உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்க!

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. மழைத்துளிகள் உரசுவதால்தான் மழை பெய்யும்போது சத்தம் கேட்கிறதா?பா.வர்ஷா, 11ஆம் வகுப்பு, ஆர்.எம்.கே. மெட்ரிக். பள்ளி, ஆர்.எஸ்.எம்.நகர், கவரைப்பேட்டை.காற்றில் கையை வேகமாக அசைத்தால், மெலிதாகச் சத்தம் எழுவதைக் கேட்கலாம். காற்று அல்லது ஏதாவது ஊடகத்தில் எழும் அழுத்த அலைகளே சத்தம் உருவாகக் காரணம். இதன் பொருள், காற்றின் ஊடாக நகரும் அனைத்தும் சலனத்தை ஏற்படுத்துவதால் சத்தம் எழுகிறது. அப்படித்தான் மழைத்துளி காற்றில் விழும்போதும் சத்தம் எழும். அதை நம்மால் கேட்க முடியாததற்குக் காரணம், மழை பெய்யும்போது ஏற்படும் பல்வேறு வகை ஒலிகளின் இரைச்சல் சத்தமே!2. மரத்தின் வயதை எப்படிக் கணிக்கிறார்கள்? மரத்தை வெட்டாமலேயே அதை அறிய முடியுமா?ஸ்ருதி, 4ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.மரத்தின் வயதை அதனுடைய ஆண்டு வளையங்களைக் கொண்டுக்கான கணக்கிடலாம். அடி மரத்தில் காணப்படும் வளையம் போன்ற அமைப்புகள்தான் மரத்தின் வளர்ச்சிக்கான அடையாளம். ஒவ்வோராண்டும் ஒரு வளையம் கூடும். சில சமயங்களில் மரத்தை வெட்டி இந்த ஆய்வை மேற்கொள்ள முடியாது. அதற்காகவே இன்கிரிமென்டல் போரர் (Incremental borer) எனும் குழல் போன்ற துளைப்பான் கருவி உண்டு. அதனை மரத்தின் மையம் வரை செலுத்துவார்கள். பின்னர் அந்தக் குழலை வெளியே எடுத்தால் விளிம்பில் இருந்து மையம் வரை ஒரு குறுக்கு வெட்டு மரச்சட்டம் நமக்குக் கிடைக்கும். இதில் உள்ள வளையங்களின் கோடுகளைக் கணக்கிட்டு மரத்தின் வயதை அறியலாம். தோராயமாக மதிப்பீடு செய்வதற்கும் ஓர் எளிய முறை உள்ளது. ஆண்டுதோறும், குறிப்பிட்ட அளவு சராசரியாக மரம் வளர்ந்து அதன் தடிமன் பெருகும். எனவே, வளர்ந்த மரத்தின் அடியில் இருந்து நான்கரை அடி உயரத்தில் அதன் தடிமன், சுற்றளவை அளவிட வேண்டும். சுற்றளவில் இருந்து அந்த மரத்தின் விட்டத்தைப் பெறலாம். ஒவ்வொரு மரத்துக்கும் சராசரி வளர்ச்சி விகிதம் உண்டு. எ.கா: நன்கு வளர்ந்த மாமரங்களை வெட்டும்போது அதன் வளையங்களைக் கொண்டு வயதைக் கணக்கிடலாம்; அடிமரத் தடிமனை அளவிடலாம். பல மரங்களின் வயது, அடிமரத் தடிமன் ஆகியவற்றை அளந்து, மாமரத்தின் சராசரி வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிடலாம். அதை வைத்து ஆண்டுதோறும் சராசரியாக அடிமரம் எவ்வளவு பெரிதாகிறது என்ற சராசரியைக் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு கணக்கிடப்பட்ட சராசரி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு மற்றொரு மாமரத்தின் அடிமர விட்டத்தைப் பெருக்கினால், கிடைக்கும் விடையே அந்த மரத்தின் தோராய வயது.3. குளிர்பானங்களில் நச்சுப் பொருட்கள் சேர்க்கப்படுவது உண்மையா?டி.ஸ்வேதா, 12ஆம் வகுப்பு, ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக். பள்ளி, சேலம்.பூச்சி மருந்துகளில் உள்ள சில நச்சுப் பொருட்கள் பிரபல கோலா பானங்களில் இருப்பதாக ஓர் ஆய்வு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டது. அதற்காக, பூச்சி மருந்தில் உள்ள நச்சுப் பொருட்களைக் குளிர்பானத்தில் கலந்து, வேண்டுமென்றே விற்பனை செய்கிறார்கள் என்பதல்ல அதன் பொருள். வயல்வெளிகளில் பூச்சி மருந்து தெளிக்கிறார்கள்; அது மண்ணில் கலந்து கசிந்து, நிலத்தடி நீரை அடைகிறது. அந்த நிலத்தடி நீரைக் கொண்டு கோலா பானங்கள் தயாரிக்கின்றனர். அப்போது, இந்த நச்சுப் பொருட்கள் நம் உடலில் சேர்கின்றன என அந்த ஆய்வு கூறியது. மேலைநாடுகளில் நீர் அல்லது கோலா பானங்கள், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும்போது, போதுமான அளவு வடிகட்டித்தான் நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதே தரம், இந்தியாவில் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.4. பச்சை மற்றும் டாட்டூ (Tattoo) குத்தியவர்கள் ஏன் இரத்த தானம் செய்யக் கூடாது?சூ.இ.வருண் ஆதித்யா, 7ஆம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், மதுரை.பச்சை அல்லது டாட்டூ படங்களை கையில் வரைந்து கொண்டால் இரத்த தானம் செய்யக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. பச்சை குத்திக்கொண்ட முதல் ஆறு மாதங்கள் மட்டுமே இரத்த தானம் செய்ய இந்தியாவில் தடை உள்ளது. ஏனெனில், அந்த ஊசிகளின் வழியே கிருமிகள் புகுந்திருக்கலாம். அவர் இரத்த தானம் செய்யும்போது, மற்றவருக்கும் அந்தக் கிருமிகளால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, பச்சை குத்தியவர்களும் இரத்த தானம் செய்யலாம். இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு மாத்திரை உட்கொள்பவர்களின் இரத்தம், தானமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் ஓராண்டு வரை இரத்த தானம் செய்யக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !