உள்ளூர் செய்திகள்

வலி மிகுதல் பகுதி- 22: அன்றி, இன்றி - கட்டாயம் வலி மிகும்

வினைச்சொற்களில் குறிப்பு வினைமுற்று என்று ஒரு வகை இருக்கிறது. தெரிநிலை வினை, குறிப்பு வினை என்று வினைச்சொற்களை வகைப்படுத்துகின்றனர். 'இருக்கிறது' என்பது தெரிநிலை வினைமுற்று. 'இல்லை' என்பது குறிப்பு வினைமுற்று. இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? தெரிநிலை வினைமுற்றில் திணை, பால், காலம் போன்றவை வெளிப்படையாகத் தெரியும். 'இருக்கிறது' என்னும் சொல், நிகழ்காலத்தைக் காட்டுகிறது. 'இல்லை' என்பதில் காலம் தெளிவாகத் தெரியவில்லை.செய்தி இருக்கிறது, செய்தி இருந்தது, செய்தி இருக்கும் என்று முக்காலத்தையும் உணர்த்தும்படி தெரிநிலை வினைமுற்றுகள் உருவாகின்றன. 'செய்தி இல்லை' என்று காலத்தைக் குறிக்கும் இடைநிலைகள் இல்லாமல், குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுகின்றன. அல், இல் ஆகிய எதிர்மறைப் பொருட்களை உணர்த்தும் வேர்ச்சொற்களைக் கொண்டு அல்லை, இல்லை ஆகிய குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுகின்றன. வினைமுற்று என்று ஒன்று இருக்குமானால், அங்கே வினையெச்சமும் இருக்க வேண்டுமே! ஆம். அன்றி, இன்றி ஆகிய இரண்டு சொற்களும், குறிப்பு வினையெச்சச் சொற்கள்.அன்றி, இன்றி ஆகிய குறிப்பு வினையெச்சச் சொற்கள், தம்மை அடுத்து ஒரு வினைச்சொல் வருமாறு தோன்றும். அன்றி, இன்றி ஆகிய இவ்விரண்டு சொற்களும் எங்கே தோன்றினாலும், வருமொழி வல்லினம் என்றால், அங்கு வலி மிகும்.அருளன்றிக் கிட்டாது பொருளின்றிக் கூறுகிறான்அன்றி, இன்றி ஆகிய இரண்டு சொற்களும் தனியாகத் தோன்றுவதை விடவும், தமக்கு முன்னொட்டாக ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டே தோன்றும்.அன்றி என்ற சொல்லுக்கு நீயன்றி, நானன்றி, உனையன்றி, எனையன்றி என்று ஏதேனும் ஒரு முன்னொட்டு வந்துவிடும். இன்றி என்ற சொல்லுக்கும் அழகின்றி, அறிவின்றி, முடிவின்றி, நீரின்றி, மழையின்றி என ஏதேனும் ஒரு முன்னொட்டுச் சொல் உண்டு.அன்றி, இன்றி ஆகிய இவ்விரு சொற்களும் எங்கே வந்தாலும், அதை அடுத்து வரும் சொல், வல்லினத்தில் தொடங்கினால், அங்கே வலி மிகும்.உனையன்றித் தெரியாதுமரமன்றிக் காப்பது வேறில்லைஅருளன்றிப் பெறுவது ஏது?சுருக்கமாகச் சொல்வதென்றால் தெரிநிலை வினைமுற்று காலம் காட்டும். குறிப்பு வினைமுற்றில் காலம் காட்டுவது போல் எதுவும் இருக்காது.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !