உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்க!

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி ஹைட்ரஜன் (Hydrogen) நன்கு எரியும். ஆக்சிஜன் (Oxygen) எரிவதை ஊக்கப்படுத்தும். ஆனால் இது இரண்டும் கலந்த தண்ணீர் (H2O) ஏன் எரிவதில்லை.பிரணவ், 10ஆம் வகுப்பு, கோவை.உப்பில் உள்ள சோடியம் (Na) அல்லது குளோரின் (Cl) இரண்டும் உப்பு சுவை தருவதில்லை; ஆனால் இரண்டும் இணைந்து 'சோடியம் குளோரைடு' என்ற வேதிப்பொருள் ஆகும்போது சமையல் உப்பாகிறது. ஒரு வேதிப் பொருளின் வேதித் தன்மை அதில் உள்ள அணுக்களின் தன்மைகளின் கூட்டு மட்டும் அல்ல. இரண்டு அணுக்கள் இணைந்து புதிய மூலக்கூறு தோன்றும்போது தனித்தனியே அணுக்களில் உள்ள தன்மைகளுக்கு மாறான தன்மையை கூட்டுப் பொருள் பெறமுடியும். எரிதல் என்பது ஒரு வேதி நிகழ்வு. அதாவது ஆக்சிஜனேற்ற நிகழ்வு. ஹைட்ரஜன் எரிகிறது என்றால், ஹைட்ரஜனுடன் ஆக்சிஜன் இணைகிறது என்பதுதான் பொருள். ஏற்கனவே நீரில் ஆக்சிஜன் முழுமையாக உள்ளதால் அதில் மேலும் ஆக்சிஜனைப் பிணைக்க முடியாது. எனவே ஆக்சிஜனேற்றம் நடக்காது. எரிந்த பேப்பர் சாம்பல் மறுபடி எரிவதில்லை அல்லவா… அதுபோல ஏற்கனவே 'ஹைட்ரஜன் எரிந்து' உருவான நீர் அதற்கு மேலும் எரிவதில்லை.சிலருக்குக் கைகளில் ஆறு விரல்கள் உள்ளனவே... அது எப்படி?மு. ஷர்மிளா, 10ஆம் வகுப்பு, எலன் சர்மா பள்ளி, சோழிங்கநல்லூர்.'பாலிடக்டைலி' (Polydactyly) எனும் விரல் மிகைப்பு, ஒரு மரபணுப் பிசகு (Genetic Disorder). குரோமோசோம் எண் ஏழில் ஏற்படும் மரபணுப் பிசகு காரணமாக, கை அல்லது கால்களில் சிலருக்கு ஆறு விரல்கள் உருவாகின்றன. இந்த ஆறாவது விரலால் ஒரு பயனும் இல்லை. அதனால், பொதுவாக எந்தத் தொந்தரவும் இல்லை. வெளிநாடுகளில் இந்த ஆறாவது விரலை குழந்தைப் பருவத்திலேயே வெட்டி எடுத்துவிடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் 2010ல் பிறந்த அக்ஷய் சக்சேனா என்ற சிறுவன் மொத்தம் 34 விரல்களுடன் பிறந்து, 'அதிக விரல்களைக்கொண்ட நபர்' என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளான். இந்தச் சிறுவனுக்கு, கைக்கு ஏழு விரல்களும், இரு கால்களிலும் பத்துப் பத்து எனவும் மொத்தம் 34 விரல்கள் உள்ளன!பெடலை முன்புறமாக மிதித்தால் சைக்கிள் நகர்கிறது. பின்புறமாக மிதித்தால் சங்கிலி மட்டும் சுற்றுகிறதே, அது எப்படி?வினோத், 12ஆம் வகுப்பு, கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளி, சென்னை.சைக்கிளில் 'ஃப்ரீவீல்' (Freewheel) எனப்படும் அமைப்போடு சுழல் தண்டு பிணைந்து இருக்கும். எனவே சைக்கிள் உருண்டு சென்றாலும் பெடல் (Pedal) சுழலவேண்டும் என்ற அவசியம் இல்லை. பெடல் சுழலும்போது சைக்கிள் செயின் முன்னே சென்று சுழல் தண்டைச் சுழலச் செய்யும்படியான அமைப்பு இருக்கும். சைக்கிளின் பின்புறச் சக்கரத்தைப் பார்த்தால் அதில் சைக்கிள் செயின் பற்சக்கரத்துடன் பிணைக்கப்பட்டிருப்பது புலப்படும். படத்தில் உள்ளது போன்ற அமைப்பு, சைக்கிள் பெடல் செயினுடன் இருக்கும். A என்பது ஒரே ஒரு திசையில் சுழலும் பற்சக்கரம். B என்ற தண்டு முன்னும் பின்னும் நகர்வதற்கு C என்ற நழுவுதிருகி பயன்படுகிறது. கூடுதலாக D என்ற நழுவுதிருகி பற்சக்கரம் பின்புறமாக சுழன்றுவிடாமல் தடுக்கிறது. பெடலை முன்னோக்கி அழுத்தும்போது, செயின் பற்சக்கரத்தைப் பற்றி முன்னோக்கி சுழலச் செய்கிறது. பற்சக்கரத்தின் மீது நழுவு திருகி பற்றிக்கொண்டு சைக்கிள் சக்கிரத்துடன் இணைக்கும் சுழல்தண்டை செலுத்தும். ஆனால் பெடலை பின்னோக்கி அழுத்தினால், செயின் பின்னோக்கி இழுக்கும். அவ்வாறு இழுக்கும்போது நழுவுதிருகி பற்சக்கரத்தின் பற்களில் பிடிபடாமல் நழுவி விடும். இதற்கென்றே சைக்கிள் பற்சக்கரத்தின் பற்கள் நேராக இல்லாமல், ஒருபக்கம் சாய்ந்து வளைந்து முன்னோக்கி துருத்திய படி இருக்கும். ஓசோன் படலம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால், பூமி அழிந்துவிடுமா?S.ராஜேஷ், காஞ்சிபுரம்.பூமியில் இருந்து சுமார் 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம்வரை ஸ்டிராட்டோஸ்பியர் (Stratosphere) எனப்படும் வளிமண்டல மேலடுக்கு உள்ளது. இதில், ஓசோன் (O3) எனும் தானே உருவாகும் படலம் இருக்கிறது. 'குளோரோ புளூரோ கார்பன் (Chloro Fluro Carbon -- CFC) போன்ற வேதிப்பொருள்களின் பயன்பாட்டால் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு அதில் ஓட்டை ஏற்படுகிறது. அதன் வழியே உயிரினத்துக்கு ஊறு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமியை வந்தடைந்து கொண்டிருந்தன. ஓசோன் படலம் சிதைந்து வருவதை, ஹாலந்தைச் சேர்ந்த 'பால் குருட்சன்' முதலியோர் ஆராய்ந்து எச்சரிக்கை செய்ததன் விளைவாக 1970களில் விஞ்ஞானிகள், 'ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்' எனக் குரல் கொடுத்தனர். அதன் விளைவாக எழுந்த மக்கள் இயக்கத்தின் தொடர்ச்சியாக, உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து படிப்படியாக இத்தகைய வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்வது என சர்வதேச உடன்படிக்கை செய்துகொண்டது. கனடா நாட்டிலுள்ள 'மாண்ட்ரீல்' நகரில் 1987-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி, ஐ.நா. மாண்ட்ரீல் ஒப்பந்தம் எனப்படும் இந்த சர்வதேச உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக படிப்படியாக ஓசோன் படலத்தை சிதைக்கும் வேதிப்பொருட்கள் பயன்பாடு குறைந்தது. தற்போது ஓசோன் படலம் மறுபடி சீராகி வருகிறது என்ற செய்தியை சமீபத்தில் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஓர் உலக சவாலை நாம் அனைவரும் ஊர்கூடி நேர் செய்துவிட்டோம். மறுபடியும் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வேதிப்பொருட்களை நாம் பயன்படுத்தாமல் இருந்தால் வரும் காலத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.சிலருக்குக் குறுகியகால நினைவுகளும், சிலருக்கு நீண்டகால நினைவுகளும் மனதில் பதியக் காரணம் என்ன?அ.கபிலன், 9ஆம் வகுப்பு, சத்யசாய் மெட்ரிக், வேப்பூர், கடலூர்.நினைவுக் குறைபாடு இல்லாதவர்கள் தவிர அனைவருக்கும் நீண்டகால மற்றும் குறுகியகால நினைவு உள்ளது. இன்று காலையில் நாம் சாப்பிட்ட காலை உணவு என்ன என்பது நமக்கு நினைவு உள்ளது. ஆனால் பத்து நாளுக்கு முன்னர் சாப்பிட்டது சரியாக ஞாபகம் இல்லை. இது குறுகியகால நினைவு. இவ்வாறு ஒவ்வொரு செய்தியையும் நாம் நினைவில் வைத்திருந்தால் நமது மூளை ஓவர்லோட் ஆகிவிடும். எனவேதான் வேண்டிய சில செய்திகள், எடுத்துக்காட்டாக மொழி, சைக்கிள் ஓட்டும் திறன் போன்றவை நீண்டகால நினைவாகப் பதிந்து எப்போதும் நமக்குக் கைகொடுக்கிறது. மூளையில் பதியும் நினைவாற்றலில் இவ்வாறு இரண்டு வித நினைவுகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !