உள்ளூர் செய்திகள்

கண்ணா மூச்சி ரே! ரே!

கண்ணாமூச்சி விளையாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. வட்டாரங்களுக்கு ஏற்ப, விளையாட்டு முறைகளும், விதிகளும் மாறும். ஆனாலும், உற்சாகமும் மகிழ்ச்சியும் அதேதான்.இந்த வகை கண்ணாமூச்சி விளையாட்டுக்கு, மறைந்து கொள்வதற்கு வசதியாக கொஞ்சம் பெரிய இடம் தேவை. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம் என்றாலும், 6 முதல் 8 பேர் வரை என்றால் சுவாரசியமாக இருக்கும்.முதலில் கண்ணைப் பொத்திக் கொள்வது யார் என்பதை காயா, பழமா அல்லது சாட், பூ, த்ரீ போட்டு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கையில், ஒரு குச்சியைக் கொடுக்க வேண்டும்.இந்த விளையாட்டில் நேரடியாகக் கலந்து கொள்ளாத ஒருவர் (இவரை பாட்டுக்காரர் என அழைக்கலாம்), அவுட் ஆனவரின் கண்களைப் பொத்திக் கொள்ள வேண்டும்.கண் பொத்தப்பட்டவரின் முன்பு, மற்ற சிறுவர், சிறுமியர் சத்தமில்லாமல் கலைந்து நிற்க வேண்டும். நிற்கும்போது, கைகளை முன்பக்கம் நீட்டியபடி நிற்க வேண்டும்.இப்போது, பாட்டுக்காரர் ஒரு கையால் அவுட் ஆனவரின் கண்களைப் பொத்திக் கொண்டு, எதிரே வரிசையில் நிற்பவர்களின் கைகளில், அவுட் ஆனவரின் கையில் உள்ள குச்சியால் ஒவ்வொருவராக மெதுவாக தட்டிக் கொண்டே வர வேண்டும்.அப்போது பாட்டுக்காரர்,கண்ணா மூச்சி, ரே! ரே!எதிரே நிற்பது யாரே!கண்டுபிடிச்சுப் பாரே!என்று பாட வேண்டும்.அப்போது, கண்ணைப் பொத்திக் கொண்டவர் யாரேனும் ஒருவருக்கு நேராக குச்சியை நீட்டி, அவர் யார் என்பதை யூகித்து, பெயரைச் சொல்ல வேண்டும். உதாரணமாக நிற்பது ராஜா என்றால், தவறாக வசந்த் என்றோ, தேவிகா என்றோ சொல்லிவிட்டால், அந்தச் சிறுவன் அல்லது சிறுமி ஓடிப்போய் ஒளிந்து கொள்ளலாம்.அப்போது பாட்டுக்காரர்ராஜா, ராஜா ஓடிப்போ...!என்று சொல்லிப்பாடலாம்.இப்போது மீண்டும் வரிசையில் நிற்பவர்கள், கண்ணைப் பொத்திக் கொண்டவரைக் குழப்ப, சத்தமில்லாமல் கலைந்து வரிசை மாறி நிற்கலாம்.இதேபோல், மீண்டும் மீண்டும் பாட்டுப்பாடி கேள்வி கேட்டு, அனைவரும் ஓடி ஒளிந்து கொள்ளலாம். இப்போது கண்ணைப் பொத்தியிருப்பவரை பாட்டுக்காரர் விட்டுவிடலாம்.ஒளிந்து கொண்டவர்கள் அனைவரையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் யார் கண்டுபிடிக்கப்படுகிறார்களோ, அவரின் கண்ணைப் பொத்திக் கொண்டு மீண்டும் விளையாடலாம்.ஒருவேளை கண்ணைப் பொத்திக் கொண்டு பாட்டுப் பாடும்போதே, எதிரே நிற்பவரின் பெயரை சரியாகச் சொல்லி விட்டால், அவர் அவுட். அவரின் கண்ணைப் பொத்தி மீண்டும் விளையாடலாம்.- அரசு பழனிச்சாமி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !