உள்ளூர் செய்திகள்

களைப்பைப் போக்கும் பரோட்டா!

கேரள உணவுகளில், மிகவும் குறைந்த ஊட்டச்சத்துள்ள உணவு என்றால், அதில் பரோட்டாவிற்குத்தான் முதலிடம். உடல்நல விரும்பிகள், பரோட்டா என்றாலே ஓடுவார்கள். மைதா மாவில் செய்வதால், மருத்துவர்களும் வேண்டாம் என்றே சொல்வார்கள்.மேலே சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு, கண்ணைமூடிக் கொண்டு சுவையான உணவு எது என்றால் பரோட்டாவிற்கு முதலிடம். சுவைக்காக உண்போரே அதிகம். சைவம், அசைவம் இருதரப்பினரையும் திருப்தியடையச் செய்யும். பரோட்டாவின் தாயகம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கேரளம் அல்லது தென்னகத்தில்தான் தோன்றி இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இன்னும் சில உணவு ஆய்வாளர்கள், வட இந்தியாவில் தோன்றியதாகவும் சொல்கிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப்பின் கோதுமை இறக்குமதி குறைவானதன் விளைவாக, மைதாவில் செய்யப்படும் உணவுகள் பிரபலமாயின. அந்த வகையில், 1960களில் கேரளத்தில் மற்ற வகை உணவுகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளி பரோட்டா கோலோச்சியது. பரோட்டாவும், பராத்தாவும் வேறு வேறு உணவுப் பண்டங்கள். பரோட்டா முழுவதும் மைதாமாவாலும், பராத்தா கோதுமை மாவாலும் செய்யப்படும்.பரோட்டாவில், சிலோன் வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, மலபார் பரோட்டா, விருதுநகர் எண்ணெய் பரோட்டா என பல வகை உண்டு. ஒவ்வொன்றுக்கும், செய்முறை மாறும். அசைவப் பிரியர்களுக்கு, இறைச்சி மற்றும் மீன் துண்டுகள் பொதிந்து தரப்படும். சைவப் பிரியர்களுக்கு காய்கறிகளோடு பரிமாறப்படும். இது பார்ப்பதற்கு சப்பாத்தி அளவில் இருக்கும். ஆனால் இதன் செய்முறை, சற்றே கடுமையானது. மைதா மாவில் தயாராகும் உருண்டைகளை அடித்துத் துவைத்து, கயிறு போலவும், கண்ணாடித் தட்டு போலவும் பல வடிவங்களில் மாற்றி, இரும்பு மேடையில் அடித்து, தேய்த்து, பரோட்டா மாவு தயாரிக்கப்படுகிறது.பரோட்டா தயாரிக்கும் பக்குவம், எல்லோருக்கும் வந்துவிடாது. அது, ஒரு கலை. அதனால் தான், பரோட்டா தயாரிப்பாளர்களை, 'பரோட்டா மாஸ்டர்' என அழைக்கின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பரோட்டா செய்பவர்களுக்கு களைப்பைக் கொடுக்கும்; உண்பவர்களுக்கு களைப்பை போக்கும். - பை நீக்பரோட்டா பயிற்சிப் பள்ளிமதுரையைச் சேர்ந்த காசிம் என்பவர், பரோட்டா பயிற்சிப் பள்ளி நடத்துகிறார். பட்டப்படிப்பு படித்த பலரும் இந்தப் பள்ளியில் பயிற்சி எடுத்து வருகின்றனர். பரோட்டா மாஸ்டருக்கு எப்போதுமே தேவை அதிகம் என்பதால் இந்தப் பள்ளிக்கு அதிக மவுசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !