நாக்கில் எச்சில் ஊறவைக்கும் தயிர் வடை
வடை, வடா, வடே என, எப்படி அழைத்தாலும் வடையின் சுவை தனித்துவமானது. சட்னி, சாம்பார், ரசம் என எதில் ஊற வைத்தாலும், வடையைத் திகட்டாமல் சாப்பிடலாம். தயிர் பிடிக்கும், கூடுதலாக வடை பிடிக்கும் என்றால் தயிர் வடை பிடிக்காமல் போகுமா? கொஞ்சம் புளிப்பான தயிரில், வடையை நன்றாக ஊறவையுங்கள். அதன் மேலாக பூந்தி, கொத்தமல்லி எல்லாம் தூவினால் வேண்டாம் என்று சொல்ல யாருக்கு மனம் வரும்? வடையைத் தயிரில் ஊறவைத்துச் சாப்பிடும் பழக்கம் வடஇந்தியாவில் முதன்முதலில் அறிமுகமானது.பருப்பை ஊறவைத்து, அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு பெருங்காயம், மிளகாய் வற்றல் எல்லாம் சேர்த்து மாவாக்கி எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான வடை தயார். இந்தியாவில் பண்டிகை, விழாக்காலங்களில் இந்தப் பலகாரம் மிகவும் பிரபலம். இப்போது சிற்றுண்டிக் கடைகள், தேநீர் கடைகள் என, எல்லா இடங்களிலும் வடை உண்டு. காலையில் ஏதாவது பேருந்து நிலையம், இரயில் நிலையம் அல்லது தேநீர் கடைப் பக்கம் நீங்கள் போகும்போது, வடையின் வாசனை நம்மை இழுக்கும். கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே “வடகா” என்கிற பெயரில் வடை தயாரிக்கப்பட்டதாக, சுத்ரா என்ற ஒரு சமய இலக்கியம் தெரிவிக்கிறது. 12-ஆம் நூற்றாண்டில் வடையை பாலில் ஊறவைத்துச் சாப்பிடும் பழக்கம் இருந்தது. இதை “மனசொல்லசா” என்ற சமஸ்கிருத நூல் குறிப்பிடுகிறது. மேலும், வடையைக் கஞ்சியிலும், தயிரிலும் ஊறவைத்துச் சாப்பிடும் பழக்கம் தோன்றியது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதும் தயிர் வடை பிரபலமாக இருக்கிறது.