் தேவையா? தேவையில்லையா?
“அன்றாடச் செய்திகள் நமக்கு எதுக்கு? நாம பள்ளிக்கு போறோம். படிக்கிறோம். வீட்டுக்கு வர்றோம். டியூஷன் போறோம். படிக்கிறதுக்கும் எழுதுறதுக்குமே நிறைய பாடங்கள் இருக்கு. இதுல செய்திகளை தெரிஞ்சுக்கிட்டு என்ன ஆகப்போகுது? தேவையில்லாத கவனச்சிதறல்தான் ஏற்படும்” என்று ரித்திகா பேசத் தொடங்கியபோது 'பக்' என்றது.சமகால நடப்புச் செய்திகள் குறித்து, மாணவர்கள் அறிந்துவைத்திருப்பது தேவையா தேவையில்லையா என்பது பற்றி, சென்னை ராயப்பேட்டை எஸ்.வி.எம். மேல்நிலைப் பள்ளி மாணவியர் பேசத் தொடங்கியவுடன் விழுந்த முதல் பஞ்ச் இது.“படிப்பு முக்கியம்தான். வீட்டுக்குப் போனதும், நாட்டுநடப்பை தெரிஞ்சுக்க கொஞ்ச நேரம் 'டிவி' பார்க்கறதுல தப்பில்லை. சமீபத்துல நம்மூர்ல முதலமைச்சர் யாருன்னு பெரிய விவாதமே ஓடிக்கிட்டு இருந்துச்சு. அதைப் பத்தி தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு? சமூக அறிவியலுக்கு செய்தி பார்க்கறது உதவும்தானே? மாணவர்கள் நாட்டுநடப்பத் தெரிஞ்சுக்கறது அவசியம் தான்” என்று சொன்னார் ஆர்.கே.ரம்யா.உடனடியாக மறுத்தார் சவிதாரிணி, “ஏன் நாமளேதான் பார்த்து தெரிஞ்சுக்கிடணுமா? வீட்டுல அம்மாவோ, அப்பாவோ பார்த்துச்சொன்னா போதாதா? அப்படி இல்லாம, நாம 'டிவி' பார்க்க உட்கார்ந்தா வீட்டுல இருக்கிறவங்க கூட பேசுறது எப்போ? ஆளுக்கு ஒருபக்கம் 'டிவி' பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி? 'டிவி' செய்திகளில் எவ்வளவு கெட்டது எல்லாம் காட்டுறாங்க தெரியுமா? அதையெல்லாம் நாம பார்க்கணுமா? அதெல்லாம் நமக்குத் தேவையா? வீட்டுல பெரியவங்களோட பேசுங்க. அவங்களோட பேசும்போது, நாட்டுநடப்பு, ஸ்கூல்ல நடந்ததுன்னு எல்லாத்தையும் பேசலாமே. சாப்பாட்டு நேரத்துல இப்படி நாட்டுநடப்ப பேசிக்கிட்டே சாப்பிட்டா, இன்னும் பல விஷயங்களை பேசிக்க முடியும் தானே? நாம ஸ்டூடன்ஸ். நமக்கு படிப்பு போதும். சமகால நியூஸ் பார்த்து அப்டேட் ஆகவேண்டியதே இல்லை.” என்றார்.“ஏன் எல்லா செய்தியிலேயும் கெட்டதை மட்டும்தான் காட்டறாங்களா? ஊழல் செஞ்சா தண்டனை கிடைக்கும்னு காட்டுற செய்தியில இருந்து, நாம நல்ல விஷயத்தை மட்டும் எடுத்துக்க முடியாதா? இன்னிக்கு எந்த வீட்டுல அம்மா, அப்பா நியூஸ் பார்க்கறாங்க? சீரியல்தானே பார்க்கறாங்க. அப்ப பொது அறிவை வளர்த்துக்க நாமே செய்தித்தாள் படிக்கணும், 'டிவி' பார்க்கணும். திடீர்ன்னு மழை பெய்யுது. ஸ்கூல் இருக்கா இல்லையான்னு பார்க்க 'டிவி'யைத்தானே மொதல்ல பார்க்கறோம்.” என்று சவிதாரிணியை மடக்கினார் ஸ்ருதி.சவிதாரிணி யோசித்துக்கொண்டிருக்கும் போதே, எஸ்.ரம்யா, ”ஏன் ஸ்கூல் லீவுன்னா இப்பத்தான் எஸ்.எம்.எஸ். எல்லாம் அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்களே. அப்படி எதுனா முக்கியமானதாக இருந்தா, அம்மா பார்த்து சொல்லிடமாட்டங்களா? வீட்டுப்பாடம் முடிக்கிறதுக்கு, மொதல்ல டைம் போதுமானதா இருக்கா உனக்கு? நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கனும்னு கட்டாயமில்லை. பெற்றோர் மூலமாகவோ, ஆசிரியர்கள் மூலமாகவோ நல்ல விஷயங்களையும் நடப்பு விஷயங்களையும் நாம தெரிஞ்சுக்க முடியும்” என்று ஸ்ருதி வீசிய பந்தை, அவரிடமே திருப்பி வீசினார்.”பாடம் படிச்சா போதும்; டீச்சர் சொல்லுறத கேட்டா போதும்னு சொல்லுறீங்களே… இன்னிக்கு இருக்கறது இன்டர்நெட் உலகம். நாம ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்புன்னு பயன்படுத்தறோம். அதுல எவ்வளவு கெட்டது நடக்குது. அதை எல்லாம் பாடபுத்தகத்துலயோ, ஆசிரியர்களோ சொல்லி கொடுக்குறாங்களா? இல்லையே.. அப்ப நாம, இந்த சமூகத்துல பாதுகாப்பாக இருக்கணும்னா, சமகால செய்திகளின் மூலம்தான் தெரிஞ்சுக்க முடியும். எச்சரிக்கையாவும் இருக்கமுடியும். எந்த பள்ளிக்கூடத்திலாவது செய்தித்தாள் படிக்காதீங்க, செய்தி பார்க்காதீங்கன்னு சொல்றாங்களா? இல்லையே. அப்படின்னா என்ன அர்த்தம்? நாம செய்திகளை படிக்கவோ, பார்க்கவோ செய்யலாம்னுதானே அர்த்தம்.” என்றார் மஞ்சுளா.“அதெல்லாம் அவசியமே இல்லைன்னுதான் சொல்றோம். இன்னிக்கு நான் ஸ்டூடன்ட். பெற்றோரும் ஆசிரியரும் என்ன சொல்றாங்களோ.. அதன்படி நடந்தாலே எச்சரிக்கையாவும் இருக்கலாம். நல்லாவும் வரலாம். அதுக்கு செய்திகளை தெரிஞ்சுக்கனும்னு ஒரு அவசியமுமில்லை.” என்று மஞ்சுளாவின் வாதத்திற்கு, மறுப்புத் தெரிவித்தார் ரித்திகா. ”பாடப்புத்தகத்துல நல்லது இருந்தாலும், அதை கடனேன்னுதான் படிப்போம். அதே சமயம் அதை 'டிவி'யில காட்சியாக காட்டும்போது, நம்ம மனசுல பளிச்சுன்னு பதியும். நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கிட்டா, பொது அறிவு வளரும். ஐ.ஏ.எஸ். மாதிரி போட்டித்தேர்வுல அதிகமாக கேட்கப்படுற கேள்விகளைப் பார்த்தா... எல்லாமே பொது அறிவு சம்பந்தமாகத்தான் இருக்கு. அதை இப்பவே தெரிஞ்சுக்கிடலாமே” என்றார் மஞ்சுளா.“நாம இன்னிக்கா ஐ.ஏ.எஸ். எழுதப்போறோம்? வளர்ந்த பிறகு எழுதப்போற தேர்வுக்கு, இன்னிக்கே ஏன் படிச்சுக்கிட்டு இருக்கணும். மறந்துபோயிடாதா? இப்ப நமக்கு எவ்வளவு படிக்க வேண்டியதிருக்கு. ஹோம் ஒர்க் எவ்வளவு இருக்கு? இதுல பொது செய்தியை தெரிஞ்சுகிட்டு, என்ன பண்ணப்போறோம். அதுக்குத்தானே சமூக அறிவியல், ஜி.கே.ன்னு பாடங்கள் இருக்கே.. அதைப் படிச்சா போதாதா? அப்புறம் என்னத்துக்கு தனியா நியூஸ்?” என்று கேள்வி எழுப்பினார் ரித்திகா.”சினிமா பார்க்கறோம், பாட்டு பார்க்கறோம் அதெல்லாம் மறந்தா போயிடும், இல்லையே?” என்றார் ஸ்ருதி.“அதுசரி, நீங்க செய்தியையும் பாட்டாவே பாடுங்க கேட்டுக்கறோம். இருக்கிற படிப்பு பளுவுக்கு மேலே செய்தியையும் படின்னு அழுத்தத்தை கூட்டிடாதீங்க. இப்ப ஸ்கூல்லயே ஒரு வகுப்புல செய்தித்தாளை படிக்கவேற சொல்றாங்க. அதனாலதான் செய்தி வேணாம்னு சொல்றோம்.” என்றார் எஸ்.ரம்யா.'ம்.. அதைத்தான் நாங்களும் சொல்லவர்றோம். பள்ளியிலயே ஒரு வகுப்பு அப்படி ஏன் வைக்கறாங்க? பசங்க நாட்டுநடப்பை தெரிஞ்சுக்கனும்னு தானே? நம்ம ஆசிரியர்களுக்கு தெரியாதா? மாணவர்களுக்கு பாடங்களே நிறைய இருக்குன்னு. இன்னிக்கு நாம நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கறது அவசியம்னுதானே அப்படி ஒரு வகுப்பே வச்சிருக்காங்க. சமகால செய்திகளை தெரிஞ்சு வைத்துக்கொள்வது என்பது நமது எதிர்கால நன்மைக்குத்தான். அதுல பரீட்சை ஏதும் வைக்கப்போறதில்லையே...?” என்று மஞ்சுளா கேட்டதும், எதிர்பாராத திருப்பம் அங்கே அரங்கேறியது.“அதுல இருந்து ஏதும் கேள்வி கேட்டு, எக்ஸாம் வைக்கப்போறதில்லைன்னா.. நாங்களும் நியூஸ் தெரிஞ்சுகொள்வதை வரவேற்கிறோம்.” என்று கோரஸாக எதிர் அணியினர் சொல்ல... அங்கே சிரிப்பலை எழுந்தது.