ஸ்ட்ரா வந்தது எப்படி?
முதன்முதலில் சுமேரியர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் குளிர்பானங்களைக் குடிப்பதற்கு உலோகத்தால் செய்யப்பட்ட குழலைப் பயன்படுத்தினர். இதுதான் ஸ்ட்ராவுக்கு முன்னோடி. ஆனால், இது குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே காணப்பட்ட பழக்கம். 1880களில் தொழிற்புரட்சிக்குப்பின், குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் அதிகமானது. அப்போது ஒருவித புற்களான ஸ்ட்ரா பிரபலமானது. ஆனாலும், பல சிக்கல்கள் இருந்தன. அமெரிக்காவைச் சேர்ந்த மர்வின் சி. ஸ்டோன் (Marvin C. Stone) ஒரு கண்டுபிடிப்பாளர். இவர் சிகரெட் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்தார். இவருக்குக் காகிதங்கள், அதை எப்படிச் சுருட்டுவது என்பன போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம். ஒருமுறை குளிர்பானம் குடிக்கும்போது, கோப்பையின் அடிப்பாகத்தில் இருந்த வண்டலையும் சேர்த்துக் குடித்துவிட்டார். இதனால் எரிச்சலடைந்தார். காகிதத்தால் மெல்லிய, திடப்பொருட்கள் எதுவும் உள்ளே புகாத கருவியைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் இவர் இறங்கினார். ஒரு பென்சிலின் மேல் மெல்லிய காகிதத்தைச் சுற்றி, கோந்து போட்டு ஒட்டிவிட்டுப் பென்சிலை அகற்றினார். அவ்வளவுதான் அவர் எதிர்பார்த்த மெல்லிய ஸ்ட்ரா கிடைத்துவிட்டது. இது நடந்தது 1888ஆம் ஆண்டு. அவரே பின்னர் 'பாரஃபின்' (Paraffin) மெழுகைக் காகிதத்தில் தடவித் தமது கண்டுபிடிப்பை மேம்படுத்தி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார்.அதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து, ஸ்ட்ராக்களின் அமைப்பில் குறிப்பிடத்தக்க மற்றொரு மாறுதல் நிகழ்ந்தது. சான்ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் ஜோசஃப் பி. ஃப்ரிட்மேன் (Joseph B. Friedman) என்பவர், தன் மகள் மில்க் ஷேக்கை நேரான ஸ்ட்ரா மூலம் உறிஞ்ச சிரமப்படுவதைப் பார்த்தார். ஸ்ட்ராவில் வளைவு ஏற்படுத்த முயற்சித்தார். நேரான ஸ்ட்ராவுக்குள் ஒரு ஸ்க்ரூ ஆணியை நுழைத்தார். நைலான் நூலால் ஸ்க்ரூவின் வளைவு முனைகளைச் சுற்றினார். பின்னர், ஸ்க்ரூவை நீக்கிவிட்டார். அவர் எதிர்பார்த்த வளையும் தன்மையுடைய ஸ்ட்ரா கிடைத்துவிட்டது. சில பானங்கள் மேற்பரப்பில் நீர்த்தும் கீழே கொழகொழப்பாகவும் இருக்கும். அவற்றைச் சுரண்டுவதற்குத் தோதாக ஸ்லர்ப்பி ஸ்ட்ராக்கள் (Slurpee straw) கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஸ்ட்ராக்களின் கீழ்ப்புறத்தில் ஸ்பூன் போன்ற அமைப்பு சுரண்டுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கும். கண்ணாடி, உலோகங்கள் போன்ற பொருட்களிலும் ஸ்ட்ரா செய்ய முயற்சிகள் நடந்தன. ஆனால், உறிஞ்சும்போது எரிச்சலைத் தந்துவிடும் குறைபாடு சிலவற்றில் இருந்தன. பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் குறைந்த விலையில் உற்பத்தி செய்யமுடியும் என்பதால், கோடிக்கணக்கில் விற்கப்பட்டன. ஆனால், சுற்றுச்சூழலுக்குப் பாதகமாக இருப்பதால், பல நாடுகள் அந்தப் பொருளுக்குத் தடை விதித்தன. அதையடுத்து, மூங்கில்களால் செய்யப்பட்டபோது, மீண்டும் அதைப் பயன்படுத்த ஏதுவாக இருந்தது. ஆகவே, சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. தற்போது சுற்றுப்புறத்திற்குத் தீங்கு விளைவிக்காத ஸ்ட்ராக்களை உற்பத்தி செய்கின்றனர். ஸ்ட்ரா எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் பொருளாக இருப்பதால், இன்னும் நம்மைவிட்டுப் போகவில்லை. - லதானந்த்