உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: ஹம்பியில் கோயில் - சென்னையில் சிலை

படத்தில் காண்பது, கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள கிருஷ்ணர் கோயில். அதன் அருகில் உள்ளது, பால கிருஷ்ணர் சிலை. இந்தச் சிலை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளது. கிருஷ்ணர் கோயில்கி.பி.1513ஆம் ஆண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. ஹம்பி உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பாலகிருஷ்ணர் சிலை, உதயகிரியை (ஒடிசா) ஆட்சி செய்த, பிரதாப ருத்திரரால் நிறுவப்பட்டது. கி.பி.1514இல் பிரதாப ருத்திரருக்கும், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயருக்கும் இடையில் போர் நடந்தது. போரில் கிருஷ்ணதேவராயர் வெற்றி பெற்றார். அதன் நினைவாக உதயகிரியில் இருந்த இந்த கிருஷ்ணர் சிலையைக் கொண்டு வந்து, ஹம்பியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வு கி.பி. 1515ஆம் ஆண்டு நடந்தது. ஆண்டுகள் உருண்டோடின. கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு வந்த அரசர்கள், வலிமை குன்றியவர்களாக இருந்தனர். தக்காணத்தின் வடக்குப் பகுதியைச் சுல்தான்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். தெற்குப் பகுதியை கிருஷ்ணதேவராயர் ஆட்சி செய்து வந்தார். அதுவரை கிருஷ்ணதேவராயரிடம் தோற்றுக்கொண்டிருந்த சுல்தான்கள் (கோல்கொண்டா, பிஜப்பூர், பிதார், அகமதுநகர், பெரார்), ஒன்று சேர்ந்து, விஜயநகரப் பேரரசின் மீது போர் தொடுத்தனர். தலைக்கோட்டை என்னும் இடத்தில் கி.பி.1565இல் இந்தப் போர் நடந்தது. கலைகளின் கூடமாக, மலைகளுக்கு நடுவில் மாபெரும் எழில் நகரமாக விளங்கிய விஜய நகரத்தின் தலைநகர் ஹம்பி, சிதைக்கப்பட்டது. மணி மாடங்கள் தரைமட்டமாகின. கோயில்கள் சிதைக்கப்பட்டன. காணும் இடமெங்கும் மண்டபங்களாகத் திகழ்ந்த மாநகரை, ஆறு மாதங்களுக்கு மேலாக, சுல்தான்கள் இடித்து மண்மேடாக்கினர். அவ்வாறு சிதைவுற்ற சிலைகளில் ஒன்றுதான் இந்த பாலகிருஷ்ணர் சிலை. ஹம்பி கோயில் கருவறை, தற்போது வெறுமனே காட்சியளிக்கிறது. பால கிருஷ்ணரை ஆங்கிலேயர்கள், எழும்பூர் அருங்காட்சியத்தில் கொண்டு வந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !