உள்ளூர் செய்திகள்

பாறைகளால் ஆன புற்று

மண்களால் அமைந்த கரையான் புற்றுகளை நாம் பார்த்திருப்போம். அதுபோலவே பாறைக் குகைகளின் தரைப்பகுதியில் உருவாகும் புற்றுதான் 'புற்றுப் பாறை' (Stalagmite - ஸ்டாலாக்மைட்) எனப்படுகிறது. பாறைக் குகைகளின் மேற்பகுதியில் இருக்கும் இடுக்குகளின் வழியாகக் தரையில் கசியும் நீருடன் கலந்த தனிமங்களால் இது உருவாகிறது. கரையான் புற்றுபோல தரையிலிருந்து இது மேல் நோக்கி வளரும். பாறைக் கசிவில் இருந்து சொட்டும் தனிமம் கலந்த நீர் மேலும் மேலும் விழுந்து படிவுகளாகி புற்றுப்பாறையாக உருமாறுகிறது. புற்றுப்பாறை பழுப்பு நிறப் பிசின், எரிமலைக் குழம்பு, கனிமங்கள், களிமண், கரித்தூள், மணல் இவற்றால் ஆனது. குகைப் பாறைக் கசிவுகள் தரையை எட்டாமல் பாறையோடு ஒட்டியபடியும் இறுகிவிடும். பார்ப்பதற்கு ஆலமரத்தின் விழுதுகளைப் போலத் தோற்றமளிக்கும் இவை விழுதுப் பாறை எனப்படுகிறது. பாறைகளின் தன்மை, அதில் உள்ள கனிமங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, புற்றுப் பாறைகள் அடையாளம் காணப்படுகின்றன.சுண்ணாம்புக் கற்களால் ஆன பாறைகளில் இருந்து உருவாகும் சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறை, குகைக் கனிமப் புற்றுப்பாறை, எரிமலைக் குழம்பு புற்றுப்பாறை, பனிக்கட்டி புற்றுப்பாறை என, பல வகைகள் உள்ளன. பாறைக் குகைகளின் தரைப் பகுதியில் உள்ள மண்ணின் தன்மையோடு கலந்து இவை வெவ்வேறாக வகைப்படுத்தப்படுகின்றன. எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகும் புற்றுப்பாறை விரைவாக சில நாட்களிலேயே உருவாகிவிடுகின்றன. பிறவகைப் புற்றுப் பாறைகள் உருவாகப் பல ஆண்டுகள் ஆகும். அந்தமானில் உள்ள 'பரட்டாங்' (Baratang) என்ற தீவின் பகுதியில் சுண்ணாம்புக் கல் புற்றுப்பாறை உள்ளது.- அ.ஆனந்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !