உள்ளூர் செய்திகள்

மதியும் மலையும்

புலவர்கள் சந்திரனை (நிலவை) பல்வேறு நிலைகளில் வைத்து பாடியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் காளமேகப் புலவர். சிலேடை பாடுவதில், வல்லவர். ஒரே பாட்டில் இரண்டு பொருள்கள் பொருந்துமாறு பாடுவதுதான் சிலேடை. இரட்டுற மொழிதல் என்றும் சொல்வார்கள். சந்திரனுக்கும் மலைக்கும் பொருந்துமாறு காளமேகப் புலவர் பாடிய சிலேடை இதோ: 'நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்துசிலபோது உலாவுவதால் சென்று - தலைமேல்உதித்து வரலால் உயர்மா மலையைமதிக்கு நிகராக வழுத்து'.நிலவாய் விளங்குதலால் - நிலவு ஒளி வீசி அழகுற விளங்குகிறது, இது ஒரு பொருள். நிலத்தின் வாய்ப்பகுதிபோல் ('நில'வாய்) மலை விளங்குகிறது, இது மற்றொரு பொருள். நீள்வான் படிந்து - சந்திரன் நீண்ட நெடிய வானத்தில் படிந்திருக்கிறது. மலையும் நீண்டு தொடுவானத்தோடு ஒட்டியிருக்கிறது. சிலபோது உலாவுவதால் - சந்திரன் சில நேரங்களில்தான் வானத்தில் தோன்றும். போது என்றால் மலர். குறிஞ்சி உள்ளிட்ட சில மலர்கள், மலைகளில் மட்டுமே பூக்கும். சென்று தலைமேல் உதித்து வரலால் - சந்திரன் தலைக்கு மேலாகத் தோன்றி வருகிறது. மலையும் தலைக்கு மேலாக, உயர்ந்த நிலமெங்கும் தோன்றிப் பரவியிருக்கிறது.உயர் மாமலையை மதிக்கு நிகராக வழுத்து - மதி என்றால் சந்திரன். மேற்கண்ட காரணங்களால் உயர்ந்த மாமலையைச் சந்திரனுக்கு நிகராகக் கருதப்படும், என்கிறார்.- தமிழ்மலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !