அழகான அசைவ பிராணி!
வெள்ளை, பச்சை, நீலம், சிவப்பு, ஆரஞ்சு என பலவித வண்ணங்கள். கடலுக்குள் இருந்து வெட்டி எடுத்துக்கொண்டு வெளியே வைத்தால் மிக அழகான பூக்கள் என ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதன் உருவ அமைப்பை வைத்து கடல் சாமந்தி (Sea anemone) எனப் பெயரும் உண்டு. உண்மையில் இது ஒரு மாமிசம் உண்ணும் விலங்கு. மித வெப்ப மண்டலத்தில் உள்ள கடல்களில் கரையோரமாக வாழ்கிறது. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் இது வாழ்கிறது. தமிழ்நாட்டில் ராமேசுவரம், பாம்பன், அடையாறு ஆகிய இடங்களுக்குப் பக்கத்திலுள்ள கடல் பகுதிகளில் இவற்றைக் காணலாம். மரத்துண்டுகளின் மேலும், பாசிகளிலும், நத்தை ஓடுகளிலும் கடல் சாமந்தி ஒட்டிக்கொண்டிருக்கும். இதன் உடல் மூன்று பகுதிகளாகப் பிரிந்திருக்கும். இடைப் பகுதி சிறிய உருளை போல இருக்கும். இதன் மேல் உள்ள பகுதியே வாய் ஆகும். இதன் உட்புறத்தில் தடித்த சடைக்கற்றைகள் தொகுதிகளாக இருக்கும். அந்தப் பரப்பில் மீன்கள் நீந்தினால் சடைக்கற்றைகளில் இருந்து நஞ்சைப் பாய்ச்சி கொன்றுவிடும். பிறகு அவற்றை விழுங்கிவிட்டு எலும்புகளை வாய் வழியாகவே துப்பிவிடும். கடல் சாமந்தியின் கருவிலிருந்து புழுப்போன்ற லார்வாக்கள் பிறக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான கடல் சாமந்தியாக உருவாகும்.