பூச்சி நண்பர்கள்
பூச்சிகள் என்றாலே ஏதோ அருவருப்பான விவகாரம் என்று பலர் நினைப்பது உண்டு. ஆனால், பூச்சிகள் இன்றி மனித இனமும், பிற விலங்கினங்களும் வாழ முடியாது என்பதே உண்மை. மரம், செடி, கொடி மற்றும் பிற விலங்கினங்கள்தான், நமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன என்பது நமக்குத் தெரியும். செடி, கொடி, மரங்களில் காய் கனிகள் காய்த்து, நம் உணவு மேஜைக்கு வரவேண்டும் என்றால், மகரந்தச் சேர்க்கை நடக்க வேண்டும் அல்லவா? அந்த மகரந்தச் சேர்க்கை நடப்பதற்குப் பூச்சிகள் மிகவும் முக்கியம். நாம் சாப்பிடும் உணவில் மூன்றில் ஒரு பகுதி, பூச்சிகளால் நடைபெற்ற மகரந்தச் சேர்க்கையால் விளைந்தவை. பறவைகளுக்கு முக்கிய உணவாக இருப்பதும் பூச்சிகள்தான். பூச்சிகள், 'ஆர்த்ரோபோடா' (Arthropoda) எனப்படும் கணுக்காலி உயிரின வகையைச் சேர்ந்தவை. ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னரே, பூச்சி இனம் தோன்றிவிட்டது. இதுவரை அறியப்பட்ட விலங்கினங்களிலேயே, அதிக வகைகள் இருப்பது பூச்சி இனத்தில்தான். ஆவணப்படுத்தப்பட்ட பூச்சி வகைகளின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ 10 லட்சத்தைத் தொடுகிறது. நாம் இன்னும் கண்டறியாத பூச்சி வகைகள் இரண்டில் இருந்து மூன்று மடங்கு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எல்லாப் பூச்சிகளும் தீங்கு விளைவிப்பவை அல்ல. இதுவரை அறியப்பட்ட பூச்சி வகைகளில், ஐந்தே சதவீதப் பூச்சிகள்தான் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. மிச்சம் இருக்கும் 95 சதவீதப் பூச்சிகள் நன்மை பயக்கும் பூச்சிகளே!