உள்ளூர் செய்திகள்

கழுகு... அழகு...

'கழுகு' என்ற பேரைக் கேட்டதும் ஒரு லேசான பயமும் கூடவே அதைப் பற்றிய ஆர்வமும் உடனடியாக உண்டாகிறது அல்லவா?கழுகின் குணங்களும் இயல்புகளும் எப்போதும் மனிதர்களுக்குக் கவர்ச்சிதான். கழுகைப் பற்றி விதவிதமாகப் பலரும் பேசுவதைக் கவனித்திருப்பீர்கள். குறிப்பாக 'கழுகுப் பார்வை' என்று கூறுவதை அடிக்கடி கேட்டிருக்கலாம். மிக உயரத்தில் பறந்தவாறு கீழே உள்ளவற்றை துல்லியமாகப் பார்ப்பதால் அப்படிச் சொல்கிறார்கள். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்கிற பழமொழியும் கழுகுகள் பறக்கும் உயரத்தைச் சொல்லிவிடும்.கழுகு என ஆரம்பித்த பேச்சு பருந்து என மாறுகிறதே… ஏன் என யோசிக்கிறீர்களா? வல்லூறு,பருந்து, ராஜாளி, கருடன், பாறு என வித்யாசப்பட்ட கழுகு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். இதில் பாறு என்பது பினந் திண்ணிக் கழுகாகும். காட்டில் இறந்து போகும் விலங்கினங்களைப் புசித்து காட்டைச் சுத்தப் படுத்தும் பறவையாக இது விளங்குகிறது. ஆயிரக் கணக்கான வனங்களில் இருந்த அவற்றின் எண்ணிக்கை, இன்று சுற்றுச்சூழல் காரணங்களால் வெறும் நூற்றுக் கணக்காகச் சுருங்கிவிட்டது. பிற பறவைகளை விட அதிக உயரத்தில் பறக்கும் கழுகுகள், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கவனம் தவறாமல் கீழே விர்ரெனப் பாய்ந்து வந்து, இரையைக் கவ்வும் திறமை கொண்டது.காற்று வேகமாக வீசும்போது அதைப் பயன்படுத்தி அந்தரத்தில் நீந்தியவாறு ஓய்வெடுத்துக்கொள்ளும். கூடு கட்டுவதற்கு பெரும்பாலும் மலையில் உள்ள சந்துப் பகுதிகளையே தேர்ந்தெடுக்கும்.அரிதாகி வரும் பறவையான கழுகு இப்போது, உலக நாடுகளின் சின்னங்கள், வியாபாரப் பொருட்கள் ஆகியவற்றின் மீது மட்டும் கம்பீரமான அடையாளமாக மட்டும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !