உள்ளூர் செய்திகள்

ஸ்ஸ்ஸ்ஸ்... சிஸ்லர்!

தற்போது, உணவகங்களில் கிடைக்கும் உணவு வகைகளுள் ஒன்று, சிஸ்லர் (Sizzler). நாவில் நீர் ஊறவைக்கும் மணத்தோடு, புகையை வெளியிட்டுக்கொண்டு, மரச் சட்டத்தில் பொருத்திய இரும்புச் சட்டியில் உணவு மேஜைக்கு வரும். சிஸ்லர் என்றால், 'கவர்ச்சி மிக்க நபர்' என்று பொருள். இந்த உணவு பலரையும் கவர்வதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்தியாவில், 1963இல் தான் சிஸ்லர் உணவு அறிமுகமானது. மும்பையில் ஃபிரோஸ் ஈரானி என்னும் பார்ஸிக்காரர் இதை அறிமுகப்படுத்தினார். தன் மனைவியுடன் சேர்ந்து எக்ஸெல்சியர் சினிமா பகுதிக்கு அருகில், 'தி சிஸ்லர்' என்ற பெயரில் ஓர் உணவகத்தைத் தொடங்கினார். ஜப்பானிய உணவுமுறையான, டெப்பன்யாகி என்பதன் அடிப்படையில் அவரது தயாரிப்புகள் இருந்தன. ஸிஸ்ஸ்ஸ்ஸ் என்ற ஓசையுடன் சூடாகப் பரிமாறப்பட்ட சிஸ்லர் உணவு, மக்களை வெகுவாக ஈர்த்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்காவில் அறிமுகமாகி பிரபலமானது. சிஸ்லரில் சைவம், அசைவம் என இரண்டுமே கிடைக்கும். காய்கறிகள், இறைச்சிகள், அரிசிச் சோறு என விதவிதமான வகைகளிலும் பரிமாறப்படும். அதைப்போலவே சமையலுக்கு வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு சாஸ்களுடன் பரிமாறப்படுகிறது. பலவிதமான நுணுக்கமான செயல்முறைகளுக்குப் பிறகு, எண்ணெய் அல்லது வெண்ணெயுடன் தண்ணீரைச் சேர்த்து மரச்சட்டம் பொருத்திய இரும்புச் சட்டியில் அவற்றை நன்கு சூடாக்குவார்கள். அதனால்தான் சிஸ்லர் பரிமாறப்படும்போது புகை, மணம், ஒலி என, அனைத்தும் வருகின்றன.மற்ற உணவு வகைகளுக்கும், சிஸ்லருக்கும் முக்கியமான வேற்றுமை ஒன்றுண்டு. ஏனைய உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பாத்திரங்களில் இருந்து வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி எடுத்து வந்து தட்டுகளில் கொடுப்பார்கள். ஆனால், இதைத் தயாரித்த பாத்திரத்தையே எடுத்து வந்து நேரடியாகப் பரிமாறப்படும். இது புரதம், கொழுப்பு மற்றும் கால்சியம் நிரம்பிய உணவு. எனவே, இதை ஓர் ஆரோக்கியமான உணவாகவே பலரும் கருதுகின்றனர். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், சிஸ்லர் சுவை, இடத்திற்கு இடம் மாறுபடும். ஜப்பான், இத்தாலி, இந்தியா, சீனா என, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கைமணம் உண்டு. அடுத்தமுறை சிஸ்லர் உணவை சுவைத்துப் பாருங்கள். - லதானந்த்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !