உள்ளூர் செய்திகள்

அரசர் முதல் முதல்வர் வரை: லிட்டி சோக்கா

பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் முக்கிய உணவுகளில் ஒன்று, லிட்டி சோக்கா. கோதுமை மாவுடன், சத்து மாவு (பார்லி அல்லது கொண்டைக்கடலை மாவுடன்) சில மூலிகைக் கீரைகள், நறுமணப் பொருட்கள் எல்லாம் சேர்த்து உருண்டையாக உருட்டி விறகு அடுப்பில் சுட்டு எடுப்பார்கள். சிலர் நெய்யில் தோய்த்துக் கொடுப்பார்கள். இன்னும் சிலர், இதை நெய்யில் பொரித்தெடுத்தும் கொடுப்பார்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையில் இருக்கும். இதில் மூலிகைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் சேர்த்திருப்பதால் காரமாகத்தான் இருக்கும். (ஏனெனில், நாம் முன்பு பார்த்த இராஜஸ்தான் உணவான பாத்தியில் காரம் இருக்காது). லிட்டியை அப்படியே வெறுமனே சாப்பிடலாம் அல்லது காரமாக தொட்டுக்கொள்ள ஏதாவது கறியுடனும் சாப்பிடலாம். இதற்கு அவர்கள் வைத்த பெயர், சோக்கா. லிட்டி செய்த கையோடு சோக்காவும் தயாராகிவிடும். சோக்கா என்பது கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, சீரகப் பொடி, தனியா, மஞ்சள் தூள் என, அனைத்தையும் சேர்த்து அடுப்பில் நன்றாக வதக்கி கறி அல்லது கூட்டு மாதிரி செய்யப்படும் உணவுப் பொருள். கத்தரிக்காய் பிடிக்காதே என்பவர்களுக்கு, வேகவைத்த உருளைக்கிழங்கில் செய்து கொடுப்பார்கள். பீகார், உத்தரப் பிரதேசம் (கிழக்கு) ஆகிய மாநிலங்களில் சத்து மாவு மிகவும் பிரபலம். இது வறுத்த கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை மாவு. பெரும்பாலான உணவு வகைகளில், குறிப்பாக லிட்டியில் இதைச் சேர்ப்பார்கள். பீகார், ஜார்க்கண்டில் தெருவுக்குத் தெரு கிடைக்கும் இந்த உணவை, யார் முதலில் கண்டுபிடித்தார்கள் என்ற கேள்வி வந்தது. நம் நாட்டில் எல்லா உணவு வகைகளுக்குப் பின்னாலும் நிச்சயம் ஏதாவது வரலாறு இருக்கும். லிட்டிக்கும் அப்படித்தான். ஆனால், இதில் ஏகப்பட்ட சுவாரசியங்கள் உண்டு. இன்றைய பீகார், உத்தரப் பிரதேசம் (கிழக்கு), மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள் ஆகியவை மகத நாடு அல்லது மகதம் என, அழைக்கப்பட்டது. இது மிகப்பெரிய பேரரசு. இவர்களுடைய கோட்டையில் உருவாக்கப்பட்ட பண்டம்தான், லிட்டி. இந்த அரசின் தலைநகரம் இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா. அப்போது பாடலிபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. லிட்டி, அரசவையின் முக்கிய உணவுப் பண்டமாகும். இது அரசர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து வரும் விருந்தினர்களுக்கும் எப்போதும் பரிமாறப்படும். அரசவை உணவு என்பதால், அந்தப் பகுதியில் பிரபலமாக இருந்தது. மகத ராஜ்ஜியத்தின் உணவு அவர்களுக்குப் பின்னும் தொடர்கிறது. மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என, மாறி மாறி அரசைக் கைப்பற்றியவர்கள் அனைவருமே இந்த உணவை விடவில்லை. எனினும் அவர்களுடைய சுவைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டனர். 1857இல் இந்தியாவில் நடந்த சிப்பாய் புரட்சியின்போது, போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவுப் பண்டம் லிட்டியும், சத்து மாவும்.ராணி லட்சுமி பாய், போருக்குப் போகும்போதெல்லாம் உயிர் வாழ இதுபோதும் என்பாராம். ஏனெனில், அடுப்பு, பாத்திரம் என, எதுவும் இல்லாமல் இதைச் சுட்டு உண்ண முடியும். மாளிகை முதல் தற்கால தெருக்கடைகள் வரை இந்த உணவுப் பண்டம் பல தலைமுறைகளாக இருந்து வருகிறது.எப்போதாவது பீகார் உணவகங்களுக்குச் சென்றால் நிச்சயம், ராணி லட்சுமி பாய் விரும்பி சாப்பிட்ட லிட்டியைச் சுவைத்துப் பாருங்கள். அட! பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவுக்கு லிட்டி சோக்கா மிகவும் பிடித்த உணவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !