எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறையை நீக்குவது சரியா?
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், 8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும், '8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யும் முறை'யை நீக்குவது சரியா என்று, செங்கல்பட்டு, லிட்டில் ஜாக்கி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம். மாணவர்கள் தங்கள் கருத்துகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.கா.ரூபன் சக்ரவர்த்தி: படித்தாலும் படிக்காவிட்டாலும், 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி என்ற முறை இருந்தால், அவர்களின் உயர் கல்வி நிச்சயம் பாதிக்கும். எப்படியும் பாஸாகி விடுவோம் என்பதால், அலட்சியமாகப் படிப்பார்கள். இதனால் மேல் வகுப்புகளில் பாடங்களைப் படிக்க முடியாமல் திணறுவார்கள். எனவே 'ஆல் பாஸ்' முறையை நீக்குவது சரிதான்.தி.ஹரிஷ் ராகவேந்தர்: கட்டாயத் தேர்ச்சி மூலம், ஒன்பதாம் வகுப்புக்கு வரும் மாணவர்கள், பாடங்களைப் படிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். இளம் பருவத்தில் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு எதிராக இது அமைகிறது. எல்லா மாணவர்களும் ஒழுங்காகப் படித்து தங்கள் கற்றல் திறனை உயர்த்திக்கொள்ள, ஆல் பாஸ் முறையை நீக்குவதே சிறந்தது. கா.பிரதீஷ்: ஆல் பாஸ் முறை நீக்கப்பட்டால், தேர்ச்சி பெறாத மாணவர்கள் படிப்பைக் கைவிட்டு, தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதனால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துவிடுவார்கள். படிக்கும்போதே நன்றாகப் படிக்கும் வகையில் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.வே.சந்தோஷ்குமார்: எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று இருப்பதால், படிப்பில் யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அலட்சியமாக இருப்பதால், 9-ம் வகுப்பு பாடங்களை எழுதவும், படிக்கவும் முறையான பயிற்சி இல்லாமல் போய்விடும். இதனால் அடுத்தடுத்த வகுப்புகளில் தேர்ச்சி பெறாமல் போகிறார்கள். ஆல் பாஸ் இல்லை என்றால் மட்டுமே அனைவரும் படிப்பார்கள்.ஜி.ராகுல்: அனைத்து மாணவர்களும் கட்டாயத் தேர்ச்சி என்பது, மாணவர்களை கவனக்குறைவுடன் படிக்கச் செய்யும். எப்படியும் பாஸ்தான் என்ற எண்ணம் படிப்பின் மீதான அக்கறையைக் குறைத்துவிடும். இதைத் தடுக்க கட்டாயத் தேர்ச்சி முறையை நீக்குவதை வரவேற்கிறேன். கா.சந்தோஷ்: எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தேவைதான். இதன் மூலம், மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்த மாட்டார்கள். தமிழகத்தில், 65 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களுக்குப் பாடங்களை நல்ல முறையில் கற்பித்து, அவர்களை முன்னேற்ற வேண்டும்.நே.கிரண்: அனைத்து மாணவர்களும் முழுத் தேர்ச்சி என்ற முறை, அந்த ஆண்டை முடிக்க மகிழ்ச்சி தந்தாலும், அடுத்து ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் எதுவுமே தெரியாமல் புரியாமல், தேர்வில் தோல்வி அடைகின்றனர். முறையாகப் படிக்க ஆல் பாஸ் முறையை நீக்க வேண்டும்.மா.சுபாஷ்: கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிக்க, மாணவர்களுக்கு அதன் மீது அக்கறை அவசியம் தேவை. ஆல் பாஸ் என்று இருந்தால், மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்து பின்தங்கிவிடுவார்கள். அதனால், எல்லோரும் பாஸ் என்பதை நீக்க வேண்டும் என்பது சரிதான்.ஜெ.அல் சமத்: எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு பாடத்தைக்கூட முழுமையாகப் புரிந்தவர்களாக இருப்பதில்லை. இதற்குக் காரணம் அனைவரும் தேர்ச்சி என்பதுதான். ஆல் பாஸ் முறை இல்லை என்றால், தேர்வு இருக்கிறது, தேர்ச்சிபெற வேண்டும் என்ற பயத்துடனும், அக்கறையுடனும் மாணவர்கள் படிப்பார்கள்.அ.சிவசக்தி: மாணவர்களுக்குப் படிப்பு முக்கியம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பார்கள். அதுபோல இளம் பருவத்தில் கற்க வேண்டியவற்றை கற்க வேண்டும். அனைவரும் தேர்ச்சி என்றால், அந்த எண்ணத்திலேயே பாடங்களை மாணவர்கள் படிக்காமல் போய்விடுவர். எனவே, ஆல் பாஸ் முறை இருக்கக்கூடாது.அ.அபி: கட்டாயத் தேர்ச்சி அவசியம் தேவை. அதே சமயம், பாடங்களை மாணவர்கள் ஒழுங்காகப் படிக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான், மாணவர்களும் அக்கறையுடன் படிப்பார்கள். கட்டாயத் தேர்ச்சி மூலம், ஏழை எளிய மக்கள் பள்ளிக் கல்வியை கைவிட மாட்டார்கள். அவர்கள் பெற்றோரும் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்கள்.சா.கீர்த்திகா: கல்வியின் தரம் முக்கியம். எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதோடு விட்டுவிடாமல், அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான தகுதியுடன் தேர்ச்சி பெறுவது போல பாடங்களை நடத்தி படிக்க வைக்க வேண்டும். ஆல் பாஸ் முறையை வைத்துக்கொண்டே இதைச் செய்யலாம்.