மதிப்புமிக்க பொழுதுகள்
தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அலுவல் அறையில், அவருக்குப் பின்னால் ஓர் அறிவிப்புப்பலகை தொங்கிக் கொண்டிருக்கும். அதில், இப்படி எழுதி இருக்கும்:'தயவுசெய்து, தாங்கள் வந்த வேலைகளை இரண்டு நிமிடத்துக்குள் பேசி முடித்துக்கொண்டு போகுமாறு வேண்டுகிறேன்.' மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது சற்று முரட்டுத்தனமான அறிவிப்பாகத்தான் தோன்றுகிறது; ஆனால், இதன் பின்னணிக் காரணத்தைச் சிந்தித்தால், இந்த ஒழுக்கத்தின் நன்மைகள் புரியும்.நாள்தோறும் நம் ஒவ்வொருவருக்கும் கிடைப்பது அதே இருபத்து நான்கு மணிநேரங்கள்தான். அதில் தூங்கியது, சாப்பிட்டது, குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிட்டது, தனிப்பட்ட வேலைகளைச் செய்ததுபோக, மீதமிருக்கிற நேரத்தில்தான் நம்முடைய அலுவல்களைக் கவனித்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கிற நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதுதானே அறிவார்ந்த செயல்?ஆகவே, நம்முடைய வேலை தொடர்பாக, நாம் ஒருவரைக் காணச் செல்கிறோம் என்றால், அவரிடம் ஓரிரு முகமன் சொற்களைக் கூறி நலம் விசாரித்துவிட்டு, நம்முடைய தேவையைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும், அதில் அவருக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால், உரிய தகவல்களைச் சொல்லி விளக்கவேண்டும். நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும், அதற்கு ஒப்புதல் பெற்றுக்கொண்டு, நன்றி கூறி வெளியேற வேண்டும். இதன்மூலம், குறைந்த நேரத்தில் வேலை நிறைவடையும்.அப்படியில்லாமல், தேவையில்லாத விஷயங்களை வளவளவென்று பேசிக்கொண்டிருந்தால், நம்முடைய நேரமும், நம்மைப்போல் இன்னும் பலருக்கு உதவவேண்டிய அவருடைய நேரமும் வீணாகும்.நம்மிடம் ஒருவர் உதவி கேட்டு வருகிறார் என்றால், அவர் நம்மிடம் சுருக்கமாகப் பேசவேண்டும், நம் நேரத்தை வீணாக்கக்கூடாது என்றுதானே நாம் நினைப்போம்? அதேபோல்தான் நாம் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும்.இந்தக் கண்ணோட்டத்துடன்தான் கி.ஆ.பெ.விசுவநாதம் அந்த அறிவிப்பை எழுதியிருக்க வேண்டும். 'அதைக்கண்டு பலர் திடுக்கிட்டுப் போவதுண்டு' என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய மா.சு.சம்பந்தன் குறிப்பிடுகிறார். பிறர் தன்னுடைய நேரத்தை மதிக்கவேண்டும் என்று எதிர்பார்த்த கி.ஆ.பெ.விசுவநாதம், தானும் பிறருடைய நேரத்தை மிகவும் மதித்தார். அவர் கலந்துகொள்கிற கூட்டங்களுக்கெல்லாம் சரியான நேரத்துக்குச் சென்றுவிடுவார். ஒப்புக்கொண்ட தலைப்பில் ஒப்புக்கொண்ட நேரத்துக்குள் சரியாகப் பேசிவிட்டுத் திரும்புவார். சொற்பொழிவுகளின்போது மக்களுடைய முகக்குறிப்பைக் கவனிக்கிற அதே நேரத்தில், கடிகார முட்களின் மீதும் அவருடைய கவனம் இருக்கும் என்கிறார் மா.சு.சம்பந்தன்.நேரம் விலைமதிப்புமிக்க ஒரு சொத்து. அதைச் சரியாகப் பயன்படுத்துவதற்குக் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற அறிஞர்கள் நமக்குக் கற்றுத்தருகிறார்கள்.- என். சொக்கன்