உள்ளூர் செய்திகள்

என் பின்னால், என் அம்மா!”

கிராமத்தில் தனக்குத் தெரிந்த நடனத்தை ஆடி வந்த சிறுவன், சுயமுயற்சியாலும், ஆர்வத்தாலும் சென்னையின் கலாக்ஷேத்ரா நடனப்பள்ளியில் சேர்ந்து சாதனை புரிந்திருக்கிறான்.கோவளம் அருகே, மீனவ குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே தந்தையை இழந்து, அம்மாவின் வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவர் காளி வீரபத்ரன். நடனத்தின் மேல் தீராத ஆசை, அந்தச் சிறுவனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது.கிராமத்தில், தொலைக்காட்சியைப் பார்த்து நடனம் பழகியவருக்கு, தற்போது சர்வதேச மவுசு. உலக நாடுகளிலுள்ள பல முக்கிய அமைப்புகள் இவருடைய தேதியை கேட்கின்றன. பரதம், நாட்டுப்புற நடனங்கள் என, ஒருசேர கலாக்ஷேத்ராவில் கற்று, தன்னுடைய லட்சியங்களை நோக்கி பயணிக்கிறார் 24 வயது இளைஞர் காளி வீரபத்ரன். யூத் ஸ்பிரிட் அவார்ட், நடனத்தில் உயரிய அறக்கட்டளைகளின் கல்வி ஊக்கத்தொகைகள், கலாக்ஷேத்ராவின் சிறந்த மாணவர் என்ற அங்கீகாரம் ஆகியவற்றைப் பெற்று, நடனத்தில் பல சாதனைகளைப் படைத்துவரும் காளியிடம் பேசியதிலிருந்து...''சிறுவயதில் அப்பா இறந்துவிட்டதால், அம்மா, பாட்டி ஆகியோரின் அரவணைப்பில் வளர்ந்தேன். அன்றாட உணவிற்குக்கூட உழைக்க வேண்டிய நிலையில் குடும்பம் இருந்தது. எனக்கு நடனம் மிகவும் பிடிக்கும். தொலைக்காட்சியைப் பார்த்து, நானே தெரிந்த அளவில் நடனம் ஆடக் கற்றுக்கொண்டேன். பள்ளி இறுதியாண்டு முடித்த பின், தக்ஷின்சித்ராவில் நடனப்பயிற்சியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது.அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள்தான், என்னை கலாக்ஷேத்ரா வரை கொண்டு வந்து சேர்த்தது. என்னுடைய நடனத்தைப் பார்த்த சாயா சந்திரா என்பவர், முறையாக நடனம் பயில அறிவுறுத்தினார். என்னுடைய குடும்பச் சூழல் தெரிந்ததால், அவருடைய உதவியால் நடனம் பயின்றேன். வெளி உலகம் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும், என்னுடைய ஆசைக்கு அம்மா தடை சொல்லவில்லை. நடனம் படித்தால், எதிர்காலம் என்னவாகும் என்று தெரியாத நிலையிலும்கூட, என் அம்மா எனக்கு உறுதுணையாக இருந்தார்.எவ்விதப் பின்னணியும் இல்லாத என் மீது, நம்பிக்கை வைத்தவர்களை தலை நிமிர்த்த வேண்டும் என, ஓயாமல் பயிற்சி செய்தேன். கலாக்ஷேத்ராவில் சேர்ந்த புதிதில், நான் ஆடுவது நடனம் இல்லை என்பதை புரிந்துகொண்டேன். நடனத்தைப் படிக்கும்போது, இசை அறிவும் முக்கியம். ராகங்கள், தாளங்கள், இசை வரிகள் என அதன் நுணுக்கங்களை கற்றேன். நாட்டார் நடனங்களும், பரதம், கதகளி என, பல ஊர் நடனங்களும் அறிமுகமாயின.பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சென்று நடனமாடுகிறேன். என்னுடைய தேர்வில் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்று, பள்ளியில் வழங்கப்படும் உதவித்தொகையும் பெற்றேன். லீலா சாம்சன்தான் என் முன்மாதிரி.அவருடைய நடன ஆளுமையைக் கண்டு வியந்திருக்கிறேன். நாட்டுப்புற நடனங்கள், பரதம் என அனைத்தும் ஒருசேர கற்றுக்கொடுக்கும் நடனப்பள்ளியை தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம். கலையின் மீது நம்பிக்கை இருக்கும் எவராலும், நடனத்தை கற்றுக்கொள்ள முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்க என்னால் இயன்றவிதத்தில் பணி செய்வேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !