உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்க!

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. சில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி?கே.முருகேஷ் ராஜ், விவேகானந்தா வித்யாலயா, மீஞ்சூர்.சாவே இல்லாத உயிரினம் டர்ரிடோப்சிஸ் டோஹ்ரினி (Turritopsis dohrnii) எனும் ஒரு வகை ஜெல்லி மீன் என்கிறார்கள். பிறப்பு இருந்தால் மரணமும் இருக்கும் என்பது எல்லா உயிர்களுக்கும் பொருந்தாது. ஆனால், பல செல் உயிரிகளில் இது சாத்தியம் இல்லை. நாம் நம் தாய் வயிற்றில் கருவானபோது, முதலில் வெறும் ஒரே ஒரு செல்லாகவே இருந்தோம். அந்த செல்தான் பாக்டீரியாபோல இரட்டிப்பாகப் பல்கிப் பெருகியது. குறிப்பிட்ட கட்டத்தில் ஒவ்வொரு செல்லும் ஏதாவது ஓர் உறுப்புச் செல்லாக மாறிவிட்டது. இதுதான் பாக்டீரியாவுக்கும் நமக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம்.மற்ற ஜெல்லி மீன்களைப் போலவே டர்ரிடோப்சிஸ் டோஹ்ரினி ஜெல்லி மீனும் லார்வா புழு நிலையிலிருந்து வாழ்வைத் தொடங்குகிறது. முதிர்ந்த தாய் வெளியிடும் லார்வா புழு, கடலின் அடியில் சென்று எங்காவது பற்றிப் பிடித்துக் கொள்ளும். அந்த லார்வாவிலிருந்து பற்பல பாலிப்கள் உருவாகின்றன. பாலிப்கள், ஜெல்லி மீனின் பல்வேறு உடற்பாகங்களாக வளர்கின்றன. அதன் முதிர்ச்சி நிலைக்கு முன் ஆபத்து ஏற்பட்டால், தன் வளர்ச்சிப்போக்கைத் திசைதிருப்பி பின்நோக்கி வளரும். அதாவது பிறந்த குழந்தை மறுபடி கருவாக மாற்றம் கொள்வதுபோல. இவ்வாறு இந்த ஜெல்லி மீன் மாறுவதற்கு அதன் செல்களில் சிறப்புத் தன்மை இருக்கிறது. இதன் ரகசியம் இன்னமும் புரியாத புதிர்தான். இந்த ரகசியத்தை அறிந்துகொண்டால் மனிதர்களின் நினைவு, மறதி போன்ற பல நோய்களைக் குணப்படுத்திவிடலாம் என கருதி, ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், வேறு ஒரு மீன் வந்து ஜெல்லி மீனைச் சாப்பிட்டுவிட்டால் அந்த ஜெல்லி மீன் மடிந்துவிடும். இதுபோல பல்வேறு வகையில் இந்த ஜெல்லி மீன் மடிந்துவிடும் என்றாலும், இவற்றால் பல ஆண்டுகள் இளமையுடன் வாழமுடியும்.2. பராமரிப்பின்றியே பனை போன்ற மரங்கள் வளர்வது எப்படி? பா.விஸ்வபரத், 6ஆம் வகுப்பு, செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.வளர்ப்புத் தாவரங்கள் மற்றும் விலங்குகளைத் தவிர, எல்லா உயிரிகளும் மனிதன் துணை இல்லாமலே வாழ முடியும். வளர்ப்புத் தாவரங்களால், தானே விதையை உருவாக்கிப் பரவுவது கடினம். மனிதன் விதை தூவியே, அவை வளரவேண்டும்.ஆனால், இயற்கையில் விளையும் பனை போன்ற மரங்களுக்குப் பராமரிப்பு அவசியமில்லை. நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சி, தாதுச்சத்தை எடுத்து வளரும். தவறினால், இதன் விளைச்சல் செழிப்பாக இல்லாமல் போகலாம். மனிதன் பயிர்த்தொழில் செய்யும்போது, விளைச்சல் அமோகமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது.3. பசிபிக் பகுதிகளில், நில அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் ஏன் அதிக அளவில் ஏற்படுகின்றன?என். ஸர்வேஸ்வரன், 8ஆம் வகுப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா உயர்நிலைப் பள்ளி, கோவை.பூமியின் நடுவே, உருகிய இளகிய நிலையில் இரும்பு போன்ற பொருட்கள் உள்ளன. அதன் மேலே குழம்பு நிலையில் ஓர் அடுக்கு. அதற்கு மேலே முட்டையின் ஓடு போன்றது புவித்தட்டு. நிலம் மற்றும் கடல் பகுதிகள் எல்லாம் புவித்தட்டு மீதே உள்ளன. புவித்தட்டின் அடியில் குழம்பு நிலையில் பாறைகள் உள்ளன. அவற்றின் மீது வழுக்கியபடி, புவித்தட்டு நகர்ந்துகொண்டே இருக்கும். இரண்டு புவித்தட்டு சில்லுகள் ஒன்றையொன்று உரசினால் நிலநடுக்கம் அல்லது எரிமலை ஏற்படும்.பசிபிக் பெருங்கடலைச் சுற்றி இந்த எல்லைப் பகுதி இருக்கிறது. இதையே 'பசிபிக் எரிமலை வளையம்' என்பார்கள். வளையம் என்றாலும், இதன் உருவம் குதிரை லாடம் போலவே இருக்கும். இதன் நீளம் சுமார் 40,000 கி.மீ. இந்த வளையத்தைச் சுற்றி சுமார் 472 எரிமலைகள் உள்ளன என கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் இமயமலை பகுதியில்தான் இந்தியா மற்றும் சீனாவின் புவித்தட்டுகள் மோதுகின்றன. எனவேதான், அங்கே அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.4. புவிசார் குறியீட்டின் முக்கியத்துவம் என்ன?என். சங்கரேஷ்வரி, 8ஆம் வகுப்பு, புனித தெரசா மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.திருப்பதி லட்டை உங்கள் ஊரில் தயார் செய்து, 'திருப்பதி லட்டு' என்றால் ஏற்க முடியுமா? சேலத்து மாம்பழத்தைக் கன்னியாகுமரியில் உற்பத்திசெய்து, அதைச் சேலத்து மாம்பழம் என்றால் ஏற்க முடியுமா? 1940ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் சுவை பாலின் தன்மை, செய்முறை சார்ந்தது அல்லவா? கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரூன் முதலியவையும் அந்தந்தப் பகுதியின் நிலம், நீர் ஆகியவற்றின் தன்மைக்கு ஏற்பவே அமையும். வேறு இடங்களில் தயாரித்தால் அதே சுவை, தன்மை இருக்காது. இதுபோன்ற புவிசார் தன்மைகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஏற்பட்ட ஒரு சர்வதேச அறிவுசார் சொத்துரிமையே, புவிசார் குறியீடு. அந்தப் பகுதியில் குறிப்பிட்ட முறையைக் கையாளாமல் யாராவது தயார்செய்து விற்றால் அது போலி, குற்றம் என ஆகிவிடும். காஞ்சிபுரம் பட்டுச்சேலை, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடிச் சேலை, திண்டுக்கல் பூட்டு, பத்தமடை பாய் போன்ற பல பொருட்கள் தமிழ்நாட்டில் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !