மனிதனின் சோதனைக்கா விலங்கு?
“உனக்கு வந்தா ரத்தம். எனக்கு வந்தா தக்காளி சட்னியா?” என்று கோபமாகக் கேட்டான் பாலு. ''சின்ன அடிதானே பாலு'' என்று சொல்லிவிட்டேன். அதற்குத்தான் அவனுக்கு அவ்வளவு கோபம். இரண்டு பேரும் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்துகொண்டிருந்தோம். குறுக்கே நான்கைந்து நாய்க் குட்டிகள் (அவ்வளவு அழகான பப்பி எல்லாம்) வந்துவிட்டன. நான் மோதாமல் சமாளித்து கடந்துவிட்டேன். பாலு மோதாமல் இருக்க, சைக்கிள் கைப்பிடியை வளைத்ததில், சமநிலை தவறி விழுந்துவிட்டான். முழங்கையில் சின்ன சிராய்ப்பு. அதில் லேசாக ரத்தம் தெரிந்தது. பாலுவை சமாதானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, 'சின்ன அடிதானே' என்று சொன்னேன்.இதற்கு முன், எனக்கு அடிபட்ட ஒவ்வொரு சம்பவத்தையும் ஞாபகப்படுத்தி, அப்போதெல்லாம் நான் எப்படி அழுதேன், எப்படி எனக்கு பேண்டேஜ் போட்டார்கள், இத்தனைக்கும் அதெல்லாமே தக்களூண்டு அடிதான் என்று, தொடர்ந்து பொழிந்து தள்ளினான் பாலு. ஞாநி மாமாதான், நிலைமையை சமன்படுத்தினார். “நாய்க் குட்டிகளுக்கு காயம் இல்லாமல் சமாளித்ததுதான் முக்கியம். நீ உன் சிராய்ப்பை சொல்லி அங்கலாய்க்க முடியும். அதற்கு அடிபட்டிருந்தால், யாரிடம் போய் என்ன சொல்லி அழும்? அப்படி ஆகாமல் தவிர்த்திருக்கிறாய். அதற்கு சந்தோஷப்படு பாலு.” என்றார் மாமா. “அந்த நாய்க் குட்டி அடிபட்டிருந்தால், நிச்சயம் இன்றைக்கெல்லாம் உட்கார்ந்து அழுதிருப்பேன். நல்ல வேளை அப்படி ஆகவில்லை.” என்று பாலு சொன்னதும், வாலு கேட்டது. “ நாய்க்குட்டி மீது கீறல்கூட விழக் கூடாது என்று பதறுகிறீர்கள். இதே உலகத்தில்தானே நாய் சாகும் என்று தெரிந்தே, அதை ராக்கெட்டில் வைத்து அனுப்பினார்கள்?” என்று வாலு சொன்னதும், பாலு “அது என்ன சம்பவம்?” என்றான்.“சரியாக 59 வருடத்துக்கு முன்பு, நவம்பர் 3ம் தேதி ஒரு நாய் விண்வெளியில் இறந்தது. அதைத்தான் வாலு சொல்கிறது. அதற்கு முன்னால் சோவியத் யூனியனும், அமெரிக்காவும், மாறி மாறி விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எதிலும் உயிருள்ள மனிதர்களோ, விலங்குகளோ அனுப்பப்படவில்லை. மனிதனால் விண்வெளிக்கு சென்று, பத்திரமாகத் திரும்பி வர முடியுமா என கண்டுபிடிப்பதற்காக, முதலில் நாயை வைத்து அனுப்பியது சோவியத் யூனியன். 'ஸ்புட்னிக் -2' என்ற விண்கலத்தில், 'லைக்கா' என்ற நாய் அனுப்பப்பட்டது. அது அனுப்பிய அன்றைக்கே, விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறினால், வெப்பம் தாங்காமல் செத்துவிட்டது என்ற தகவலை, 2002ல் தான் வெளியிட்டார்கள். அதுவரை ஆக்சிஜன் குறைவால், அது ஆறாவது நாள் இறந்ததாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.” என்றார் மாமா.“லைக்கா மட்டும்தான் விண்வெளியில் அனுப்பப்பட்டதா? அதற்குப் பின், வேறு நாய்களை அனுப்பவில்லையா?” என்று கேட்டான் பாலு.“லைக்காவுக்கு முன்னரும் பின்னரும், நிறைய நாய்களை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் ராக்கெட்டில் அனுப்பியிருக்கின்றன. விண்வெளியை சுற்றிவரும் விதத்தில் முதலில் அனுப்பப்பட்டது 'லைக்கா' தான்.”“இதற்கென்றே நாய்களை வளர்ப்பார்களா?” என்று கேட்டேன்.“இல்லை. பெரும்பாலும், தெரு நாய்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஏன் என்றால், அவைதான் எந்த சூழலையும் சமாளிக்கும் திறமையோடு இருக்கும்.” என்றார் மாமா.“ராக்கெட்டில் அனுப்புவதற்கு முன்னால், அந்த நாயோடு நிறைய பழகியிருப்பார்கள், இல்லையா? அப்படி பழகினவர்களுக்கு, அது நிச்சயம் சாகப் போகிறது என்று தெரிந்தும், அனுப்பி வைக்க எப்படி மனசு வரும்?” என்று கேட்டான் பாலு. “கஷ்டமான விஷயம்தான். 'லைக்கா' வுக்கு கடைசியாக முத்தம் கொடுத்துத்தான் அனுப்பியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல; விண்வெளி ஆய்வுக்காக தன்னையே தியாகம் செய்த 'லைக்கா' வுக்கு, ஒரு நினைவுச் சின்னமும், சிலையும்கூட வைத்திருக்கிறார்கள்.” என்றார் மாமா.“லைக்கா மட்டும்தான் இறந்ததா? மீதி நாய்கள் உயிரோடு திரும்பிவிட்டனவா?”“இல்லை. 'லைக்கா' தான் சுற்றுப்பாதையில் பயணம் செய்ய முதலில் அனுப்பப்பட்ட நாய். மற்றபடி 1940கள், 50கள் வரை அனுப்பிய குரங்குகள், நாய்கள், பூச்சிகள், எலிகள் எல்லாவற்றிலும் பெரும்பாலானவை விண்வெளியில் இறந்துவிட்டன. அதிலிருந்தெல்லாம் கிடைத்த அறிவைக் கொண்டுதான், பின்னர் மனிதர்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்ப முடிந்தது.” என்றார் மாமா.“நம் வசதிக்காக, இப்படி பிராணிகளை சோதனை என்ற பெயரில் கொல்வது நியாயமா?” என்று கேட்டான் பாலு. உடனே மாமா சொன்னார், “இன்றைய உலகத்தில் மருத்துவம் முதல் தொழில்நுட்பம் வரை, பல துறைகளில் நமக்குக் கிடைத்திருக்கும் வசதிகள் பலவும், பிராணிகளை சோதனைசெய்து, கண்டறிந்த அறிவிலிருந்து உருவானவைதான். ரத்த தானம் இன்று மிக முக்கியமான விஷயம். இதன் ஆரம்பம் என்பது ஓர் எலியின் ரத்தத்தை எடுத்து, இன்னொரு எலிக்கு கொடுத்துப் பார்த்து சோதித்ததுதான்.”“எலிக்கு பிளட் குரூப் கிடையாதா?”“ உண்டு. ஆனால், ஆரம்பத்தில் அதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. 500 வருடங்களுக்கு முன்னால், எலிகளுடன் சோதித்தார்கள். 300 வருடங்களுக்கு முன்னால், மனிதர்களுக்கு ஆட்டு ரத்தத்தை செலுத்திக்கூட சோதித்திருக்கிறார்கள். அதன் பிறகுதான், ஒரு மனிதரின் ரத்தத்தை இன்னொரு மனிதருக்குக் கொடுத்துப் பார்த்தார்கள். அப்போதும் ரத்த வகைப் பிரிவு கண்டறியப்படவில்லை. இதனால், பல பேர் செத்திருக்கிறார்கள். ஆஸ்திரியா விஞ்ஞானி கார்ல் லாண்ட்ஸ்டெய்ர், 1901ல்தான் ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஓ என்றெல்லாம் வகைகள் இருப்பதை ஆராய்ந்து கண்டறிந்தார். நாய்களில் 13 வகை ரத்தப் பிரிவுகள். பூனைகளில் மூன்றுதான்.குதிரைகளில் எட்டு வகை. மாடுகளில் ஒன்பது வகை.” என்றார் மாமா.“ஆராய்ச்சியெல்லாம் சரி. சோதனை என்ற பெயரில் விலங்குகளைக் கொடுமைப்படுத்தலாமா?”, திரும்பவும் கேட்டான் பாலு. மாமா சிரித்தார். “இந்த சர்ச்சை பல நூற்றாண்டுகளாக இருந்துகொண்டே இருக்கிறது. நம்மைப் போலவே, வலியையும் மகிழ்ச்சியையும் உணரக்கூடிய எந்த பிராணியையும், சோதனைக்காக வதைக்கக் கூடாது என்பது ஒரு தரப்பு வாதம். உலகத்தில் இருப்பதிலேயே மகத்தான உயிரினம் மனிதன்தான். அதனால், மனிதர்களுக்கு உதவும் விதத்தில் மீதி எந்த உயிரை எப்படிப் பயன்படுத்தினாலும், தவறே இல்லை என்பது, இன்னொரு வாதம். இரண்டுக்கும் நடுவில் ஒரு சமரச வாதம் இருக்கிறது. முடிந்தவரை பாக்டீரியா, செடி போன்ற சின்ன ஜீவராசிகளை ஆய்வுக்குப் பயன்படுத்தலாம். மனிதரைப் போல, பாலூட்டும் பிராணிகளை மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். ஆய்வினால் கிடைக்கும் பயன் பெரிதா என்ற அடிப்படையே முக்கியமானது. பயன்படுத்தும் பிராணிகளுக்கும், மயக்க மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே சோதனை செய்து முடிவு அறிந்த அதே விஷயத்துக்கு, மறுபடியும் பிராணிகளை சோதிக்கக்கூடாது. இப்படி சில சமரசக் கருத்துகள் இருக்கின்றன.” என்றார் மாமா.நான், அந்தக் கட்சிதான் என்றேன். ஏற்கனவே பயாலஜி வகுப்பில், தவளையை அறுத்துப் பார்ப்பது போன்ற சோதனைகள் பல பள்ளிகளில் கைவிடப்பட்டுவிட்டன. அதற்கு மாடல்களைப் பயன்படுத்துகிறோம்.சோதனைக்குப் பயன்படும் பிராணிகள் எண்ணிக்கை குறைவுதான். நம்மோடு அன்றாட வாழ்க்கையில் உறவாடும் பிராணிகளின் எண்ணிக்கைதான் அதிகம். அவற்றை நாம் எப்படி நடத்துகிறோம் என்று முதலில் யோசிக்க வேண்டும்.“என்னை மரியாதையாகத்தான் நடத்துகிறீர்கள்.” என்று சான்றிதழ் கொடுத்தது வாலு.வாலுபீடியா 1: கினி பிக் (guinea pig) எனப்படும் சீமை வெள்ளைப் பெருச்சாளி, நிறைய சோதனைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், 'என்னை சோதனைப் பொருளாக்காதே' என்பதை ஆங்கிலத்தில் சொல்ல, 'don't make me a guinea pig' என்று பயன்படுத்துகிறார்கள்.வாலுபீடியா 2: விண்வெளிக்கு, நாய், குரங்கு தவிர, ஆமை, அணில், சிலந்தி என்று விதவிதமான உயிரினங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு சிலந்தி, விண்கலத்துக்குள்ளேயே வலை பின்னியிருக்கிறது. இரண்டு ரஷ்ய நாய்கள், தொடர்ந்து 22 நாட்கள் விண்வெளியை சுற்றிவிட்டு, உயிரோடு திரும்பியிருக்கின்றன.வாலுபீடியா 3: யார் ரத்தம் யாருக்குக் கொடுக்கலாம்? ஓ,- ஓ, ஏ, பி, ஏபி, ஏ,- ஏ, ஏபி. பி -பி, ஏபி. ஏபி - ஏபி. ஆசியாவில் மிக அதிகம் பேருக்கு இருப்பது ஓ பாசிடிவ் ரத்தம் (39%). மிக குறைவானது - ஏபி நெகடிவ் (0.1%)