தமிழகம் வந்த கங்கை
புதிதாக ஒரு வீடு கட்டுகிறோம். அதைத் தூய்மைப்படுத்திய பிறகுதான் குடியேறுவோம்.வீட்டுக்கே இப்படியென்றால், ஊருக்கு? நம்மைப்போன்ற பொதுமக்களே இப்படியென்றால், பேரரசர்களுக்கு?கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரத்தை அமைத்தவர் முதலாம் இராஜேந்திர சோழன். அங்கே குடியேறுவதற்கு முன்னால், அவ்வூரைப் புனிதப்படுத்த எண்ணினார். அதற்காக கங்கை நீரைக் கொண்டுவர நினைத்தார்.இந்திய வரைபடத்தில் தமிழகம் எங்கே இருக்கிறது, கங்கை எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நடுவில் எவ்வளவு தூரம்? சரியான சாலை வசதிகள், வாகனங்களெல்லாம் இல்லாத அன்றைய சூழ்நிலையில், அது எந்த அளவுக்குச் சிரமமாக இருந்திருக்கும்?இன்றைக்குத் தமிழகம், கங்கை பாயும் இந்திய நாட்டில்தான் இருக்கிறது. அன்றைக்கு அப்படியில்லை. சோழன் செல்லும் வழியெல்லாம் பல்வேறு தேசங்கள், வெவ்வேறு மன்னர்கள். என்னதான் நல்ல நோக்கமென்றாலும், தங்கள் நாட்டின் வழியே இன்னொரு நாட்டின் படைகள் செல்ல அனுமதிப்பார்களா?இராஜேந்திர சோழன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. பயண திசையிலிருந்த மன்னர்கள், அவர்களுடைய நாடுகளையெல்லாம் வென்றுகொண்டே சென்றார். கி.பி.1019ல் தொடங்கி, சுமார் இரண்டாண்டுகளுக்குத் தொடர்ந்த இந்தப் படையெடுப்பில், சக்கரக்கோட்டம், ஒட்டர தேசம், கோசலம், தக்கணலாடம், வங்காள தேசம், உத்திரலாடம் என்று பல நாடுகளைக் கைப்பற்றியது சோழப் படை.இந்தப் பயணத்தின்போது, ஒருமுறை அவர்கள் வேகமாகப் பெருக்கெடுத்து ஓடும் நதியொன்றைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. அங்கே பாலங்கள் இல்லை. தாற்காலிகப் பாலம் அமைத்து, நதியைக் கடக்க நேரமும் இல்லை, என்ன செய்வது?சோழனின் படைத்தலைவனுக்கு ஒரு யோசனை பிறந்தது. 'நம்மிடம்தான் இத்தனை யானைகள் இருக்கின்றனவே, அவற்றை ஆற்றில் வரிசையாக நிறுத்துங்கள்' என்றான்.அப்புறமென்ன? அந்த யானைகளுக்குமேலே ஒரு பாலம் பிறந்தது. சோழப் படை அதைக்கடந்து சென்றது.கடைசியாக, அவர்கள் கங்கைக்கரையைச் சென்றடைந்தார்கள். புனித கங்கை நதிநீரைக் குடங்களில் சேகரித்துக் கொண்டார்கள். அந்தக் குடங்களைத் தோற்றுப்போன பகையரசர்களைக் கொண்டே சோழநாட்டுக்குக் கொண்டுவரச் செய்தார்கள்.இப்படி நெடுந்தொலைவுக்குத் தமிழர்களின் பெருமையைப் பரப்பிய இராஜேந்திர சோழன், கங்கை நீரைக்கொண்டு தன்னுடைய புதிய நகரத்தைப் புனிதப்படுத்தினார். அதன்பிறகு அந்நகரில் இருந்து நல்லாட்சி புரிந்தார். இதனைக் குறிப்பிடும்விதமாக, அந்த ஊரே 'கங்கைகொண்ட சோழபுரம்' என்று அழைக்கப்படுகிறது, அவ்வரசனுக்கும் 'கங்கை கொண்ட சோழன்' என்ற பெயர் அமைந்தது.இராஜேந்திர சோழனின் வடக்குப் படையெடுப்பால், தமிழர்களின் நாகரிகம் வங்காள நாட்டில் புகுந்தது என்கிறார் ஆய்வாளர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார். சோழன் படையோடு சென்ற ஒரு தலைவன், வங்காளத்திலேயே தங்கிவிட்டதாகவும், அவனுடைய வழியில் வந்த சாமந்தசேனன் என்பவன் பின்னர் வங்காளத்தை ஆண்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.நகரைப் புனிதப்படுத்தச் செய்த ஒரு படையெடுப்பு, தமிழர் நாகரிகத்தை நெடுந்தொலைவுக்குக் கொண்டுசெல்வதாக அமைந்துவிட்டது வியப்புதான்!- என். சொக்கன்